"அமெரிக்காவில் இனவெறி அதிகரிக்க டிரம்ப்தான் காரணம்" - அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்கள்

    • எழுதியவர், சொர்ணம் சங்கரபாண்டி, வாஷிங்டன் டி.சி.
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இன்னும் ஒரு சில நாட்களில் உலகின் சக்திவாய்ந்த நாட்டின் அதிபர் யார் என்று தெரியவரும்.

பல்வேறு கலாசார மக்களை கொண்ட அமெரிக்கா சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது இனவெறி பிரச்சனை. இதற்கும் யார் அதிபராக தேர்ந்தெடுக்கப்படப் போகிறார் என்பதற்கும் நிச்சயம் தொடர்பில்லாமல் இருக்க முடியாது.

இனவெறி பிரச்சனை எப்படி தேர்தலில் எதிரொலிக்கும் என்பது குறித்து அமெரிக்க வாழ் தமிழர்கள், பிபிசி தமிழிடம் பேசினார்கள்.

யார் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், குடியேறிகள் அல்லது கறுப்பினத்தவர்களின் நிலை மேம்பட வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் அவர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்தனர்.

"வெளிநாட்டவர் குறித்து பலமுறை இழிவாக பேசியுள்ளார் டிரம்ப்"

"அமெரிக்காவில் இனவாத பிரிவினைகள் அதிகமானதற்கு அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய காரணம்," என்கிறார் தனியார் நிறுவன ஊழியரான திவ்யன் கருணாகரன்.

வெளிநாட்டவர்கள் குறித்து பலமுறை இழிவாக பேசியுள்ளார் டிரம்ப் என்று கூறும் கருணாகரன், சமீபத்திய ஆண்டுகளை எடுத்துப் பார்த்தோம் என்றால் அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்.

"சிறு வயதில் இருந்தே அமெரிக்காவில் இனவாத பிரச்சனைகளை புரிந்து வளர்ந்தவன் நான். ஆனால், கடந்த மே மாதம் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம், இனவாதம் அமெரிக்காவில் எப்படி மேலோங்கி இருக்கிறது என்பது பற்றிய நினைப்பு எனக்கு கவலையை ஏற்படுத்தியது.

ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக இருக்கும் அமைப்பு ரீதியான இனவாதம் எங்கள் மீது இல்லாவிட்டாலும், ஒருசில நேரங்களில் தமிழர்கள் கூட இதுபோன்ற இனவாத பிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறார்கள் ஆனால் ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்திற்கு பின்புகூட டொனால்ட் டிரம்ப் அமைப்பு ரீதியாக இருக்கும் இனவாதம் குறித்தோ, சம்பவம் குறித்தோ எதுவும் பேசவில்லை," என்கிறார் அவர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிலை மாறும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

`நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்`

டிரம்பின் இனவாத கருத்துக்களால் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் மேரிலாந்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி காவ்யா குமரன்.

"2019 கோடைக்காலத்தில் ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது டொனால்ட் டிரம்ப் இனவாத கருத்துகளை அதிகம் பதிவு செய்து வந்தார். அதில் பாதிக்கப்பட்ட பலரில் நானும் ஒருவர்."

"கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், நான் எங்கிருந்து வருகிறேன், என்ன மொழி பேசுகிறேன், என் பெற்றோர் எங்கிருந்து வந்தவர்கள், என்று கேட்க நான் துன்புறுத்தலுக்கு ஆளானேன். ஒரு வாடிக்கையாளர் என்னை கழிவறை வரை பின்தொடர்ந்து இந்த கேள்விகளை கேட்டுக் கொண்டு வந்தார்," என்கிறார் காவ்யா.

இந்த நாட்டில் சிறுபான்மையினர் மத்தியில் ஒரு அச்ச உணர்வு இருப்பதை நன்றாக உணர முடிகிறது என்றும் தெரிவிக்கிறார் இவர்.

"தற்போதைய இந்த நாட்டின் தேவை கொஞ்சம் மனிதாபிமானமும் மனிதத் தன்மையும்தான்," என்று மேலும் தெரிவிக்கிறார்.

"கறுப்பின பெண்கள் மீதும் தொடரும் வன்முறை"

முன்பெல்லாம் கறுப்பின ஆண்கள் மீதுதான் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தினார்கள். ஆண்கள்தான் கொல்லப்பட்டனர். ஆனால், இப்போது கறுப்பின பெண்கள் மீதும் வன்முறை தாக்குதல் தொடங்கியிருக்கிறது என்கிறார் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ மாணவி மாதவி சங்கர்

"நான் வாஷிங்டன் டி.சியில் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டு, ஓர் ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றுகிறேன். இங்கு வரும் நோயாளிகளிடம் நாங்கள் அவர்களது மனநலம் குறித்து கேட்பது வழக்கம். குறிப்பாக இந்த கோவிட் காலகட்டத்தில் அது அவசியமாகிறது.

அப்படி இருக்கையில் இங்கு வரும் நோயாளிகள் அதிகம் பேர் கறுப்பினத்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே அமெரிக்காவில் இருக்கும் நிறவெறி பிரச்சனை குறித்து பேசுகிறார்கள். நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் குறித்து பேசுகிறார்கள்.

குறிப்பாக தாய் ஒருவர் அவரது பதின்ம வயது மகள்கள் குறித்து பேசியது எனக்கு நினைவிருக்கிறது." என்கிறார் அவர்.

மேலும் "முன்பெல்லாம் கறுப்பின ஆண்கள் மீதுதான் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தினார்கள். ஆண்கள்தான் கொல்லப்பட்டனர். ஆனால், இப்போது கறுப்பின பெண்கள் மீதும் வன்முறை தாக்குதல் தொடங்கியிருக்கிறது. என் பெண் குழந்தைகள் தெரியாமல் தப்பு செய்தால்கூட அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது என கவலையுடன் கூறினார். அந்த தாயிடம் என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று கூட எனக்கு தெரியவில்லை." என்கிறார் மாதவி சங்கர்.

இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் தேவை என்பது மாதவி சங்கரின் கருத்து.

`மீண்டும் மீண்டும் தலைதூக்கும் இனவெறி`

"இந்தியாவில் காலங்காலமாக இருந்துவரும் சாதிக்கொடுமைகள் போல், இங்கும் நிறவெறி மீண்டும் மீண்டும் தலைதூக்கிவிடுகிறது." என்கிறார் வாஷிங்டனை சேர்ந்த ராசி சரவணபவன்.

"இந்தப்பிளவுகளை டிரம்ப் ஊதிப்பெரிதாக்கி அதன்மூலமாகத் தனக்கு ஓட்டுகளை அதிகப்படுத்தப் பார்க்கிறார். கறுப்பு இனத்தவரும் மீதமிருக்கும் சிறுபான்மையின வாக்காளர்களும் பெருமளவு திரண்டுவந்து வாக்களித்ததால், பைடன் வெற்றியடைய வாய்ப்பு இருக்கிறது." என்கிறார் இவர்.

`கறுப்பின மக்களின் வாக்குகள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும்`

அதிபர் டிரம்பிற்கு எதிராக Black Lives Matter இயக்கம் செயல்படுவதை உணர முடிகிறது என்கிறார் வாஷிங்டன் டிசியை சேர்ந்த மயிலாடுதுறை சிவா.

"Black Lives Matter என்ற பதாகையை ஏந்தி அமெரிக்கா முழுக்க பெரு நகரங்களில் சில மாதங்கள் முன்பு பல்வேறு பேரணிகள் நடந்தன.

அமெரிக்கா முழுக்க கிட்டதட்ட 20 பெரு நகரங்கள் மற்றும் 400 சிறு நகரங்களிலும் இந்த போராட்டம் நடந்தது. இது மிகப் பெரும் சம்பவமாக அப்பொழுது பேசப்பட்டது.

இன்னும் 5 நாட்களில் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த பிரச்சனை அனைத்தும் நிச்சயமாக வாக்குகளாக மாறும். ஆகையால் ஆளும் அதிபர் டிரம்பிற்கு எதிராக இந்த Black Lives Matter இயக்கம் செயல்படுவதை உணரமுடிகிறது." என்கிறார் அவர்.

அமெரிக்காவின் சிறப்புகள் இந்த நிகழ்வால் குறைந்துவிட்டன என்கிறார் மயிலாடுதுறை சிவா.

"உலக நாடுகளில் அமெரிக்கா மிகவும் முன்னேறிய நாடு, முற்போக்கு சிந்தனைகள் கொண்ட நாடு, உலகம் போற்றும் கல்வி நிறுவனங்கள், பெரும் தொழில் துறை நிறுவனங்கள் உள்ள நாடு. ஆனால் இந்த Black Lives Matter முன்பு இவை எல்லாம் அடிப்பட்டு விட்டது என தோன்றுகிறது.

சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கடந்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவில் வெள்ளை நிறத்தவர்களின் ஆதிக்கம் எப்படி அதிகரித்துள்ளது என்பதை உணர்த்துகிறது. இந்த நீதிபதிகள் அனைவரும் வாழ்நாள் முழுக்க இருக்கும் பதவி, இவர்கள் அனைவரும் வலதுசாரி சிந்தனையும், தீவர மத சிந்தனையும் உடையவர்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று." என்கிறார் இவர்.

மேலும், "மக்களிடம் மன ரீதியாக பெரும் பிரிவினையை ஏற்படுத்திவிட்டது இந்த ஆளும் அரசு. இந்த தேர்தலில் கறுப்பர்கள் மற்றும் குடியேறிகள் வாக்குகள் பெரும் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்." என்கிறார் இவர்.

`வெளிப்படையாக தெரியும் வெறுப்பு`

குடியேறிகள் மீதான வெறுப்பு அதிபர் டிரம்ப் காலத்தில் வெளிப்படையாக தெரிகிறது என்கிறார் மேரிலாந்தின் கொலம்பியாவை சேர்ந்த அரசு செல்லையா.

"அண்மையில் குடியேறிகளுக்குள் இருக்கும் சாதி அடிப்படை வெறுப்பும் வெளிவந்துகொண்டிருக்கிறது. 2009ம் ஆண்டிலிருந்து அமெரிக்க அரசால் குடியேறிகளுக்கு கொடுக்கப்பட்ட 17 லட்சம் H - 1B விசாக்களில் 65% இந்திய வம்சாவளியினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

Immigration status பெறுவதற்கு 1980 -2000 ஆண்டுகள் போல் இல்லாமல் தற்போது பல ஆண்டுகள் ஆகின்றன. இரு கட்சி ஆட்சியின்போதும் இதனில் பெரிய வேறுபாடு இல்லையெனினும், டிரம்ப் காலத்தில் - முறையான விசா காலக்கெடு முடிந்த உடன், இந்தியா திரும்பவேண்டிய கட்டாயம் உள்ளது.

முந்தைய ஆட்சிகளில், விசா கெடுமுடிந்தாலும் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கு இப்போதுள்ள ஆபத்தில்லை என எண்ணுகிறேன்," என்கிறார் அரசு செல்லையா.

"இந்திய, தமிழக இளைஞர்கள் - குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் பெரும்பாலும் ஜனநாயக கட்சியினரே. அவர்களில் கணிசமானோர் இடதுசாரியினர்.

இந்திய, தமிழக வாக்குகள் அமெரிக்க தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதாக அமையாவிடினும், பலப் பல இந்திய, தமிழ் இளைஞர்கள் , பெற்றோர்களைவிட அதிகமாக அமெரிக்க அரசியலில் களமிறங்க தயாராகிறார்கள் என எண்ணுகிறேன்.

கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவது, இந்திய வம்சாவளியினர் அமெரிக்கா மீது கொண்ட நம்பிக்கையையும் உரிமையையும் கூட்டியிருக்கிறது.

பொதுவாக டிரம்ப் ஆட்சி, இனவெறி தூண்டலுக்கு துணைபோகும் நிலை தெரிகிறது. இந்நிலையை வரும் தேர்தல் மாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும், பொதுவாக, அமெரிக்க நாட்டில் குடியேறிகள் கவனமாக இருக்கவேண்டும் என்பதே தற்போதைய நிலை." என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: