You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபுகுஷிமா அணு உலை விபத்து: கதிர்வீச்சு நீரை கடலில் விட முடிவு செய்துள்ள ஜப்பான் அரசு - வலுக்கும் எதிர்ப்புகள்
ஜப்பானின் சேதமடைந்த ஃபுகுஷிமா அணு உலையிலிருந்து வெளியேற்றும் கதிர்வீச்சு நீரைக் கடலுக்குள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
2011ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்த அணு உலையைக் குளிரச்செய்யப் பயன்படுத்தப்பட்ட நீரை எப்படி அகற்றுவது என பல்வேறு விவாதங்கள் நிலவின.
கடலுக்குள் கதிர்வீச்சு நீரை செலுத்துவதற்கு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும், மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் ஆனால் இவ்வாறாக வெளியிடுவதே ஆபத்தை குறைக்கும் வழி என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் இதுகுறித்து அரசு இறுதி முடிவை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
கதிர்வீச்சை குறைக்கும் விதத்தில் சுத்திகரிக்கப்பட்ட பத்து லட்சம் டன்னுக்கும் அதிகமான நீரை 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கடலுக்குள் செலுத்தவுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நீர் வெளியேற்றப்படும் முன், அதன் அடர் தன்மை குறைக்கப்படும் என்று ’யோமிரு ஷிம்புன்’ என்ற செய்தித்தாளில் செய்தி வெளியாகியுள்ளது. எனவே வழக்கத்தைவிட நீர் 40 சதவீத அளவு அடர்த்தி குறைவானதாக இருக்கும்.
ஆனால் இந்த முழு செயல்முறைக்கும் 30 வருடங்கள் வரை ஆகலாம் எனவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. இதுகுறித்து இந்த மாத இறுதியில் முடிவு எட்டப்படும் என ’க்யூடூ செய்தி முகமை’ தெரிவிக்கிறது.
நிலத்தடி நீர் மற்றும் மழை நீர் ஆகிய இரண்டும் சேர்ந்து மொத்தமாக நீரின் அளவு உயர்ந்து வந்ததால் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது.
அணு உலையிலிருந்து பல்வேறு கதிரியக்க ஓரிடத்தான்கள் (ஐசோடோப்) பல கடினமான முறைகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன.
ஆனால் ’டிரிடியம்’ என்னும் ஓரிடத்தான் மட்டும் அகற்ற முடியாத காரணத்தால் நீர் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நீரைத்தான் வெளியேற்றத் திட்டமிட்டுள்ளனர்.
வெள்ளியன்று ஜப்பானின் தொழில்துறை அமைச்சர், அணு உலையில் உள்ள நீரை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால் விரைவில் ஒரு முடிவு எட்டப்படும் என தெரிவித்தார்.
கடலில் கதிர்வீச்சு நீரைச் செலுத்துவது குறித்து சுற்றுச்சூழல் அமைப்புகள் நீண்ட நாட்களாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் இம்மாதிரியாக நீர், கடலில் செலுத்தப்பட்டால் மக்கள் மீன்களை வாங்கமாட்டார்கள் என கவலை தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் விஞ்ஞானிகள் சிலர், பசிபிக் பெருங்கடலில் நீர் செலுத்தப்பட்டவுடன் அது நீர்த்துப் போய்விடும் என்றும், டிரிடியம் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு குறைவான ஆபத்தையே விளைவிக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு என்ன நடந்தது?
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஜப்பானின் வட கிழக்கு கடற்கரை பகுதியில் 9.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து பெரும் சுனாமியும் ஏற்பட்டது.
ஃபுகுஷிமா அணு உலையிலிருந்து அணு கசிவு ஏற்படுவதைத் தடுக்கும் அமைப்புகள் நிலநடுக்கத்தில் தப்பித்தாலும், சுனாமியால் சேதமடைந்தன. அணு உலையை குளிரச்செய்யும் அமைப்பு பழுதடைந்ததால் அதனைத் தொடர்ந்து டன் கணக்கான கதிரியக்க பொருட்கள் வெளியாகின. 1986ஆம் ஆண்டு நடைபெற்ற செர்னோபிள் விபத்துக்கு பிறகு மிகப்பெரிய அணு உலை விபத்தாக இது கருதப்படுகிறது.
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 18,500 பேர் உயிரிழந்துவிட்டனர் அல்லது அவர்களை காணவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட தனி நபர்களுக்கும், வர்த்தகங்களுக்கும் பில்லியன் டாலர்கள் கணக்கில் இழப்பீடுகள் வழங்கப்பட்டன. மேலும் கடந்த மாதம் ஜப்பான் நீதி மன்றம் அரசு மற்றும் அணு உலையை நிர்வகித்த நிறுவனம் மேலும் 9.5மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஏற்கனவே வழங்கியிருந்த தீர்ப்பை உறுதி செய்தது.
பிற செய்திகள்:
- நீட் தேர்வில் சாதித்த ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகன் – சாத்தியமானது எப்படி?
- அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து: தொடரும் சர்ச்சை - என்ன நடக்கிறது?
- MI Vs KKR: ஏமாற்றிய தினேஷ் கார்த்திக்; ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி – முதலிடத்திற்கு முன்னேற்றம்
- கொரோனா வைரஸ்: ரெம்டெசிவீர் தடுப்பூசி போட்டால் உயிர் பிழைக்க முடியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: