You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம்
கிழக்கு லடாக் பிராந்திய எல்லை அருகே அசல் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அமைந்த பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய படையினருடன் நடந்த மோதலில் சீன வீரர்களும் பலியான தகவலை அந்நாட்டின் அரசு ஊடகம் முதல் முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பான பிற தகவல்களை செய்தியாளர்களிடம் சீன வெளியுறவுத்துறை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தபோதும், ஜூன் 15ஆம்தேதி மோதலில் சீன வீரர்கள் எவ்வளவு பேர் பலியானார்கள், அவர்களில் எவ்வளவு பேர் காயம் அடைந்தனர் போன்ற தகவல்களை மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை.
சீனாவை பொருத்தவரை, அந்நாட்டில் தன்னிச்சையான ஊடகங்கள் கிடையாது. தொலைக்காட்சியோ, நாளிதழோ, இன்டர்நெட் ஊடகமோ அனைத்தும் அந்நாட்டின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அதில் குளோபல் டைம்ஸ் ஊடகம், அரசின் கொள்கைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் பிரசார கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் இடம்பெறும் செய்திகள் சீன ஆட்சியாளர்களின் கொள்கை முழக்க தகவல்களாக கருதப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த ஜூன் 15ஆம் தேதி, கிழக்கு லடாக் எல்லைக்கு அப்பால் உள்ள எல்ஏசி பகுதியில் இந்தியா, சீனா ஆகியவற்றின் படையினருக்கு இடையிலான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அந்த சம்பவம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் அதன் பாதுாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை விளக்கம் அளித்தார். முதல் நாள் பேசிய அவர், லடாக் எல்லை மோதல் சம்பவத்தில் சீன ராணுவத்தினருக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த சீன அரசு, அதன் வெளியுறவுத்துறை மூலம் எதிர்வினையாற்றியது. எல்லை வரையறுக்கப்படாத அசல் கட்டுப்பாட்டுக் கோடு எனப்படும் "எல்ஏசி" பகுதியில் இந்திய படையினரை உடனடியாக பின்வாங்கச்செய்ய வேண்டும் சீன வெளியுறவுத்துறை எச்சரித்தது. எல்ஏசி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண விரும்புவதாகவும் சீனா தெரிவித்தது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மீண்டும் சீன படையினருடனான இந்திய ராணவத்தினரின் மோதல் சம்பவம் தொடர்பாக பேசிய ராஜாநாத் சிங், யாருக்கும் தலை வணங்கமாட்டோம். பிறருடைய தலையை எடுக்கவும் மாட்டோம் என்று பேசினார்.
இந்த நிலையில், எல்லை பதற்றம் தொடர்பாக இந்தியா பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக சீன வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியது. இந்தியாவில் உள்ள தேசியவாத சக்திகளை திருப்திப்படுத்துதவற்காக அதன் தலைவர்கள் சில தகவல்களை வெளியிட்டு வருவதாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், அந்த ஊடகத்தின் ஆசிரியர் ஹூ ஷிஜின் எழுதிய வலைபக்க பதிவில், எனக்கு தெரிந்தவரை எல்லை முன்களத்தில் சீன ராணுவத்தினர் மிகவும் துணிச்சலுடனும் ஒற்றுமையாகவும் இருந்தார்கள் என்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வீரர்கள், பெரும்பாலும் 1990கள் அல்லது 2000களில் பிறந்தவர்கள் என்று கூறினார். இளமையும் துடிதுடிப்பும் கொண்ட அவர்கள் எல்ஏசி பகுதியில் திடீரென மோதல் ஏற்பட்டபோது கொஞ்சம் கூட அச்சம் கொள்ளாமல் கடைசி மூச்சு உள்ளவரை போராடினார்கள் என்று ஹு ஷிஜின் கூறியுள்ளார்.
சம்பவ நாளில் இந்திய படையினர் எல்ஏசி பகுதியில் வரையறுக்கப்பட்ட பகுதியை தாண்டி வரக்கூடாது என்ற கட்டுப்பாடையும் அது தொடர்பான உறுதியையும் மீறி வந்ததாகவும் அது பற்றி பேசவே சீன படையினர் அங்கு சென்றதாகவும் குளோபல் டைம்ஸ் ஆசிரியர் கூறுகிறார்.
மேலும், தங்களை நோக்கி வந்த சீன படையினரை எச்சரிக்காமல் இந்திய படையினர் தாக்கியபோதுதான் அங்கு மோதல் ஏற்பட்டு அது வன்முறையாகியது என்றும் குளோபல் டைம்ஸ் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
அந்த சம்பவத்தில் ஒரு சீன ராணுவத்தினரை கூட இந்திய ராணுவம் பிடிக்கவில்லை என்றும் நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் பலரும் மலையில் இருந்து கீழே ஓடும் நதியை நோக்கி விழுந்ததாகவும் பல இந்திய படையினர் சரண் அடைந்ததில் அவர்களை சீன படையினர் சிறைப்பிடித்ததாகவும் குளோபல் டைம்ஸ் ஆசிரியர் கூறுகிறார்.
தனக்கு நெருக்கமான சீன ராணுவ வட்டாரங்களில் இருப்பவர்கள், முன்கள வீரர்கள் எல்ஏசி பகுதி மீது மிக உயரிய மதிப்பை கொண்டவர்கள் என்று தன்னிடம் தெரிவித்ததாகவும் ஹூ ஷிஜின் தெரிவித்தார். சீன வீரர்களுடன் ஒப்பிடும் அளவுக்கு இந்திய படையினரோ அவர்கள் கையாளும் ஆயுதங்களோ ஒப்பீட்டளவில் கூட நெருங்க முடியாதவை என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, ஹூ ஷிஜின் தனது டிவிட்டர் பக்கத்தில், "கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி நடந்த மோதலில் 20 உயிர் பலிகளை எதிர்கொண்ட இந்திய படையினரை விட சீன படையினரின் எண்ணிக்கை குறைவுதான்" என்று கூறியிருக்கிறார்.
அத்துடன் இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது வெளியிட்ட "சீனாவுக்கு பலத்த சேதம்" என்ற தகவல் இடம்பெற்ற ஆங்கில நாளிதழ் செய்தி இடுகையை இணைத்து "அது போலியான செய்தி" என்றும் ஹூ ஷிஜின் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
எல்லை மோதல் விவகாரத்தில் சீன வெளியுறவுத்துறை இதுவரை அந்நாட்டுப் படையினருக்கு ஏற்பட்ட உயிர் சேதம் அல்லது காயங்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
ஆனால், குளோபல் டைம்ஸ் ஊடகத்தை நடத்தி வருவது சீன அரசாங்கம் என்ற அடிப்படையில் அந்த ஊடகத்தின் ஆசிரியர் ஹூ ஷிஜின் வெளியிட்டுள்ள இந்த கருத்துகள், அந்நாட்டின் குரலாகவே பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- ”பூதம் உங்களை ஒரு நாள் காவு வாங்கும்” - மோதி அரசுக்கு எதிராக சீறிய பெண் எம்.பி
- எம்.எஃப். ஹுசைன் என்ன நினைத்து இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார்?
- பாபர் மசூதி இடிந்த கதை தெரியுமா? எங்கோ தொடங்கி எங்கோ சென்ற வரலாறு
- வெங்காய விலை: இந்திய ஏற்றுமதி தடையால் இலங்கையில் கடும் தாக்கம்
- நீட் விவகாரம் தொடர்பாக சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை - உயர் நீதிமன்றம்
- இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் ரூ.4500 வரை விற்கப்படுவதற்கான காரணம் என்ன?
- இந்தியாவில் கொரோனா வைரஸ் நாம் நினைப்பதை விட பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறதா?
- “வணக்கம். நான் இறந்தவன் பேசுகிறேன்” – இறுதிச் சடங்குகளில் வருமானம் ஈட்டும் நபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :