அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

ஆறரை பில்லியன் டாலர்கள் - 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு ஆன செலவு இது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் நாற்பத்து எட்டாயிரத்து நாற்பத்து நான்கு கோடியே, 86 லட்சத்து 59 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும்.

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு ஆகும் செலவில் மாற்றம் இருக்கலாம். எனினும் கோடிக்கணக்கில் இதில் பணம் செலவிடப்படும்.

சரி. இவ்வளவு பணமும் எங்கு எதற்காக செலவிடப்படுகிறது? இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை பார்ப்போம்.

கடந்த 5 அதிபர் தேர்தல்களில் சராசரியாக, அதிபர் வேட்பாளர்களால் மட்டுமே 2 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட பணம், ஊடகங்களுக்காக மட்டும், அதாவது விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

இதில் முக்கியமானது தொலைக்காட்சி விளம்பரங்கள். அதே போல டிஜிட்டல் விளம்பரங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன. சமூக ஊடகங்களில் வாக்காளர்களை குறி வைத்து கோடிக்கணக்கில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

ஊழியர்களுக்கான ஊதியம்

2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளரான ஹில்லரி கிளின்டன், தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு சுமார் 85 மில்லியன் டாலர்கள் சம்பளமாக வழங்கியிருக்கிறார்.

அடுத்து பிரசாரம்

2016ல் டொனால்டு டிரம்ப் மற்றும் ஹில்லரி கிளின்டன் இருவரும் பிரசாரத்திற்காக உள்நாட்டில் பயணம் செய்ய தனித்தனியே சுமார் 45 மில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளனர். இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக பயணங்களுக்கு ஆகும் செலவு குறைந்திருக்கும்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

அடுத்து பிரசார ஆடைகள். டிரம்ப் பெயர், புகைப்படங்கள் கொண்ட டி-ஷர்டுகள், கேப்கள், இவையெல்லாம் மிகவும் பிரபலம்.

2016ஆம் ஆண்டு தேர்தலில், இதற்கு டொனால்ட் டிரம்ப், 3 மில்லியன் டாலர்களுக்கும் மேல் செலவழித்துள்ளதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்க குடிமக்கள் அதிபரை தேர்ந்தெடுக்கும் போது, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களையும் தேர்வு செய்வார்கள். இதற்காக நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். சமீபகால தேர்தல்களில் இதற்காக சுமார் 4 பில்லியன் டாலர்கள் செலவாகிறது.

சரி. இந்த பணம் எல்லாம் எங்கிருந்து வருகிறது?

இதில் பெரும்பாலான பணம் பிரசார நன்கொடையில் இருந்து வருகிறது. 2016 தேர்தலில் ஒவ்வொரு மூன்று தனிப்பட்ட நபர்களில் ஒருவர், 200 டாலர்கள் அல்லது அதற்கும் குறைவான டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் அமெரிக்க குடிமக்கள்.

ஆனால், பெரும்பகுதியான பணம், செல்வம் மிகுந்த நன்கொடையாளர்களிடம் இருந்து வருகிறது.

கடந்த தேர்தலில் 200க்கும் குறைவான மக்கள் குழு, சுமார் 1 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதில் பல இனத்தவர்களும் அடங்குவர்.

இதனைத்தவிர அதிபர் வேட்பாளர் மற்றும் அவரது கட்சியினரும் இணைந்து நிதித்திரட்டல் கூட்டங்களை ஒருங்கிணைப்பது உண்டு. இதில் மிக அதிகளவில் நன்கொடை கிடைக்கும்.

செல்வம் மிகுந்த நன்கொடையாளர்களுக்கு என்று தனியாக உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்படும். ஒரே இரவில் 10 பில்லியன் டாலர்கள் வரை நிதி திரட்டப்படும்.

பிரசாரத்திற்கான நன்கொடைக்கு என்று சில விதிகள் இருக்கின்றன. உதாரணமாக அமெரிக்கர்கள் மட்டும்தான் நன்கொடை செலுத்த முடியும். மேலும் தனிப்பட்ட நன்கொடைக்கு என்று கட்டுப்பாடுகள் உண்டு. வேட்பாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் நன்கொடையில் ஒருவர் 2,800 டாலர்கள் வரை மட்டுமே கொடுக்க முடியும். ஆனால், அக்கட்சியின் நிதித்திரட்டும் திட்டத்தின் கீழ் நன்கொடை வழங்குபவர்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் குறைவு.

2010ஆம் ஆண்டு முதல், சுயாதீன குழுக்கள், அரசியல் நடவடிக்கைகளுக்காக நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களிடம் இருந்து நிதி திரட்ட அனுமதி வழங்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

எனினும், இந்தக்குழுக்கள் நேரடியாக அதிபர் வேட்பாளரை தொடர்பு கொள்ள முடியாது.

மற்ற நாடுகளை போல தேர்தல் பிரசாரங்களுக்கு இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.

இந்நிலையில் அமெரிக்க தேர்தலுக்கு ஆகும் செலவு அதிகரித்து கொண்டே போகிறது.

2000ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு ஆன செலவைவிட, 2016ஆம் ஆண்டு தேர்தலுக்கான செலவு இரு மடங்கு அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பதவிக்கு ஆகும் செலவு குறைவாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? இதற்கு இந்தாண்டும் விதிவிலக்கல்ல.

குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர் America அதிபராவது எப்படி? | US Elections Explained in Tamil

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :