கொரோனா வைரஸ் தொற்று உணவு பாக்கெட்டுகளில் இருந்து பரவுமா?

தொற்று

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் பார்சல் பெட்டிகளில் கொரோனா வைரஸ் நுண்பகுதிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னமெரிக்காவில் இருந்து வந்த குளிர்பதப்படுத்தப்பட்ட இறால்கள் மற்றும் கோழி இறைச்சி மார்புப் பகுதிகளின் பெட்டிகளில் இவை கண்டறியப்பட்டுள்ளன.

உணவுப் பொருட்களின் பார்சல் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா என்ற கேள்வி, இதன் மூலம் மீண்டும் எழுந்துள்ளது.

இதற்கு எந்த அளவுக்கு வாய்ப்புகள் உள்ளன?

ஏட்டளவில் பார்த்தால், பார்சல் பொருட்களின் மூலம் கோவிட்-19 பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பார்சல் செய்யும் பொருட்களின் மீது, நாள் கணக்கில் இல்லாவிட்டாலும், இந்த வைரஸ் சில மணி நேரங்கள் வரை செயல்தன்மையுடன் இருக்கும் என்று ஆய்வகங்களில் நடந்த பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன. கார்ட்போர்டு அட்டை மற்றும் பல வகை பிளாஸ்டிக் பரப்புகளின் மீது இந்த வைரஸ் சில மணி நேரம் செயல் தன்மையுடன் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

குறைவான வெப்பநிலையில் அதிக செயல்தன்மையுடன் இந்த வைரஸ் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பல உணவுப் பொருட்கள் குறைந்த வெப்ப நிலையில்தான் அனுப்பி வைக்கப் படுகின்றன.

இருந்தபோதிலும், ஆய்வகங்களுக்கு வெளியிலும் இதே முடிவு பொருந்தி வருமா என்பது குறித்து சில விஞ்ஞானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

வெளியில் சுற்றுச்சூழல் நிலைகள் பெருமளவு மாறுபடும் என்பதால், வைரஸ்கள் அதிக நேரம் செயல்தன்மையுடன் இருக்க முடியாது என்று லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுவாச அறிவியல் துறை அசோசியேட் பேராசிரியராக உள்ள டாக்டர் ஜூலியன் ட்டாங் கூறியுள்ளார்.

ஆய்வக சூழலில் 10 மில்லியன் வைரஸ் சிதைவுகள் வரையிலான மாதிரிகளைக் கொண்டு பரிசோதனை நடைபெறுவதாகவும், தும்மலின்போது காற்றில் பரவும் திவலையில் இருக்கும் வைரஸ் சிதைவுகள் எண்ணிக்கை, சுமார் 100 என்ற அளவில் தான் இருக்கும் என்றும் ரட்கெர்ஸ் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் இம்மானுவேல் கோல்டுமேன் கூறியுள்ளார்.

The Lancet மருத்துவ இதழில் கடந்த ஜூலை மாதம் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்: ``உயிர் இல்லாத பொருட்களின் மேற்பரப்புகளின் மூலமாக வைரஸ் பரவுதலுக்கு, குறைவான வாய்ப்புகளே உள்ளதாக நான் கருதுகிறேன். நோய்த் தொற்று உள்ள ஒருவர் இந்த மேற்பரப்பின் மீது தும்மினாலோ அல்லது இருமினாலோ, அடுத்த ஓரிரு மணி நேரத்துக்குள் அந்த இடத்தை இன்னொருவர் தொட்டாலோ தான் இப்படி நிகழும்'' என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வைரஸ் எப்படி பரவும்?

உணவுப் பொருளை பார்சல் செய்யும் இடங்களில் வேலை செய்பவர்கள் நோய்க் கிருமி உள்ள மேற்பரப்பைத் தொட்டு, பிறகு தங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொட்டால் இது பரவலாம் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இதுதான் கோவிட்-19 பரவலுக்கு பிரதானமான வழியாக இருக்கிறதா என்று இப்போது விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை.

உணவு பாக்கெட்டுகளில் இருந்து கொரோனா தாெற்று பரவுமா?

பட மூலாதாரம், Getty Images

``வைரஸ் பரவி இருக்கும் ஒரு மேற்பரப்பை அல்லது பொருளை ஒருவர் தொட்டால், அவருக்கு கோவிட்-19 பரவுதலுக்கு வாய்ப்பு இருக்கும்'' என்று நோய் கட்டுப்பாட்டு மையம் (சிடிசி) என்ற அமெரிக்காவின் சுகாதார முகமையின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``வைரஸ் பரவலுக்கு இது மட்டுமே பிரதான காரணமாக இருக்கும் என சொல்ல முடியாது'' என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. உண்மையில், பின்வரும் வகைகளில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது நேரடியாகப் பரவுகிறது:

•ஒருவருக்கொருவர் மிக நெருக்கமான தொடர்பில் (2 மீட்டருக்கும் குறைவான இடைவெளி) இருக்கும்போது

•நோய்த் தொற்று பாதித்த ஒருவர் இருமல், தும்மலின் போது அல்லது பேசும் போது உருவாகும் திரவத் திவலைகள் மூலமாக.

•அருகில் உள்ளவர்களின் வாய் அல்லது மூக்கின் மீது இந்த திரவத் திவலைகள் படியும் போது அல்லது சுவாசிக்கும்போது நுரையீரலில் படியும்போது

பார்சல் பொருளில் இருந்து ஒருவருக்கு நோய்த் தொற்று பரவியது என்று நிரூபிப்பதும் கஷ்டமானது என்று டாக்டர் ட்டாங் கூறுகிறார்.

Banner image reading 'more about coronavirus'

``வேறு எந்த வழிமுறையிலும் பாதிப்பு இல்லை என்று விலக்குதல் செய்வது'' அவசியம். அறிகுறி இல்லாத சமூக தொடர்புகளுடன் அவருக்கு தொடர்பு இல்லை என்பதையும் உறுதி செய்தாக வேண்டும். உண்மையிலேயே பார்சல் பொருளில் இருந்து தான் நோய்த் தொற்று பரவியது என்பதை நிரூபிக்க இவை அவசியம் என்கிறார் அவர்.

நான் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறேன்?

``உணவுப் பொருள் பார்சல் மூலம் கோவிட்-19 பரவியதாக உறுதி செய்யப்பட்ட நேர்வு எதுவும் இப்போதைக்கு இல்லை'' என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் அயல் மாசுபாடு ஏற்படாமல் தவிர்ப்பதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உணவுப் பொருள் பார்சலை கிருமி நீக்கம் செய்ய வேண்டியதில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ``உணவு பார்சல்களைக் கையாண்ட பிறகு, உணவு சாப்பிடுவதற்கு முன்னதாக கைகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக பொருட்களை வாங்கச் செல்வதாக இருந்தால், முடிந்த வரையில் கடையில் நுழைவதற்கு முன்பு கை கிருமிநீக்க நாசினியை பயன்படுத்துங்கள். பிறகு உங்கள் கைகளை நன்றாகக் கழுவிடுங்கள். வாங்கி வந்த பொருட்களை கையாண்டதும், வீட்டில் அடுக்கி வைப்பது முடிந்த பிறகும் அவற்றைச் செய்ய வேண்டும்.

பொருட்களைக் கொண்டு வரும் நபர், நல்ல முறையில் தனிப்பட்ட மற்றும் உணவுப் பொருள் ஆரோக்கிய நடைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே, அவரை அனுமதிக்க வேண்டும். உணவுப் பொருள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட பிறகு, கைகளைக் கழுவிட வேண்டும். ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தலாம் என்று சில நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: