You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹஜ் புனித பயணம் : மெக்கா வரும் வெளிநாட்டினரை ஏழு மாதங்களுக்கு பின் அனுமதித்த சௌதி அரேபியா
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த பின்னர், அதாவது சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதிக்குள் வெளிநாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000 யாத்ரீகர்கள் உம்ரா யாத்திரை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மெக்கா மசூதியின் மையத்தில் அமைந்துள்ள காபாவை சுற்றி வர யாத்ரீகர்களுக்கு அனுமது வழங்கப்பட்டது.
காபாவை நோக்கித்தான் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நாள்தோறும் வழிபடுகிறார்கள்.
ஒவ்வொரு இஸ்லாமியரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது, தன்னால் இயலும் பட்சத்தில் இங்கு வரவேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. இங்கு வரும் இஸ்லாமியர்கள் காபாவை எதிர் கடிகாரச் சுற்றில் ஏழு முறை வலம்வருகிறார்கள்.
கொரோனா காரணமாக வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு இங்கு கடந்த ஏழு மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
கிராண்ட் மசூதியின் மையத்தில் உள்ள இஸ்லாத்தின் புனிதமான தலமான காபாவைச் சுற்றி வர அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, வெளிநாட்டு யாத்ரீகர்கள் சௌதி அரேபியாவுக்கு வந்த பின்னர் மூன்று நாட்கள் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுபோல தனிமனித இடைவெளி உள்ளிட்ட வழிக்காட்டு நெறிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, சௌதி அரேபியாவை சேர்ந்தவர்கள் கடந்த அக்டோபர் மாதம் முதல் மெக்காவில் அனுமதிக்கப்பட்டனர். சௌதியில் படிப்படியாக பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதை தொடர்ந்து அந்த நாடு அரசாங்கம் படிப்படியாக அங்குள்ள மசூதிகளையும் திறந்து வருகிறது.
ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகம் தரும் தகவல்களின்படி செளதியில் கொரோனாவால் 347656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,420 பேர் பலியாகி உள்ளனர்.
செளதியில் அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கம், படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு படியாகவே, இப்போது மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன.
கீழே பகிர்ந்துள்ள படம் மெக்காவில் யாத்ரீகர்கள் திரண்டிருக்கும் கோப்புப் படம்.
பிற செய்திகள்:
- நடிகர் ரஜினிகாந்துடன் ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு - அரசியல் நிலைபாட்டில் மாற்றமா?
- அமெரிக்க தேர்தல் 2020: வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய பகுதிகள் எவை தெரியுமா?
- கொரோனா வைரஸ்: தொற்று நோய் நிபுணர் மீது சினம் கொண்ட டிரம்ப் - இதுதான் காரணமா?
- பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவை தகர்த்தது சென்னை - 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
- "அமெரிக்காவில் இனவெறி அதிகரிக்க டிரம்ப்தான் காரணம்" - அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :