You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் விமான விபத்து: 'கொரோனா குறித்து பேசிக்கொண்டே கவனம் சிதறிய விமானிகள்'
பாகிஸ்தானில் கடந்த மாதம் 97 பேரை பலிவாங்கிய விமான விபத்து, விமானி மற்றும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களின் மனித தவறால் நிகழ்ந்தவை என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் நெறிமுறையை பின்படுத்த தவறிவிட்டனர் என விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் குலாம் சர்வார் கான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்து பேசிக் கொண்டு இருந்ததால் விமானிகள் கவனத்தை சிதறவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 22ஆம் தேதி கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிவிட்டது. அந்த விபத்தில் இரண்டு பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
ஆரம்ப கட்ட அறிக்கையில் தெரியவந்தது என்ன?
அந்த விமானம் லாகூரிலிருந்து, கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த சமயத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான அந்த ஏர்பஸ் 320 விமானத்தில் எந்த கோளாறும் இல்லை என கான் தெரிவித்தார்.
"முதலில் விமானி லேண்டிங் கியரை சரியாக செயல்படுத்தவில்லை. எனவே அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து மீண்டும் புறப்படுவதற்கு முன்பு தடுமாறியது. எனவே இரண்டாவது முறையாக தரையிறங்கும்போது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் இஞ்சின் மோசமாக பாதிப்படைந்ததை தெரியப்படுத்தவில்லை," என அமைச்சர் தெரிவித்தார்.
"கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்தின் உயரத்தை அதிகரிக்குமாறு கூறியபோது, நான் பார்த்துக் கொள்கிறேன் என விமானி தெரிவித்தார். அவர் அதீத நம்பிக்கையுடன் இருந்துவிட்டார்," என்கிறார் கான்.
இதுகுறித்த விரிவான அறிக்கை ஒரு வருட காலத்திற்குள் வெளியாகும் என்றும், அதில் விமான விழும்போது பதிவாகிய ரெக்கார்டிங் பதிவுகளிலிருந்த விவரங்களும் சேர்க்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தான் சர்வதேச விமான சேவையை அரசு மறுசீரமைக்கும் என்றும் உறுதியளித்தார். பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் விமானிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கராச்சி விமான விபத்து:என்ன நடந்தது?
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் விமானிக்கும் இடையே இரண்டாவது முறையாகத் தரையிறங்கும்போது நடைபெற்ற பேச்சுகளின் பதிவை விபத்து நடந்து சிறிது நேரத்தில் பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டன. அதில் விமானி "இஞ்சின் பழுதாகிவிட்டது" எனக் கூறுகிறார்.
எனவே விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளார், விமானத்தை சக்கரங்கள் பயன்படுத்தாமல் தரையிறக்கப்போகிறீர்களா எனக் கேட்கிறார். அதற்கு விமானி, "மே டே மே டே மே டே" (ஆபத்தில் இருக்கும்போது பயன்படுத்தும் வார்த்தை) என பதிலளிக்கிறார். இதுதான் விமானத்திலிருந்து வந்த கடைசி பேச்சு.
அந்த விபத்தில் பிழைத்த முகமது சுபைர், "முதலாம் தரையிறங்கும் முயற்சிக்கும், விபத்துக்கும் இடையில் 10-15 நிமிட இடைவெளி இருந்தது; விமானம் விபத்துக்குள்ளாகப்போகிறது என யாருக்கும் தெரியாது. விமானம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது," என்கிறார்.
திடீரென விமானம் விழுந்தபோது தான் மயக்கமடைந்துவிட்டதையும், கண் விழித்துப் பார்த்தால் புகையும், கூச்சலுமாக இருந்ததையும் நினைவு கூர்கிறார் சுபைர்.
பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை, இந்த விமானம் 2014லிருந்து பயன்பாட்டில் உள்ளது என்றும், கடந்த நவம்பர் மாதம் ஆண்டுதோறும் நடைபெறும் தரைக்கட்டுப்பாடு சோதனை செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக அமலாகியிருந்த பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்ட சில நாட்களில் இந்த விபத்து நடைபெற்றது.
விமானிகளின் குடும்பத்தினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்ததால் விபத்து நடைபெறுவதற்கு முன்னதாக அவர்கள் அது குறித்து அவர்கள் ஆலோசித்து வந்தனர் என கான் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் இதற்கு முன்பு நடந்த விமான விபத்துகள்
பாகிஸ்தான் வரலாற்றில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ விமானம் என இதுவரை பல விமான விபத்துகள் நடைபெற்றுள்ளன.
2010இல் தனியார் பயணிகள் விமானம் ஒன்று இஸ்லாமாபாத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 152 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் வரலாற்றில் நடந்த மிக மோசமான விபத்து அதுவாகும்.
2012ஆம் ஆண்டு பாகிஸ்தானின் போஜா ஏர் விமான சேவை நிறுவனத்தின் போயிங் 737 -200 விமானம் ராவல்பிண்டியில் தரையிறங்கும் சமயத்தில் விபத்துக்குள்ளானதில் 121 பயணிகளும், ஆறு விமான ஊழியர்களும் உயிரிழந்தனர்.
2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் சர்வதேச விமான சேவையின் விமான ஒன்று, வடக்குப் பகுதியிலிருந்து இஸ்லாமாபாத்தை நோக்கி சென்றபோது விபத்துக்குள்ளானதில் 47 பேர் உயிரிழந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: