கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் ஒருபுறம் பட்டினி மறுபுறம் உணவு பொருட்கள் அழிப்பு

அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், வினீத் கரே
    • பதவி, பிபிசி இந்தி

உலகின் வலிமை மிக்க நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பட்டினி பிரச்சனையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பால், மே 22ஆம் தேதி நிலவரப்படி அமெரிக்காவில் சுமார் 95 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தொழில்கள் முடக்கம், பொருளாதார நடவடிக்கைகளின் வீழ்ச்சி காரணமாக ஏராளமானோர் வாழ்க்கை புரட்டி போடப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில், சிறிய வாடகை வீட்டில் தன் இரண்டு குழந்தைகளுடன் தமினா ஹக் போன்றோர் துயரத்தில் இருக்கிறார்கள். ஓட்டுநராகப் பணிபுரிந்த அவருடைய 70 வயது தந்தை கொரோனா வைரஸ் தொற்றால் மே 3ஆம் தேதி இறந்துவிட்டார்.

''அவர் இருதய நோயாளி. அத்துடன் நீரிழிவும், உயர் ரத்த அழுத்தமும் இருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தது. அவருடைய நுரையீரல்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள்,'' என்று தமினா கூறினார்.

வட அமெரிக்க இஸ்லாமிய வட்டம் (ஐ.சி.என்.ஏ.) என்ற தன்னார்வ அமைப்பு, டாஹ்மினாவின் தந்தையின் உடல் அடக்கத்துக்கு உதவி செய்திருக்கிறது. உணவுக்காக அந்த அமைப்பைதான் தமினா நம்பியிருக்கிறார்.

''நான்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு வரையில், சமையல் மற்றும் தூய்மைப் பணிகள் செய்து அல்லது வீட்டில் உதவியாளராக இருந்து சம்பாதித்து வந்தேன். ஆனால், எலும்பில் நோய்த் தொற்று ஏற்பட்டதால் அந்த வேலைகளைத் தொடர முடியவில்லை'' என்று ஜூம் மூலமாக அவர் என்னிடம் தெரிவித்தபோது என் கண்களை அவரால் பார்க்க முடியவில்லை.

அமெரிக்காவில் கொரோனா
படக்குறிப்பு, தமினா ஹக்

''எங்களுக்கு உதவக் கூடியவர்களை அனுப்பியதற்காக அல்லாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். எனக்கும் வைரஸ் தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால் வெளியே செல்ல வேண்டாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். உணவுக்கு ஏற்பாடு செய்வது பெரிய பிரச்சனையாக உள்ளது,'' என்று அவர் தெரிவித்தார்.

உணவுக்கான தனது போராட்டம் பற்றி பேசும்போது அவர் சங்கடப்படுவதை யாராலும் உணர்ந்து கொள்ள முடியும். அது சாதாரண விஷயம் அல்ல. ''பிரச்சனைகளை அல்லாஹ் தீர்த்து வைப்பார்,'' என்று அவர் நம்புகிறார்.

''உணவுப் பற்றாக்குறை பற்றி பேசுவதற்கு தெற்காசியர்கள் தயங்குகிறார்கள்'' என்று முஸ்லிம் ஹவுசிங் சேவை என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ரிஸ்வான் ரிஜ்வி, தனது கிரேட்டர் சியாட்டில் வட்டார அலுவலகத்தில் இருந்து என்னுடன் பேசியபோது தெரிவித்தார்.

''தங்கள் சமுதாயத்தில் தங்களை எப்படி பார்ப்பார்களோ என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். வேறு யாருக்கும் இது தெரியக் கூடாது என்று நினைக்கிறார்கள்'' என்றார் அவர்.

தன் வீட்டுக்கான 1,375 டாலர் மாத வாடகையை தமினா கடந்த ஐந்து மாதங்களாகச் செலுத்தவில்லை. வீட்டின் உரிமையாளர் இந்தப் பிரச்சனையை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

''ஆகஸ்ட் 20க்குப் பிறகு என் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு எங்கே செல்வது என்று எனக்குத் தெரியவில்லை'' என்று டாஹ்மினா கூறினார். வாடகை கொடுக்கவில்லை என்பதற்காக ஆகஸ்ட் 20 வரை யாரையும் காலி செய்ய நிர்பந்திக்கக் கூடாது என்று நியூயார்க் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 8 - 9 வாரத்தில், 3.6 கோடி பேருக்கு மேல் வேலை இழந்துள்ளனர். சரியான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.

1.12 கோடி குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 3.72 கோடி பேர் வீடுகளில் `உணவுக்கு உத்தரவாதமின்றி' இருப்பதாக 2018ல் வெளியான ஓர் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவில் பட்டினி அல்லது `உணவுக்கு உத்தரவாதமின்மை' என்பது, ஆரோக்கியமான இயல்பு வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான உணவு தொடர்ந்து கிடைக்காத சூழ்நிலை இருப்பதைக் குறிக்கிறது.

Greater Pittsburgh Community Food Ban

பட மூலாதாரம், Greater Pittsburgh Community Food Bank

3.72 கோடி என்ற எண்ணிக்கை, கொரோனா நெருக்கடி சூழ்நிலையில் 5.4 கோடியைத் தாண்டக் கூடும் என்று Feeding America என்ற பட்டினி நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 1.8 கோடி பேர் குழந்தைகளாக இருக்கக் கூடும்.

''இந்த நோய்த் தொற்று காரணமாக அமெரிக்காவில் நான்கில் ஒரு குழந்தை இந்த ஆண்டு பட்டினிக்கு ஆளாக நேரிடும்'' என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் ஓரிடத்தில், உணவு வங்கிக்கு வெளியே, உணவுப் பொட்டலங்களை வாங்குவதற்கு சுமார் 10 ஆயிரம் பேர் காத்திருந்தனர்.

தெற்கு புளோரிடாவில் உணவு வங்கிக்கு வெளியே உணவுக்காக பல மைல்கள் நீளத்துக்கு கார்களில் மக்கள் காத்திருந்தனர்.

அமெரிக்க மத்திய அரசின் உதவியில் நடைபெறும் கூடுதல் ஊட்டச்சத்து உதவித் திட்டத்தின் (SNAP) மூலம் கிடைக்கும் உதவிகள் போதுமானதாக இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

வழக்கமாக கடைகளில் உணவு வாங்கும் குறைந்த வருவாய் ஈட்டும் தனி நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளை அளிப்பதே SNAP திட்டத்தின் நோக்கம்.

தேவைகள் குறைந்தது, உணவு பதப்படுத்தும் ஆலைகள் மூடியது ஆகிய காரணங்களால் விஸ்கான்சின் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் விவசாயிகளால் வீணடிக்கப்படும் நிலையில் இது முரண்பட்டதாக உள்ளது.

புளோரிடாவில் பல்லாயிரம் டன் பசுமையான பீன்ஸ்களை டிராக்டர்களை ஏற்றி அழிக்கும் நிலையோ, வயல்களில் பயிர்களை அறுவடை செய்யாமல் விவசாயிகள் விட்டதால் அழுகும் நிலையோ உள்ளது.

Greater Pittsburgh Community Food Bank

பட மூலாதாரம், Greater Pittsburgh Community Food Bank

இறைச்சி பதப்படுத்தும் ஆலைகள் மூடப்பட்டதால் மின்னசோட்டாவில் தினமும் சுமார் 10 ஆயிரம் பன்றிகளும், லட்சக்கணக்கான கோழிகளும் கொல்லப்படுகின்றன.

ஒரு பக்கம் உணவுப் பொருட்கள் வீணாகும் நிலையில், உணவுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையும் இருப்பது அமெரிக்கர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது என்று சி.எஸ்.ஐ.எஸ். உலகளாவிய உணவுப் பாதுகாப்பு செயல்திட்ட டைரக்டர் கெய்ட்லின் வெல்ஷ் கூறியுள்ளார்.

''நமக்குத் தேவையான உணவும் காய்கறிகளும் இருக்கின்றன. இறைச்சி பிரியர்களுக்கு வேண்டிய அளவுக்கு விலங்குகளும் உள்ளன. வழங்கல் சங்கிலி சரியாக இல்லாததுதான் பிரச்சினை'' என்று கெய்ட்லின் வெல்ஷ் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு அரசு உதவிக்கரம் நீட்டி, விளைபொருள்கள், பால் மற்றும் இறைச்சியை கொள்முதல் செய்து உணவு வங்கிகளுக்கு வழங்கப் போவதாகச் சொல்லப்பட்டது. 19 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கான கொரோனா வைரஸ் உணவு உதவித் திட்டத்தில் இவை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அரசின் உதவி உள்ளபோதிலும் மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

''நாங்கள் ஒரு பெண்ணின் வீட்டுக்கு சென்று உணவுப் பொருட்கள் நிரம்பிய ஒரு பெட்டியைக் கொடுத்தோம். அதில் இறைச்சியும் இருந்தது'' என்று ஐ.சி.என்.ஏ. தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த அப்துல் ரௌஃப் கான் தெரிவித்தார். அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.

அப்துல் ரௌஃப்
படக்குறிப்பு, அப்துல் ரௌஃப் கான்

அது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட குடும்பம். அவருடைய கணவருக்கும் வேலை போய்விட்டது.

''ஒரு சிறுமி வந்து, அழுதுகொண்டே உள்ளே சென்றுவிட்டார். நாங்கள் ஏதாவது தவறு செய்துவிட்டோமா என்று அக்குழந்தையின் தாயிடம் கேட்டேன். வீட்டில் இறைச்சி சாப்பிட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டதாக அவர் தெரிவித்தார். அவருடைய மகள் மகிழ்ச்சியில் இருந்தார்'' என்று அப்துல் கூறினார்.

''அந்தக் குடும்பம் சிரமத்தில் இருந்திருக்கிறது. ஆனால் உதவிக்காக எங்களை நாடவில்லை'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2 மாதங்களில் இரண்டரை லட்சம் பேருக்கு மேல் இந்த அமைப்பு உதவி செய்திருப்பதாக கான் தெரிவித்தார். ஆவணத்தில் பதிவு செய்யாதவர்களின் நிலைமை மோசமாக இருக்கும். அவர்களுக்கு அரசின் உதவிகள் மறுக்கப்படும். ``அமெரிக்காவில் யாரும் உதவ மாட்டார்கள்'' என்று நியூயார்க்கைச் சேர்ந்த 60 வயதான பதிவு செய்திராத பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார்.

''மக்கள் என்னைப் பற்றிய கதையை கேட்பார்கள், வெறுமனே பேசுவார்கள்'' என்கிறார் அவர்.

பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியாக வசிக்கிறார். பாகிஸ்தானில் குஜ்ரன்வாலாவில் இருந்து ஒரு வீட்டில் வேலை செய்வதற்காக வந்த அவர் 25 ஆண்டுகளாக அங்கேயே தங்கிவிட்டார்.

''சாதாரணமான சமயங்களில் மசூதிகளில் இப்தார் விருந்துகள் நடத்தப்படும். அதில் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் மசூதிகள் மூடப்பட்டிருப்பதால் இப்தார் விருந்துகள் நடக்கவில்லை'' என்று கான் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ்

மக்களுக்கு தரப்படும் உணவுப் பெட்டிகளில் பேரிச்சை, மாவு, சர்க்கரை, உப்பு, சமையல் எண்ணெய், பீன்ஸ், அரிசி, முட்டைகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன. குளிர்பதனப் பெட்டியில் வைக்காமல் அதிக நாட்களுக்குப் பயன்படுத்தும் வகையில் அவை இருக்கும். நாங்கள் தரும் உணவு 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு 2 வாரங்களுக்குப் போதுமான அளவுக்கு இருக்கும்'' என்று அவர் தெரிவித்தார்.

தன்னார்வ அமைப்புகள் மற்றும் உணவு வங்கிகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.

''அவசரமாக உணவு தேவைப்படும் நிலையில் எங்கள் உணவு வங்கிக்கு வருபவர்களின் எண்ணிக்கை 500 மடங்கு அதிகரித்துள்ளது'' என்று கிரேட்டர் பிட்ஸ்பர்க் சமுதாய உணவு வங்கியைச் சேர்ந்த பிரியன் குலிஷ் தெரிவித்தார். இந்த அமைப்பு தென்மேற்கு பெனிசில்வேனியா உள்ளிட்ட 11 மாகாணங்களில் உணவு வழங்குகிறது.

Feeding America நெட்வொர்க் மூலமாக 200 உணவு வங்கிகள் செயல்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் 430 கோடி உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் உணவுக் கொள்முதலுக்காக நாங்கள் 5 முதல் 6 லட்சம் டாலர் வரை செலவிடுவோம். இந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 17 லட்சம் டாலர் செலவிட்டிருக்கிறோம்'' என்று பிரியன் தெரிவித்தார்.

''அதாவது சாதாரண காலத்தில் சராசரியாக செலவிடுவதைக் காட்டிலும், கடந்த இரண்டு மாதங்களில் நாங்கள் 11 லட்சம் டாலர் அதிகமாக செலவிட்டிருக்கிறோம். ஆண்டு முழுக்க கணக்கிட்டால் நாங்கள் கூடுதலாக 1 முதல் 1.5 கோடி டாலர் உணவு கொள்முதலுக்கு செலவிட வேண்டியிருக்கும்'' என்று அவர் கூறினார்.

அதேபோல தெற்கு புளோரிடாவில் உணவு வழங்கலுக்கான தேவை 600 சதவீதம் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள 2.3 லட்சம் கோடி டாலர் நிதி உதவித் திட்டங்கள் மூலம் மக்கள் கைக்கு பணம் செல்லும் போது உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ICNA

''நிறைய பேருக்கு உதவித் தொகைக்கான காசோலைகள் வரவில்லை. அது நிலுவையில் இருப்பதாக ஆன்லைன் தகவல் தெரிவிக்கிறது'' என்று ஐ.சி.என்.ஏ. நிவாரண அமைப்பைச் சேர்ந்த அப்துல் ரௌஃப் கான் தெரிவித்தார்.

உதவி அளிக்கும் அமைப்புகளுக்கு சவால்கள் காத்திருக்கின்றன என்கிறார் அவர்.

''இப்போது வரையில், எங்கள் கையிருப்பு நிறைய இருந்தது. (ஆனால்) வழங்கல் சங்கிலித் தொடரில் சில மாற்றங்களை நாங்கள் பார்க்கத் தொடங்கி இருக்கிறோம். எங்களுடைய இருப்பிற்கான ஆர்டர்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன'' என்று பிரியன் தெரிவித்தார்.

''முஸ்லிம் சமுதாயத்தில் நன்கொடையாளர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது பிரச்சனையாக உள்ளது'' என்கிறார் கான்.

அமெரிக்காவின் பெரும் பகுதியில் கட்டுப்பாடுகள் எச்சரிக்கையுடன் தளர்த்தப்படும் நிலையில் மீண்டெழுவதற்கான நம்பிக்கை அதிகரிக்கும்.

''ஊட்டச்சத்து மிகுந்த உணவு கிடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கவலை. இதுபோன்ற சமயங்களில் சத்துமிக்க உணவுகளுக்கு செலவிடுதலை குடும்பங்கள் குறைத்துக் கொள்ளக் கூடும்'' என்று கெய்ட்லின் வெல்ஷ் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: