You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செய்தியில் கருத்து வேறுபாடு, ஊடக சாம்ராஜ்ஜியத்திலிருந்து வெளியேறிய நிறுவனர் மகன் ஜேம்ஸ் முர்டாக்
ஊடக சாம்ராஜ்ஜியத்திலிருந்து வெளியேறிய ஜேம்ஸ் முர்டாக்
சர்வதேச அளவில் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பியவர் ரூபர்ட் முர்டாக். ஊடகத் துறையில் இவர் கால் பதிக்காத நாடுகளே இல்லை எனும் அளவுக்கு இவரது சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்தது.
நியூஸ் கார்ப் எனும் அவரது ஊடக குழுமத்திலிருந்து, அவரது மகன் ஜேம்ஸ் முர்டாக் வெளியேறினார். தங்களது ஊடக நிறுவனம் எடுத்த சில முடிவுகளால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜேம்ஸ் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. ஆனால், குறிப்பாக அது எந்த முடிவு என தெரியவில்லை.
பருவநிலை மாற்றம் தொடர்பான செய்திகளை தங்கள் ஊடகங்கள் முறையாகக் கையாளவில்லை என முன்பே குற்றஞ்சாட்டி இருந்தார் ஜேம்ஸ்.
ரூபர்ட் முர்டாக்குகும் ஜேம்ஸுக்கும், கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் ரீதியாகக் கருத்து வேற்றுமை நிலவி வந்ததாகக் கூறுகிறார் பிபிசி வட அமெரிக்க செய்தியாளர் டேவிட் வில்லிஸ்.
ரூபர்ட் முர்டாக் டிரம்பை ஆதரிக்கும் போது, ஜேம்ஸ் முர்டாக் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் பிரசாரத்திற்கு லட்சக்கணக்கான டாலர்கள் செலவு செய்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி: அக்டோபர் மாதம் மக்களுக்கு செலுத்த தயாராகும் ரஷ்யா
ரஷ்யாவில் வரும் அக்டோபர் மாதம் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தச் சுகாதார அதிகாரிகள் தயாராகி வருவதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதலில் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறியுள்ளதாக ஒரு ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு, அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்த மாதம் ஒப்புதல் வழங்கும் என தகவல்கள் வந்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.
விரிவாகப் படிக்க:கொரோனா தடுப்பூசி: அக்டோபர் மாதம் மக்களுக்கு செலுத்த தயாராகும் ரஷ்யா
பஞ்சாபில் போலி மதுபானம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 86ஆக உயர்வு
பஞ்சாபில் போலி மதுபானம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 86ஆக உயர்ந்துள்ளது. இந்த இறப்புகள் அனைத்தும் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளன.
இதில் அதிகபட்சமாக டார்ன் தரனில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
விரிவாகப் படிக்க:பஞ்சாபில் போலி மதுபானம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 86ஆக உயர்வு
டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
சீனாவை சேர்ந்த டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்..
இத்தடை தொடர்பாக உத்தரவில் இன்று (சனிக்கிழமை) கையெழுத்திட உள்ளதாகச் செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.
சீனாவின் மிக பெரிய தொழில் நுட்ப நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் டிக் டாக் செயலியை நடத்தி வருகிறது. இந்தநிலையில், அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்ட டிக் டாக் செயலி பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்திருந்தனர்.
லேப்டாப் மூலம் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி சாதித்த பார்வைக்குறைபாடு கொண்ட மாணவி
கடலூரை சேர்ந்த பார்வை திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர், 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் உதவியாளர்கள் துணையின்றி, தமிழகத்தில் முதல் முறையாகத் தொழில்நுட்ப வசதிகளுடன் சுயமாகத் தேர்வை எழுதி, 447 மதிப்பெண் பெற்ற தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் விஜயராஜ், கோகிலா என்ற தம்பதியரின் மகள் ஓவியா. பிறந்ததிலிருந்து தெளிவான பார்வை திறனைக் கொண்ட அவர்களது மகள் ஓவியாவிற்கு, அவரது மூன்றரை வயதில் மழலையர் பள்ளி சென்று கொண்டிருந்தபோது படிப்படியாகப் பார்வை திறன் குறையத் தொடங்கியது. இதையடுத்து விழித்திரையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 7ஆம் வகுப்பு படிக்கும்போது முழுமையான பார்வை திறனை இழந்தார் ஓவியா.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: