You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவுக்கு இனி ஜி.பி.எஸ். தேவையில்லை: சொந்த நேவிகேஷன் அமைப்பை ஏற்படுத்த செயற்கைக் கோள் ஏவியது
உலகில் பலராலும் பயன்படுத்தப்படும் அமெரிக்க அரசுக்கு சொந்தமான ஜிபிஎஸுக்கு (GPS) பதிலாக, தங்களது சொந்த நேவிகேஷன் அமைப்பை உருவாக்கும் செயற்கைக்கோள்களைச் சீனா வெற்றிகரமாக ஏவியுள்ளது.
சீனா தயாரித்துள்ள பெய்டோ-3 நேவிகேஷன் அமைப்புக்காக மொத்தம் 35 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. அதில் கடைசி செயற்கைகோளையும் சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
உலகளவில் நேவிகேஷன் தகவல்களை வழங்கும் இந்த அமைப்புக்காக பத்து மில்லியன் டாலர்களைச் சீனா செலவழித்துள்ளது. இந்த திட்டத்தின் வெற்றி மூலம், இனி அமெரிக்க அரசுக்குச் சொந்தமான ஜிபிஎஸ் அமைப்பைச் சீனா சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் கொரோனா வைரஸ், வர்த்தகம் மற்றும் ஹாங்காங் குறித்த பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், சீனா இந்த திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
கடந்த வாரமே இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டது.
ஏற்கனவே, அமெரிக்காவின் ஜிபிஸ், ரஷ்யாவின் குளோனாஸ், ஐரோப்பிய கலிலியோ சிஸ்டம்ஸ் என மூன்று நேவிகேஷன் அமைப்பு உலகில் இருந்து வரும் நிலையில், தற்போது சீனாவின் பெய்டோ நேவிகேஷன் சேடிலைட் சிஸ்டம்ஸும்(பிடிஎஸ்) இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.
பெய்டோ நேவிகேஷன் அமைப்பின் முதல் பதிப்பு கடந்த 2000ஆம் ஆண்டு சீனாவிற்குள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2012-ம் ஆண்டு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ’பிக் டிப்பர்’ எனும் பெயரில் இந்த நேவிகேஷன் அமைப்பு அறிமுகமானது. தற்போது 2020-ல் உலகம் முழுக்க இதன் சேவையை விரிவுப்படுத்தும் பணியைச் சீனா செய்து முடித்துள்ளது.
முதலில் ராணுவப் பணிகளுக்காக மட்டுமே இந்த பெய்டோ நேவிகேஷன் திட்டத்தைச் சீனா துவங்கியது. பின்னர் இதை வணிக ரீதியாகவும் பயன்படுத்தத் துவங்கியது.
பெய்ஜிங்கில் இயங்கும் டேக்ஸிகளில் கிட்டதட்ட பாதி டேக்ஸிகளில், அதாவது 33,500 டேக்ஸிகளில் பெய்டோ நேவிகேஷன் அமைப்பைப் பயன்படுத்துமாறு 2018-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
அதே போல 2020-ல் வெளியாகும் அனைத்து சீன கார்களிலும் பெய்டோ நேவிகேஷன் அமைப்பைப் பொறுத்த இலக்கு வைக்கப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் சீனாவின் விண்வெளி திட்டம் வேகமாக வளர்ந்துள்ளது. தங்களுக்குச் சொந்தமான உயர் தொழில்நுட்பங்களை உருவாக்க சீன அரசு அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளது.
2003-ல் விண்வெளிக்கு தங்களது சொந்த குழுவை அனுப்பிய உலகின் மூன்றாம் நாடு என்ற பெயரைச் சீனா பெற்றது.
அதன் பிறகு வேகமெடுத்த சீனா, ஒரு சோதனை விண்வெளி நிலையத்தை உருவாக்கியதுடன், நிலவுக்கு இரண்டு ரோவர்களையும் அனுப்பியுள்ளது.
சீனாவின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிகளுக்குப் போட்டியாகக் கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
- சாத்தான்குளம் தந்தை மகன் சிறையில் பலி: டி.ஜி.பி. எஸ்.பி. ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
- விளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்?
- சாத்தான்குளம்: போலீஸ் ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் விமர்சனம், மற்ற தலைவர்கள் கருத்து
- சீனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க வரைபடம் - சமூக வலைதளத்தில் கிண்டல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: