துருக்கி ஓட்டமான் பேரரசின் எழுச்சியும், வீழ்ச்சியும் - முதல்முதலாக போரில் பீரங்கி பயன்படுத்தப்பட்ட விறுவிறுப்பான கதை (பாகம் 1)

பட மூலாதாரம், FAUSTO ZONARO
- எழுதியவர், ஆசாத் அலி,
- பதவி, பிபிசி உருது சேவை
1453 ஆண்டு, ஏப்ரல் மாதம். உஸ்மானியா சாம்ராஜ்யத்தின் 21 வயதான சுல்தான் இரண்டாம் மெஹமத், தனது படையுடன் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிஜென்டீன் சாம்ராஜ்யத்தின் தலைநகர் குஸ்துந்துனியாவை (கான்ஸ்டன்டைன் என்று அழைக்கப்பட்ட இன்றைய இஸ்தான்புல்) சுற்றிவளைத்தார்.
இது நெட்ஃப்ளிஸில் குஸ்துந்துனியா வெற்றி பற்றி தயாரிக்கப்பட்ட "ஓடோமான்" படத்தின் முக்கிய காட்சி.
பீரங்கி குண்டுகளை வீசிய தனது இராணுவத்துடன் நகரச் சுவர்களுக்கு முன்னால் நின்றவாறு, அவருக்கும் அவரது தந்தை சுல்தான் இரண்டாம் முராத்க்கும் இடையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உரையாடலை அவர் நினைவு கூர்ந்தார்,
1443 ல், சுல்தான் இரண்டாம் முராத், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் மற்றும் அதன் வலுவான சுவர்களுக்கு முன்னால் இதே போல நின்றுகொண்டு , குஸ்துந்துனியாவை யார் வெல்கிறார்களோ, அவர்களுக்கே இந்த உலகம் சொந்தமானது என்று சொன்னதை, சுல்தான் மெஹ்மத், நினைவுகூர்ந்தார்.
இந்த சுவரைப்பார், இந்த நகரை வெற்றிகொள்ளவரும் ஒவ்வொரு வீரனையும், இது தடுத்து நிறுத்துகிறது,
" அவை என்னை நிறுத்தியது" என்று அவர் சொன்னார்.
மறக்காத ஐரோப்பா
சுல்தான் இரண்டாம் மெஹமத் ,தனது தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு அப்போது அவரிடம் வினவினார் ,இதை (குஸ்துந்துனியாவின் சுவர்களை) ஏன் தகர்க்கவில்லை? அதற்கு அவர் தந்தை , இந்த சுவரை உடைக்கக்கூடிய வலுவுள்ள ஆயுதங்கள் இப்போதுவரை உருவாக்கப்படவில்லை என்று பதில் கூறினார். மகன் மெஹமத், நம்பிக்கையுடன் சொன்னார் "தந்தையே, நான் இந்த சுவரை உடைப்பேன், நான் சுல்தான் ஆகும்போது, குஸ்துந்துனியாவை கைப்பற்றுவேன்"

பட மூலாதாரம், Netflix
இங்கு ஒரு முக்கிய கேள்வி என்னவென்றால், 1443 ஆம் ஆண்டு மற்றும் 1453 ஆம் ஆண்டுக்கும் இடையிலான காட்சியில் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது.
சுல்தான் இரண்டாம் முராத், குஸ்துந்துனியாவுக்கு முன்னால் நிற்கிறார். அவருக்குப் பின்னால், குதிரைப் படை தெரிகிறது. ஆனால், 1453 ஆம் ஆண்டு, சுல்தான் இரண்டாம் மெஹ்மத், குஸ்துந்துனியா வரும்போது, உலகில் எந்த ஒரு பகைவரும் இதுவரை பார்த்திராத பீரங்கிகளுடன் வருவதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது.
"உலகம் இதுவரை இத்தனை அதிக எண்ணிக்கையில் பீரங்கிகளை ஒரே நேரத்தில் பார்த்தது இல்லை " என்று படத்தில் ஒரு வரலாற்று ஆய்வாளர் சொல்கிறார்.
மகன் மெஹமத் , சுல்தான் இரண்டாம் மெஹ்மத் ஆனபிறகு, தன் தந்தைக்கு அளித்த வாக்குறுதியின்படி, 1453 ல், குஸ்துந்துனியாவின் வலுவான சுவர்களைத் தகர்த்து, அகிலத்தின் இதயம் என்று கருதப்படும் இந்த நகரத்தை, உஸ்மானியா சாம்ராஜ்யத்தின் தலைநகராக ஆக்கினார்.
வரலாற்றாசிரியர் கேபார் ஆகஸ்தோன் தனது , கன்ஸ் ஃபார் த சுல்தான் என்ற புத்தகத்தில், "1450 ஆம் ஆண்டிற்குள், சுற்றிவளைக்கும் போரில், பீரங்கிகள் வெற்றியை உறுதி செய்யும் ஆயுதமாக ஆகிவிட்டதற்கு ஒரு உதாரணமாக, உஸ்மானியா, குஸ்துந்துனியாவை வென்றது திகழ்கிறது," என்று எழுதியுள்ளார்.
மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், புதிய தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பதோடு கூடவே, உஸ்மானியா சாம்ராஜ்யத்திடம் அதிக எண்ணிக்கையில் ஆயுதங்களைத் தயாரிக்கும் வளங்களும், வசதிகளும் இருந்தன. இதன் காரணமாக, தனது ஐரோப்பியப் பகைவர்களைக் காட்டிலும், அதிக வலுவைப் பெற்றிருந்தனர்.
ஓர்பானும், பீரங்கியும்
ஓடோமான் படத்தில், ஓர்பான் என்ற பெயருடைய கைவினை கலைஞர், சுல்தான் இரண்டாம் மெஹமதின் அரசவைக்கு வந்து, பீரங்கியின் டிசைனை காட்டுகிறார். அதன் குண்டுகள், வரலாற்று சிறப்புமிக்க சுவர்களையும் தகர்த்தெறியும் என்று அவர் சொல்கிறார்.

பட மூலாதாரம், Netflix
இந்த பீரங்கி, எட்டு மீட்டர் நீளம் கொண்டது, இதன் விலை 10 ஆயிரம் துக்கத் என்று சொல்கிறார்.
இந்தக் காட்சியில், சுல்தான் இரண்டாம் மெஹ்மத், கைவினை கலைஞரிடம், இந்த பீரங்கி, குஸ்துந்துனியாவின் சுவர்களை வீழ்த்தினால், நான்கு மடங்கு விலை தருவதாகவும், ஆனால், நிபந்தனை என்னவென்றால், இந்த பீரங்கி மூன்று மாதங்களில் தயாராகவேண்டும் என்றும் பதில் சொல்கிறார்.
வரலாற்றாளர் ஆகஸ்தோன், ஆன்லைன் மேகஸீன், ஜே ஸ்டாரில், பிரசுரமான தனது கட்டுரையில், ஓர்பான், ஹங்கேரியில் வசித்தவர் என்றும் மிகவும் திறமையான கைவினை கலைஞர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஓர்பான் முதலில், குஸ்துந்துனியாவில், பிஜெண்டீன் சாம்ராஜ்யத்திடம், இந்த பீரங்கியைக் காட்சிப்படுத்தினார், ஆனால், இந்த பீரங்கியின் விலையை அவர்களால் கொடுக்க முடியவில்லை மற்றும் இத்தனை பெரிய பீரங்கிகளைத் தயாரிக்கத் தேவையான வளங்கள் அங்கு இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக ஓர்பான், தனது பீரங்கியை எடுத்துக்கொண்டு, உஸ்மானியா சாம்ராஜ்யத்திடம் வந்தார்.
சுல்தான் இரண்டாம் மெஹ்மத், ஓர்பான் சொன்னதை ஏற்றுக்கொண்டார். ஆனால் மேலே தொடர்வதற்கு முன் ஒரு விஷயத்தை நினைவில் கொள்வது அவசியம். குஸ்துந்துனியாவின் முற்றுகையில் , துருக்கியர்கள் தயாரித்த பீரங்கிகளும் முக்கிய பங்கு வகித்தன. உஸ்மானியர்கள், பம்பாயி என்று அழைக்கப்படும், பெரிய பீரங்கிகளை மட்டுமே சார்ந்து இருக்கவில்லை. இதுபற்றி விரிவாகப் பின்னர் பார்ப்போம்.
துருக்கிய ஆவணக் காப்பகங்களில், பல ஆவணங்களும் ,சான்றுகளும் உள்ளன, இவற்றில், உஸ்மானியர்களின் பீரங்கி தயாரிக்கும் பணித்திறன், கப்பல் தயாரிப்பு, நைட்ரிக் அமிலம் மற்றும் வெடிமருந்து தயாரிப்பு தொடர்பானவையும் அடங்கும் என்று ஆகஸ்தோன் கூறுகிறார்.
ஓர்பானின் பீரங்கி தயாரானது, இதை குஸ்துந்துனியா கொண்டுசெல்லும் நடவடிக்கை துவங்கியது.
ஆகஸ்தோன், ஜே ஸ்டார் மேகஸீனில், தனது கட்டுரை ( 15 மற்றும் 17 ஆம் நூறாண்டுகளில், உஸ்மானிய பீரங்கிகள் மற்றும் ஐரோப்பிய மிலிட்டரி டெக்னாலஜி) யில், பல்வேறு வரலாற்று ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி, இந்த பீரங்கியைத் தலைநகர் ஏடனில் இருந்து குஸ்துந்துனியா கொண்டுசேர்க்கும் நடவடிக்கை குறித்து விரிவாக தெரிவிக்கிறார்.
பீரங்கிக்கான ராஜ மரியாதை
இந்த வேலைக்காக 30 வேகன்கள் சேர்க்கப்பட்டன, அவற்றை இழுக்க 60 சக்திவாய்ந்த காளைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன என்று அவர் எழுதியுள்ளார். வேகனின் சமநிலை மோசமடையாமல் இருப்பதற்கும், பீரங்கி விழாமல் இருப்பதற்கும், வேகன்களின் இருபுறமும் 200 வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.
பீரங்கியின் பாதையை சுத்தம் செய்ய, 50 பேரும், அவர்களது 200 உதவியாளர்களும் முன்னேறிச் சென்றனர். வழியில் சாலையின் மோசமான பகுதிகளில் பாலங்களை அமைப்பதே அவர்களின் பணி.
ஏடனில் இருந்து குஸ்துந்துனியாவுக்கான பயணத்திற்கு சுமார் இரண்டு மாதங்கள் எடுத்தது, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குப் பிறகு, குஸ்துந்துனியாவிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள சரியான இடத்தைப் பார்த்து ,இவை நிறுவப்பட்டன.
குஸ்துந்துனியா முற்றுகையின்போது, இந்த பீரங்கி ஒரு நாளைக்கு ஏழு முறை மட்டுமே சுட முடிந்தது என்றும் மே மாதத்தில் பழுது பார்க்கப்பட வேண்டியிருந்தது என்றும் ஆகஸ்தோன் எழுதியுள்ளார். ஆனால் அதன் கனமான குண்டுகள், குறிக்கோள்கள் குஸ்துந்துனியாவின் சுவர்களை வெகுவாக சேதப்படுத்தியது மற்றும் உஸ்மானியர்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
மத சுதந்திரம், திறமைக்கு மரியாதை
வரலாற்றில் எந்தவொரு பெரிய மற்றும் வெற்றிகரமான சாம்ராஜ்யத்தைப் போலவே, 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளின் உஸ்மானியா சாம்ராஜ்யமும், அனைத்து விதமான திறமையான மற்றும் சாதனை படைக்கும் மக்களை ஈர்க்கும் இடமாக இருந்தது.
அங்கு மற்ற வசதிகளுடன் கூடவே, "சமூக வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருந்தன. ஐரோப்பாவில், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில், முஸ்லிம்களும் யூதர்களும் மதமாற்றம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவ்வாறு செய்யத் தவறியதால், நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. மத சகிப்பின்மை இருந்தது. உத்தியோகபூர்வ மதத்தை ஏற்றுக்கொள்ளாததற்காக மக்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், அதே நேரத்தில் உஸ்மானியா சாம்ராஜ்யத்தில், மத சுதந்திரத்தின் சூழ்நிலை இருந்தது. "
உஸ்மானியா சாம்ராஜ்யத்தின் சுல்தான்கள்,ஆதிக்கம் செலுத்தினாலும், அவர்கள் அறிவையும் திறமையையும் மதித்தார்கள், குறிப்பாக இந்த இரண்டு விஷயங்களும் இராணுவத் துறையுடன் தொடர்புடையவையாக இருந்தால் என்று வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்கள்,
"சாம்ராஜ்யம், திறமைமிக்க நிர்வாகத்தினரால் வெகுமதி பெற்றது" என்று ஆகஸ்தோன் எழுதுகிறார்.

இராணுவ விஷயங்களில் சுல்தான் இரண்டாம் மெஹ்மதின் ஆர்வம் அனைவரும் அறிந்ததே என்றும் ஐரோப்பாவின் வல்லுநர்கள் தாங்கள் எழுதிய இராணுவ ஆவணங்களிலும், அவரது பெயரை சேர்த்தனர் என்றும் அவர் கூறினார்.
ஐரோப்பாவின் பல ஆட்சியாளர்கள் அவரிடம் நெருக்கமாக இருப்பதற்காக, தங்கள் இராணுவ நிபுணர்களை அவரிடம் அனுப்பியதாக ஆகஸ்தோன் எழுதுகிறார். கிறிஸ்தவமல்லாத அரசுக்கு எந்தவிதமான இராணுவத் தகவல்களையும் கொடுக்க, ரோமின் போப்பாண்டவர், தடைவிதித்திருந்த நேரத்தில் இவை அனைத்தும் நடந்து கொண்டிருந்தன.
உஸ்மானியா சாம்ராஜ்யத்தால் கைப்பற்றப்பட்ட பிராந்தியத்தின் கைவினைஞர்கள் மற்றும் திறமையான மக்கள் தங்கள் பழைய தொழில்களைத் தொடர அனுமதிக்கப்படுவது மட்டுமல்லாமல், முன்னேற வாய்ப்புகளும் இருந்தன. கைதிகளாக மாறிய கைவினைஞர்களிடமும் இந்த வாய்ப்புக்கள் இருந்தன.
இது தவிர, ஏராளமான கைவினைஞர்கள் புதிய பணியமர்த்தல் திட்டங்கள் மூலமும் சாம்ராஜ்யத்தில் குடியேறினர்.
சுல்தான் முதலாம் சலீம் பற்றிக்கூறும்போது, தபரேஸிலிருந்து இஸ்தான்புல்லுக்கு அனைத்து கைவினைஞர்களையும் அழைத்து வந்து குடியேற்றினார் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
வழக்கமான முழுநேர உஸ்மானியா பீரங்கி படைகள் எப்போது உருவாக்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது ஐரோப்பாவில் அத்தகைய பீரங்கிப் படை நிறுவப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே சுல்தான் இரண்டாம் முராத்தின் (1421-1451) ஆட்சியின் போது நிகழ்ந்திருக்கலாம்.
யூத மற்றும் கிறிஸ்துவ கைவினை கலைஞர்கள்
அந்த சமயத்தில் இஸ்தான்புல்லுக்கு வரும் ஐரோப்பியர்கள், அங்குள்ள அரச இரும்பு ஆலைகள் மற்றும் ஆயுதக் களஞ்சியங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பணியாற்றுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள், கூடுதலாக யூதர்களும் அங்கே காணப்பட்டனர்.
ஸ்பெயினிலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்கள் உஸ்மானியர்களுக்கு இராணுவ நடவடிக்கைகளைப் பற்றிய அறிவைக் கொடுத்ததாகவும், இராணுவ ஆயுதங்கள் மற்றும் வெண்கலத்தின் 'தீ பூட்டுகள்' பற்றி அவர்களிடம் அதிகம் கூறியதாகவும் 1556 இல் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில் ஆகஸ்தோன் குறிப்பிடுகிறார்.
உஸ்மானியா சாம்ராஜ்யத்தில், யூதர்களுக்கு இராணுவ சேவைகளில் தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் தருவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் உஸ்மானிய மற்றும் யூத ஆவணங்களின் அடிப்படையில் அவர்களின் உதவியை மறுக்க முடியாது என்றும் . ஆகஸ்தோன் எழுதியுள்ளார். இஸ்தான்புல்லின் அரச பீரங்கி சுரங்கங்களின் விவரங்கள் 1517-1518 யூத கைவினைஞர்கள் குறித்து குறிப்பிடுகின்றன.
ஆனால் அந்த நேரத்தில், வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த நிபுணர்கள், பல்வேறு ஆட்சியாளர்கள் மற்றும் சுல்தான்களிடம் பணியாற்றுவது புதியதல்ல.
செவில்லியைச் சேர்ந்த ஜெரோம் மொராண்ட், 1544 இல் இஸ்தான்புல் ஃபவுண்டரியில் , 40 முதல் 50 ஜெர்மானியர்கள், சுல்தானுக்கு பீரங்கிகள் தயாரிப்பதைக் கண்டதாக எழுதினார்.
இந்த வழியில், இஸ்தான்புல்லுக்கான பிரெஞ்சு தூதர் 1547-1548 இல் பல பிரெஞ்சு, ஸ்பானிஷ், வெனிஸ், ஜெனீவா மற்றும் சிசிலி நிபுணர்கள் அங்கு பணியாற்றி வருவதாக எழுதினார்.
இருப்பினும், இங்கேயும் வரலாற்றாசிரியர்கள் வெளிநாட்டினரின் பங்கு பற்றிய மிகைப்படுத்தலில் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறுகிறார்கள். 15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உஸ்மானியா சாம்ராஜ்யத்தின் ஐரோப்பிய கோட்டைகளில் கிறிஸ்தவர்களுடன் இணைந்து, துருக்கியர்களின் 'துப்பாக்கியாளர்கள் மற்றும் 'பீரங்கியாள்ர்களும் பணியாற்றியதாக ஆகஸ்தோன் கூறுகிறார். 16 ஆம் நூற்றாண்டில், அவர்கள் கிறிஸ்தவ கைவினைஞர்களை விட அதிகமாக இருந்தனர்.
கைவினைஞர்கள் இல்லாததால், ஸ்பெயினின் பீரங்கி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிகள் நிறுத்தப்பட்டன, ஆனால் உஸ்மானியா சுல்தானேட் மட்டுமே வெளிநாட்டு கைவினைஞர்களைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகஸ்ட்தோன் தனது புத்தகத்தில் இது குறித்து பல எடுத்துக்காட்டுகளை வழங்கியுள்ளார். உதாரணமாக, ஹங்கேரிய பீரங்கி பிரிவில் ஜெர்மனியர்கள் பெரும்பாலும் இருந்தனர், சில இத்தாலியர்களும் இருந்தனர்.
அதேபோல், 16 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் வரை ஜெர்மானியர்கள் அங்கு பணியாற்றியதாக வெனிஸின் உதாரணத்தை அவர் கொடுத்துள்ளார், மேலும் வெனிஸ் அதன் 'கன்னர்ஸ் பள்ளி' உருவாக்கிய நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்த நிலைமை இருந்தது.
இதற்கு ஒரு சுவாரஸ்யமான எடுத்துக்காட்டு ஸ்பெயின் ஆகும், அங்கு, 16 ஆம் நூற்றாண்டில் பீரங்கிகளை தயாரிக்க தன்னுடைய சொந்த கைவினைஞர்கள் இல்லை என்றும் பேரரசர், ஜெர்மன், இத்தாலியன் மற்றும் ஃபிளேம்ஸ் கைவினைஞர்களை மீண்டும் மீண்டும் நியமிக்க வேண்டியிருந்தது என்றும் ஆகஸ்தோன் கூறுகிறார். 1575 ஆம் ஆண்டில், கைவினைஞர்கள் இல்லாததால், நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது, மலகாவின் இரும்பாலைகள் மூடப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
இந்த சம்பவத்தின் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், ஜெர்மனியில் இருந்து கைவினைஞர்களை அழைத்தபோது, அவர்கள் புராட்டஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது. ஸ்பெயின் அதிகாரப்பூர்வமாக ஒரு கத்தோலிக்க நாடு.
கைவினைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பிறகு, "இன்ஜ்பர்க்கில் இருந்து கத்தோலிக்க கைவினைஞர்கள் வந்த பின்னரே ஃபவுண்டரியில் பணிகள் தொடங்கப்பட்டன."
இந்த சம்பவம் உஸ்மானியா சாம்ராஜ்யம் மற்றும் அதன் சமகால ஐரோப்பிய சக்திகளின் மதக் கொள்கையில் பெரிய வித்தியாசத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.
அந்த நேரத்தில் ஒரு பெரிய உலக சக்தியாக இருந்த போர்ச்சுகலின் நிலைமை இதுதான் என்றும், ஆப்பிரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் புதிய ஆயுதங்களை கொண்டு செல்வதில் இது முக்கிய பங்கு வகிப்பதாக நம்பப்பட்டதாகவும் ஆகஸ்தோன் கூறுகிறார். வெளிநாட்டு தொழில்நுட்பம் மற்றும் அங்கிருந்து வரும் ஆயுதங்களை அது அதிகமாக நம்பியிருந்தது.
ரஷ்யாவுக்கு பீரங்கி தயாரிக்க கற்றுக்கொடுத்தது யார்?
இதே போன்ற எடுத்துக்காட்டுகள் வரலாற்றில், ரஷ்யாவிலும் பிரான்சிலும் காணப்படுகின்றன.
ரஷ்யாவில் புகழ்பெற்ற ஆயுதத் தொழிற்சாலை, ஹாலந்தின் குடிமகனான ஆண்ட்ரஸ் வெய்ன்ஸ் என்பவரால் அமைக்கப்பட்டது என்றும், 1647 ஆம் ஆண்டு வரை அவர் அதற்குப் பொறுப்பேற்றார் என்றும், ஒப்பந்தத்தின் படி இந்த காலகட்டத்தில் ரஷ்ய கைவினைஞர்களுக்கும் பயிற்சி அளித்ததாகவும் ,ஆகஸ்தோன் எழுதுகிறார்.
அவரது ஒப்பந்தம் முடிந்தபின், ரஷ்யா அதை சொந்தமாக இயக்க பெருமுயற்சி செய்தது. ஆனால், 1648 இல், ஆண்ட்ரெஸை 20 ஆண்டுகளுக்கு திரும்ப அழைக்க வேண்டியிருந்தது.
புதிய தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, அந்த நேரத்தில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது வளர்ச்சி அடைந்த்திருந்த இங்கிலாந்துக்கும் , வெளி உதவி தேவைப்பட்டது என்றும் , பிரான்ஸின் இரும்பு ஆசாரிகள் மற்றும் பீரங்கியாளர்கள் பெரும்பங்கு வகித்தனர் என்றும் ஆகஸ்தோன் எழுதுகிறார்.
(தொடரும்)
வெடிப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் உலகத்தை மாற்றியது எப்படி, மற்றும் பேரரசின் வீழ்ச்சி ஆகியவற்றை அடுத்த பாகத்தில் காண்போம்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












