தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு பயண விதிகள்: மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்குத் தடை

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாவட்டங்களுக்கு இடையில் இ - பாஸ் இல்லாமல் பயணம் செய்வதற்கு தடைவிதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 30ஆம் தேதிவரை இந்த தடை அமலில் இருக்கும்.

தமிழ்நாட்டில் சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்ப் பரவல் அதிகம் உள்ளதால் ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதிவரை 12 நாட்களுக்கு பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும் நோய்ப் பரவல் அதிகம் இருப்பதால் சென்னையைப் போலவே இங்கும் இன்று முதல் 30ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கருத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்கள், தற்போது மண்டலங்களுக்கு இடையில் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி உள்ளதால், ஒரே மண்டலத்திற்குள் பிற மாவட்டங்களிலிருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு, நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதாகவும் மக்களின் பயணங்களை இதனால் தடுக்க இயலவில்லை என்றும் தெரிவித்தனர்.

இ-பாஸ் இல்லாமல் மண்டலங்களுக்குள் பயணம் செய்ய அனுமதிப்பதற்குப் பதிலாக, அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டும் பயணம் செய்ய வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்றும், வேறு மாவட்டங்களுக்கு செல்லவோ, பிற மாவட்டங்களிலிருந்து வரவோ இ-பாஸ் பெற்றே பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூறினர். இந்தக் கருத்தை மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதையடுத்து மண்டலங்களுக்கு இடையில் பயணம் செய்வதை தடை செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "25.6.2020 முதல் 30.6.2020 வரை வாகனப் போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதில் மாவட்டத்திற்குள் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம்விட்டு மாவட்டம்செல்ல இ-பாஸ் பெறவேண்டும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது. மேற்குறிப்பிட்ட காலத்தில், பொதுப் பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்படும்" என்றும் கூறப்பட்டுள்ளது.

மண்டலங்கள் என்றால் என்ன?

தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதியன்று ஊரடங்கில் பெரும் தளர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பொதுப் போக்குவரத்தை ஜூன் ஒன்றாம் தேதி முதல் துவக்குவதற்கு ஏதுவாக தமிழ்நாடு 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.

அதன்படி, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் முதலாம் மண்டலம் என்றும் தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் 2ஆம் மண்டலமாகவும் பிரிக்கப்பட்டன.

விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் 3ஆம் மண்டலமாகவும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் 4ஆம் மண்டலமாகவும் பிரிக்கப்பட்டன.

திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் 5ஆம் மண்டலமாகவும், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் 6ஆம் மண்டலமாகவும், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் 7ஆம் மண்டலமாகவும், சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் 8ஆம் மண்டலமாகவும் பிரிக்கப்பட்டன.

இதில் ஏழாம் மண்டலத்தில் உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் எட்டாம் மண்டலத்தில் உள்ள சென்னை நகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளும் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே தனியாருக்கு அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும், ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாவட்டங்களுக்கு நடுவில் பயணம் செய்ய இ - பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: