You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரபு உலகின் முதல் அணு உலை அமீரகத்தில் தொடங்கியது: எச்சரிக்கையும், கொண்டாட்டங்களும்
அரபு உலகத்தின் முதல் அணு உலை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பரக்காவில் திறக்கப்பட்டுள்ளது.
கத்தாருக்குக் கிழக்கே பரக்காவில், வளைகுடா கடற்பகுதியில் இந்த அணு உலை அமைந்துள்ளது.
நான்கு உலைகளை கொண்ட இந்த பரக்கா அணு வளாகத்தில், முதல் அணு உலை மட்டும் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. தென் கொரிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அணு உலை அமைக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டே இந்த அணு உலை செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். பாதுகாப்பு பிரச்சனைகளின் காரணமாக இந்த அணு உலை இயக்கம் தொடங்குவது தாமதமானது.
எண்ணெய் வளம் மிக்க ஐக்கிய அரபு அமீரகம், தங்களது மின்சார தேவையில் 25 சதவீதத்தை இந்த அணு உலையை சார்ந்து இருக்கத் திட்டமிடுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திரத்திற்கு விண்கலம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகம் சூரிய சக்தியிலும் அதிகளவில் முதலீடு செய்ய உள்ளது.
பரக்கா என்றால் ஆசீர்வாதம் என்று பொருள்.
எரிசக்தித் துறை வல்லுநர்கள் இந்த அணு உலை குறித்து சில கேள்விகளை எழுப்புகின்றனர்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
சூரியசக்தி செலவு குறைவானதாகவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காததாகவும் இருக்கும் போது, அரசியல் பதற்றம் மற்றும் பயங்கரவாதம் நிலவும் இந்தப் பகுதியில் அணு உலை ஏன் என்ற கேள்வியை அவர்கள் முன் வைக்கிறார்கள்.
இந்த அணு உலையை அமைக்க கத்தார் எதிர்ப்பு தெரிவிக்கிறது. சுற்றுச்சூழலுக்கும், பிராந்திய அமைதிக்கும் இந்த அணு உலை அச்சுறுத்தல் என கூறுகிறது கத்தார்.
கத்தாருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் செளதி அரேபியாவுக்கும் இடையில் அரசியல் ரீதியாக முரண்கள் உள்ளன.
வளைகுடா பகுதி முழுவதும் ஏராளமான அரசியல் பதற்றங்கள் நிலவுகின்றன. அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு உள்ளான இரான், ஐக்கிய அரபு அமீரகத்தை விரோதமாகப் பார்க்கிறது.
சர்வதேச அணு ஆலோசனை குழுமத்தைச் சேர்ந்த பால் டோர்ஃப்மேன், "அணு சக்தி, அணு ஆயுதம் தயாரிக்கும் ஆற்றலை வழங்கும் என்பதால் வளைகுடாவின் புவிசார் அரசியல், அணு சக்தியை மிகவும் பிரச்சனைக்குரிய விஷயமாக மாற்றுகிறது," என்று கடந்த ஆண்டு கூறினார்.
வளைகுடா பகுதியில் கதிரியக்கம் தொடர்பான ஆபத்தை இது ஏற்படுத்தும் என்றும் இவர் எச்சரிக்கிறார்.
'முக்கிய மைல்கல்'
தங்கள் நாட்டின் அறிவியல் வளர்ச்சியின் முக்கிய குறியீடு இது என அணு உலையை கொண்டாடுகின்றனர் ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள்.
அமீரக அணு உலை கழகமும், கொரிய மின்சார கழகமும் இணைந்து இந்த அணு உலையை உருவாக்கி உள்ளன.
சர்வதேச அணு சக்தி முகமை, பரக்கா அணு உலைக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறது.
வளங்குன்றா வளர்ச்சிக்கான பாதையில் இது முக்கிய மைல்கல் என அபுதாபி இளவரசர் முகம்மது பின் ஜையத் அல் நஹ்யானும் பரக்கா அணு உலைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: