You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாத்தான்குளம்: போலீஸ் ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் விமர்சனம், மற்ற தலைவர்கள் கருத்து
சாத்தான்குளம் சம்பவம்: தமிழக அரசியல் தலைவர்கள் கூறியது என்ன?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்ததால் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பாக இரண்டு காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து இன்று (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பதிலளிக்க வேண்டும்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் திரைமறைவில் போலீஸ் ஆட்சி நடக்கிறதா என கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர், “கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தையும், மகனும் சந்தேகத்திற்குரிய வகையில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது; 'லாக்அப்' மர்ம மரணங்கள், நீதிமன்றக் காவலிலும் நடக்கின்றன எனில், அதற்கு உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும்," என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மரணத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்,” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தின் காவலர்கள்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், “சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்.” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்.” என்று கூறி உள்ளார்.
ஒரு கோடி நிவாரணம்
இது தொடர்பாக சிபிஐ(எம்) தமிழக தலைவர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட உரிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "மனித உரிமை மீறல், காவல்நிலைய துன்புறுத்தல் காரணமாக கணவரையும், மகனையும் இழந்து வாடும் செல்வராணிக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும். ஜெயராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.
கொரானா நோய் தொற்று காலத்தில் சாத்தான்குளம் மேஜிஸ்ட்ரேட் ஜெயராஜ், பென்னிக்ஸ், ஆகியோரை ஜெயிலில் வைத்திட ஏன் உத்தரவிட்டார் என்பது சம்பந்தமாகவும், மேற்படி இரண்டு பேர்களுக்கும் இருந்த காயங்களை பதிவு செய்யாதது தொடர்பாகவும் முழுமையாக விசாரணை செய்திட வேண்டும்." என கூறி உள்ளார்.
"அருகாமையிலுள்ள ஜெயிலில் வைத்திடாமல் அதிக தொலைவில் உள்ள கோவில்பட்டி ஜெயிலில் மேற்படி இரண்டு பேர்களையும் அனுமதித்துள்ளது குறித்து சம்பந்தப்பட சிறை துறையினர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் பொறுப்பில் மரணம் என அங்கீகரித்து அதற்குரிய மேல் நடவடிக்கைகளை விரைவாக எடுத்திட வேண்டுமென" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கொலை வழக்கு பதிவு செய்க
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “காவல்துறையினரின் தாக்குதலில் இரு வணிகர்கள் உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தவறு செய்த காவலர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் போதுமானதல்ல; சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த வணிகர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று அண்டாமல் உயிர்காக்க வேண்டிய காவல்துறையினர் எளிய மனிதர்கள் மீது கோரத்தாக்குதல் தொடுத்து அவர்களை உயிரிழக்கச் செய்வது சட்டத்தின் வழியே நிகழ்த்தப்படும் பச்சைப்படுகொலையாகும். இலஞ்சமும், ஊழலும் ஆட்சியதிகாரத்தின் எல்லா அடுக்குகளிலும் புரையோடிப் போயுள்ள நிலையில் அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் இருக்கும் இடைவெளியையும், அதிகாரம் எவ்வளவு அந்நியமாகி மக்களைப் பந்தாடுகிறது என்பதையும் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.இவ்விவகாரத்தில், ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்சு உயிரிழக்கக் காரணமான காவல்துறை அதிகாரிகளை நிரந்தரமாகப் பணியைவிட்டு நீக்கி அவர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்ய வேண்டும் எனவும், ஜெயராஜின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்,” என குறிப்பிட்டுள்ளார்.
கடுமையாக நடவடிக்கை
கில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார், “உடல் பரிசோதனையில் குடும்பத்தார் எழுப்பிய குற்றச்சாட்டுகள், உண்மையாக இருந்தால் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன்.” என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: