மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு: 20 ஆண்டுகள் கடந்தும் தமிழகம் சிக்கலை சந்திப்பது ஏன்?

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டுமானங்கள் பலவும் பராமரிக்கப்படாமல், கழிவு நிரம்புவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதில் சிக்கல் நீடிப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

2001-2003 வரை கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை தமிழகம் சந்தித்ததை அடுத்து, வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்கள் அமைப்பதை தமிழக அரசு கட்டாயமாக்கியது. இருந்தபோதும், அந்த கட்டுமானங்கள் கவனிப்பின்றி, கழிவுகள் தேங்குவதால், வீடுகள் மற்றும் பொது இடங்களில் சாதாரண மழைக்கு கூட சாலைகளில் தண்ணீர் தேங்குவதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மழை நீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தினால், வறட்சி மற்றும் வெள்ளத்தை மாறி மாறி சந்திக்கும் அவசியம் ஏற்படாது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற நகரங்களில் அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்கள் பயன் தருகின்றனவா என பிபிசி தமிழ் விசாரித்தது.

திருச்சி நகரில் கடந்த பத்து ஆண்டுகளாக மழை நீரை மட்டுமே குடிநீராக பயன்படுத்தி வருபவர் சமூக ஆர்வலர் சுப்புராமன். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12,000 முதல் 15,000 லிட்டர் வரை மழை நீரை வீட்டில் சேகரித்து, தனது குடும்பத்தார் மற்றும் அலுவலக பணியாளர்கள் குடிப்பதற்கு அதை பயன்படுத்துகிறார்.

''எங்கள் வீட்டில் தனியார் தண்ணீர் கேன் வாங்குவதில்லை. மழைநீர்தான் எங்களுக்கு குடிநீர். அதை தவிர்த்து சேகரிக்கப்படும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் நீரை, சமையல், துணி துவைப்பது, கழிவறை பயன்பாடு ஆகியவற்றுக்கு வைத்துக்கொள்வோம்.

ஒரு வேளை தண்ணீர் குறைவாக இருந்தால் நிலத்தடி நீரை பயன்படுத்துகிறோம். குடிப்பதற்கு தூய்மையான நீரை வான்மழை தருவதால், தண்ணீரை விலை கொடுத்து வாங்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்,''என்கிறார் சுப்புராமன்.

திருச்சியில் பொது இடங்களில் அரசு அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பராமரிக்கப்படவில்லை என தொடர்ந்து ஆதாரங்களுடன் ஆட்சியாளர்களிடம் எடுத்துக்கூறுபவர் சுப்புராமன். ''சுஜித் என்ற குழந்தை 2019ல் ஆழ்துளை குழாயில் விழுந்து இறந்த பின்னர்,பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை குழாய்களை எப்படி மழை நீர் சேகரிப்பு கட்டுமானமாக மாற்றலாம் என விரிவான திட்டத்தை அரசாங்கத்திடம் அளித்தேன். ஒரு சில குழாய்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. பெரிய மாற்றம் தேவை. பதிலுக்காக காத்திருக்கிறேன். என்னை தேடி வருபவர்களுக்கு என் வீட்டை உதாரணமாக காட்டி மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்கிறேன்,''என்கிறார் சுப்புராமன்.

இந்திய நகரங்களில், நிலத்தடி நீர் தட்டுப்பாடு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலை 2019ல் மத்திய நீர்வள அமைச்சகம் வெளியிட்டது. அந்த பட்டியலில் மதுரை நகரம் இடம்பெற்றதை அடுத்து, மதுரை மாநகராட்சி மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்கள் மீது கவனம் செலுத்தியது. ஓர் ஆண்டாக எடுத்த முயற்சியால், மதுரை நகரப் பகுதியில் உள்ள 83 சதவீத கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக வெறும் 43 சதவீத கட்டடங்களில் மட்டும்தான் மழைநீர் சேகரிப்பு கட்டுமானம் இருந்தது என்று மாநகராட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மதுரையில் உள்ள 33 ஊருணிகளை தூர்வாரி, நீர் சேகரிக்க தனியார் நிறுவனங்களுடன் மதுரை மாநகராட்சி பணியாற்றி வருகின்றது.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் இந்திய நகரங்களில் ஒன்று கோவை. இங்கு மாநகராட்சி பகுதியில் உள்ள சுமார் 30 சதவீத கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்கள் பராமரிப்பின்றி இருப்பதால், கட்டட உரிமையாளர்களுக்கு ,அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதோடு, 40 சதவீத கட்டடங்களில் மழை நீர்சேகரிக்கும் வசதி பயன்பாட்டில் இருப்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழை என்ற இரண்டு காலங்களிலும் நல்ல மழை பொழிவை பெற்றுள்ள கோவை நகரத்தில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்கதையாக இருப்பதாக கூறுகிறார் கோவை நகரவாசி ரேவதி.

''சிறுவாணி நீரை கோவை மக்கள் பெரிதும் நம்பியிருந்தனர். தற்போது கோவை நகரத்தின் விரிவாக்கம், அதிகரித்துள்ள மக்கள் தொகை, சிறுவாணி உட்பட நீராதாரங்களில் ஏற்பட்ட மாசுபாடு குடிநீர் தட்டுப்பாட்டில் கொண்டுவந்து நிறுத்திவிட்டது. எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளது. ஆனால் அதனை முறையாக தூய்மை செய்வதில்லை. நாங்கள் வாடகை வீட்டில் இருப்பதால், கேள்வி கேட்க முடியவில்லை. பல குடியிருப்புகளில் வசதி இருந்தாலும் பராமரிப்பு இல்லை,''என்கிறார் ரேவதி.

சென்னை நகரத்தில் கடந்த வாரம் ஒரு நாள் கனமழை பெய்த நேரத்தில் பல சாலைகளிலும் தண்ணீர் தேங்கி இருந்த காட்சியை சென்னைவாசிகள் படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். பலரும் சென்னையில் 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏற்பட்ட அனுபவங்களை நினைவு கூர்ந்தனர். சென்னை நகரத்தின் பல கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தாலும், அவை பராமரிப்பின்றி காணப்படுவதாக கூறுகிறார் மழை மனிதர் என்று அறியப்படும் சேகர் ராகவன்.

''2003ல் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு கட்டுமானம் இருந்தால்தான் புதிய கட்டடங்களுக்கு ஒப்புதல் தரவேண்டும் என கட்டுப்பாடு விதித்தார். உறுதியாக அமல்படுத்தவேண்டும் என நினைத்தார். தற்போது மழைநீர் சேகரிப்பு கட்டுப்பாடுகள் அறிமுகமாகி 20வது ஆண்டை நெருங்கிவிட்டோம். 2019ல் சென்னை நகரம் சந்தித்த குடிநீர் பற்றாக்குறை உலகளவில் விவாதிக்கப்பட்டது. தற்போதும் சாலைகளில் மழை நீர் தேங்குகிறது என்பது மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பதை எடுத்துரைக்கிறது. அரசு அலுவலங்களில் கூட அக்கறை குறைவாக உள்ளது,''என்கிறார் சேகர் ராகவன்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், படிப்படியாக ஒவ்வோர் ஆண்டும் மழைநீர் தேங்கும் பகுதிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதாக தெரிவித்துள்ளார்.

''மாநகராட்சியின் தொடர் நடவடிக்கையால் மழை நீர் தேங்கும் இடங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. 'சென்னை மாநகராட்சியில் கடந்த 2014-ம் ஆண்டு 851 இடங்களில் பருவமழைக் காலங்களில் மழை நீர் தேங்கி இருந்தது. 2017 ஆம் ஆண்டு மழைக் காலங்களில் 306 இடங்களில் சென்னை மாநகரில் மழை நீர் தேங்கி இருந்தது. சென்னை பெருநகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் மண்டலம் 7,11 மற்றும் 12இல் உலக வங்கி மூலமாக ரூ.1,200 கோடி நிதி உதவி பெற்று 406 கிலோ மீட்டர் நீளம் மழை நீர் வடிகால் கட்டப்பட்டது. மேலும், விடுபட்ட, தூர்ந்து போன மழை நீர் வடிகால் 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு 412 இடங்களில் கட்டப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையில் 3 முதல் 10 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது,'' என தெரிவித்துள்ளார்.

அதோடு சென்னை மக்கள் வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்பு குறித்த புகார்கள் தெரிவிக்க அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. (அந்த எண்கள்: 044 2538 4530, 044 2538 4540). 24/7 இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு மையம் (1913) ஒன்றையும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என ஆணையர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: