நடிகர் ரஜினிகாந்த் - ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு - அரசியல் நிலைபாட்டில் மாற்றமா?

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

நடிகர் ரஜினிகாந்துடன் ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி சந்தித்து பேசினார். அரசியல் நிலைப்பாடு, உடல் நலம் குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

அந்த நாளிதழ் பின்வருமாறு விவரிக்கிறது:

நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தவேளையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகிய கடிதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் "அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் ரஜினிக்கு நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விவரிக்கப்பட்டு இருந்தது.

இந்த கடிதம் உண்மையா? இல்லையா? என்ற சர்ச்சை கிளம்பிய நிலையில், அதற்கு ரஜினிகாந்தே தனது ட்விட்டர் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த கடிதத்தில் கூறப்பட்ட மருத்துவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை என்றும், தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்" என்றும் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் சிலர் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு முன்பு குவிந்து, அவர் அரசியலுக்கு வர அழைப்பு விடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகுந்த நேரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது தான் அவரது ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விஷயமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேற்று இரவு 7 மணியளவில் நேரில் சந்தித்தார். அப்போது ரஜினியின் உடல் நலம், அரசியல் சூழல்கள், அரசியல் செயல் திட்டங்கள் குறித்து இருவரும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

கே.பி. அன்பழகனுக்கு வேளாண் துறை ஒதுக்கீடு, கொரோனாவில் இருந்து மீண்ட மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வேளாண் துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் சனிக்கிழமை காலமானார். இந்த நிலையில், துரைக்கண்ணு வகித்திருந்த துறைகள் கே.பி. அன்பழகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று அன்பழகனுக்குக் கூடுதல் பொறுப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒதுக்கியிருப்பதாக அவரது மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாளிதழின் மற்றொரு செய்தியில், கொரோனாவில் இருந்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மீண்டார் என கூறப்பட்டுள்ளது.

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் கடந்த மாதம் 22-ஆம் தேதி மதுரை அருகேயுள்ள தொப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பின் காரணமாக அவர் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினார்.

அவர் விரைவில் நலம்பெற வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப்-4 பணியில் சேர்ந்த பிஎச்டி, எம்ஃபில் பட்டதாரிகள்

10-ம் வகுப்பு கல்வித் தகுதி கொண்டகுரூப்-4 பணியில் 2 பிஎச்.டி. பட்டதாரிகள், 123 எம்.ஃபில். பட்டதாரிகள் சேர்ந்திருப்பது தகவல் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ்.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த 2018, பிப்.11-ல் நடத்தப்பட்டது. 10-ம்வகுப்பு தேர்ச்சியை அடிப்படை கல்வித் தகுதியாகக் கொண்ட இத்தேர்வை பிளஸ் 2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்.ஃபில்., பிஎச்.டி.பட்டதாரிகள் ஏராளமானோர் எழுதினர்.

இந்நிலையில், திருச்சியை சேர்ந்த பி.சுமித்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்,குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கல்வித் தகுதி விவரங்களை டிஎன்பிஎஸ்சியிடம் கேட்டிருந்தார். அவருக்கு டிஎன்பிஎஸ்சி சார்பு செயலரும், தகவல் அதிகாரியுமான எஸ்.தர் அளித்துள்ளபதிலில், ''2018-ல் நடத்தப்பட்டகுரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற2 பிஎச்.டி. பட்டதாரிகள், 123 எம்.ஃபில். பட்டதாரிகள், 1,722 முதுகலைபட்டதாரிகள் வெவ்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :