You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆணுறை விற்பனை மலேசியாவில் ஏழு மடங்கு அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் மலேசியாவின் முன்னணி ஆணுறை தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக இணையம் வழியிலான விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று 'கேரக்ஸ்' நிறுவனத்தின்
தலைமைச் செயல் அதிகாரி கோ மியா கியாட் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததை அடுத்து நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"இதனால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல இயலாது. வீட்டிலும் செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லை. எனவே மக்களுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில், படுக்கையறை நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுகிறார்கள்."
"குறிப்பாக குழந்தை பெற்றுக்கொள்ள இது உகந்த நேரம் என்று இளம் தம்பதியர் நினைக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது," என்று ஆணுறை விற்பனை அதிகரித்ததற்கான காரணங்களில் ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார் கோ மியா கியாட்.
மலேசியாவில் இயங்கி வரும் கேரக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் 500 கோடி ஆணுறைகளை உற்பத்தி செய்து வருகிறது. உலகில் பயன்படுத்தப்படும் ஆணுறைகளில் ஐந்தில் ஒன்று இந்நிறுவனத்தின் தயாரிப்பாகும்.
கடந்த மார்ச் மாதம் மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதும் தொடர்ந்து பத்து தினங்களுக்கு இதன் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் 10 கோடி ஆணுறை உற்பத்தி பாதிக்கப்பட்டது.
கேரக்ஸ் போன்ற நிறுவனத்தின் உற்பத்தி திறன், அளவு பாதிக்கப்படும் பட்சத்தில் உலகளவில் ஆணுறை பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும், இதனால் கடும் விளைவுகளை மனித குலம் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை முன்பே எச்சரித்துள்ளது.
இந்நிலையில் அதிகரித்து வரும் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக மலேசிய அரசு மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தி வருகிறது.
எனினும் கடந்த மார்ச் மாதம் ஆணுறை விற்பனையில் ஏற்பட்ட சரிவு போல் அல்லாமல், தற்போது நேரடி மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் ஆணுறை விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாகச் சொல்கிறார் கோ மியா கியாட்.
இப்போதும் கூட ஆன்லைன் விற்பனையைக் காட்டிலும் வழக்கமான சில்லறை சந்தை மூலமான விற்பனையே அதிகம் என்கிறார் அவர். அதே சமயம் இணையம் வழியிலான விற்பனையை அதிகரிக்க விற்பனைக் குழுக்களை தீவிரமாகச் செயல்பட வைத்திருக்கிறது கேரக்ஸ் நிறுவனம்.
மலேசியாவில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கடைகள் மூலமாகவே ஆணுறைகள் அதிகம் விற்பனையாகின்றன. ஆனால் உண்மையில் இந்த கடைகள் ஆணுறைகளை அதிக விலைக்கு விற்கின்றன.
சீனாவில் 50 விழுக்காடு ஆணுறைகள் இணையம் மூலம் தான் வாங்கப்படுகின்றன. இந்த விடயத்தில் சீனாவை விட வெகு தூரத்தில் உள்ளது மலேசியா. அதே சமயம் இணைய விற்பனை பெரும் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்பும் சூழலும் மலேசியாவில் நிலவுகிறது என்பதை கவனிக்க வேண்டும் என்கிறார் கோ மியா கியாட்.
மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் ஆணுறை தயாரிப்புக்காக தேவைப்படும் மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதில் அதன் உற்பத்தியாளர்களுக்கு தொடக்கத்தில் சிக்கல் எழுந்தது. தென் தாய்லாந்தில் இருந்து இறக்குமதியாகும் திரவ 'லேடக்ஸ்' மலேசியா வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டது.
அதே போல் ஆணுறைகள் வைக்கப்படும் சிறு அட்டை உறைகளை அச்சடித்து தரும் நிறுவனங்களும் மூடப்பட்டதால் தயாரிப்பு நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொண்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: