கொரோனா வைரஸ்: மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரான் விமான சேவையால் பரவிய தொற்று - பிபிசி ஆய்வு

பட மூலாதாரம், Getty Images
இரானின் 'மஹான் ஏர்' என்ற ஒரு விமான நிறுவனம் மூலம் எப்படி மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்பதை கண்டறிய பிபிசி ஒரு விசாரணை நடத்தியது. ஆனால் இரானில் கோவிட் 19 வைரஸ் அதிகம் பரவ காரணமாக இருந்த இந்த விமான நிறுவனம் இன்னும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விமான சேவைகளுக்கு அரசாங்கம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள இந்த நேரத்திலும் எப்படி மஹான் விமானங்கள் மட்டும் இராக், ஐக்கிய அரபு எமிரேட், சிரியா போன்ற நாடுகளிடையே இயங்கியது என்பதை கண்டறிய பிபிசி அரபு சேவை மஹான் விமான நிறுவனத்தில் பணிபுரியும் சிலரிடம் பேசியது. மேலும் விமானத்தை பின்தொடர உதவும் தரவுகளையும் ஆய்வு செய்தது.
தடை உத்தரவுக்கு மத்தியிலும் இராக், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் சிரியா போன்ற நாடுகள் மஹான் ஏர் விமானங்களுக்கு மட்டும் பயணிகளுடன் தரையிரங்க அனுமதி அளித்திருந்தன.
சீனாவில் இருந்து இரான் வந்து செல்லும் அனைத்து விமானங்களுக்கும் இரான் ஜனவரி 31ம் தேதி தடை விதித்தது. மத்தியகிழக்கு நாடுகளில் வைரஸ் தொற்று பரவ இரான் முக்கிய காரணமாக இருப்பதால், பல நாடுகளும் இரானுக்கு வந்து செல்லும் விமானங்களை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ரத்து செய்தன.

இருப்பினும் பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் பயணிகள் மற்றும் விமான சேவையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் மஹான் விமானம் தொடர்ந்து இயங்கியது தெரியவந்தது. விமான சேவையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன் தொடர்பில் இருந்த பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், ஊழியர்கள் பலர் கவலை தெரிவிக்கத் தொடங்கினர். ஆனால் ஊழியர்களின் வேண்டுகோளை அந்நிறுவனம் கருத்தில் கொள்ளாமல் இயங்கியது.
இது தொடர்பாக பிபிசி எழுப்பிய கேள்விக்கு 'மஹான் ஏர்' நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை..
மஹான் ஏர் நிறுவனம்
மஹான் ஏர் நிறுவனம் இரானில் உள்ள தனியார் விமான சேவை நிறுவனமாகும். மஹான் ஏர் நிறுவனம் உலகின் 66 நாடுகளுக்கு விமான சேவையை அளித்து வருகிறது. இந்நிறுவனத்திடம் சொந்தமாக 55 விமானங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 5 மில்லியன் பயணிகள் மஹான் விமானங்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இரான் ராணுவத்தின் ஒரு கிளையான இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கும் (ஐ.ஆர்.ஜி.சி) இந்த விமான நிறுவனத்திற்கும் தொடர்புள்ளது. 2011ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கு, மஹான் ஏர் நிறுவனம் ஆயுதங்கள் கொண்டு சென்றது என்ற குற்றச்சாட்டில் அமெரிக்கா இந்நிறுவனத்தின் மீது சில பொருளாதார தடைகளை விதித்தது.
சிரியா, லெபனான் மற்றும் இராக்கில் நடைபெறும் இரானின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மஹான் ஏர் நிறுவனம் ஆதரவு அளிக்கும்.
சுகாதார ஆலோசனைகள் நிராகரிப்பு
லெபனான் மற்றும் இராக்கில் கொரோனாவால் முதல் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் மஹான் ஏர் விமானங்களில் பயணித்தவர்களே என்பதை பிபிசி அரபு சேவை உறுதி செய்கிறது. சில விமானத் தரவுகளை வைத்தும் லெபனான் மற்றும் இராக்கில் உள்ள சிலர் அளித்த தகவல்களை கொண்டும் மஹான் ஏர் நிறுவனத்தால் கொரோனா பரவியதை பிபிசி அரபு செய்திச் சேவை சுட்டிக்காட்டுகிறது.

பட மூலாதாரம், getty images
இரானின் டெஹ்ரான் நகரில் இருந்து இராக்கில் உள்ள நஜாஃப் என்ற நகரத்திற்கு w55062 என்ற எண் கொண்ட மஹான் ஏர் விமானத்தில் இரானை சேர்ந்த மாணவர் ஒருவர் கடந்த பிப்ரவரி 19 அன்று பயணம் மேற்கொண்டார். இராக்கில் முதல் முதலில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர் மஹான் விமானத்தில் பயணம் மேற்கொண்ட இந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பிப்ரவரி 24ம் தேதி உறுதி செய்யப்பட்டது.
பிப்ரவரி 20ம் தேதி அன்று லெபனானை சேர்ந்த 41 வயது பெண் இரானில் உள்ள புனித தலத்திற்கு சென்று விட்டு டெஹரானில் இருந்து லெபனானுக்கு W5112 என்ற எண் கொண்ட மஹான் ஏர் விமானம் மூலம் லெபனான் தலைநகர் பெய்ரூட் திரும்பியுள்ளார். லெபனானில் முதல் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர் இரான் சென்று திரும்பிய இந்த பெண்மணிதான்.
விமானப் பயணத்தால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்த பிறகும், இராக் மற்றும் லெபனானில் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தபோதும் மஹான் விமானம் தொடர்ந்து இயங்கியது.
பிப்ரவரி 20ம் தேதி அன்று இராக்கில் இருந்து இரான் சென்று திரும்பும் அனைத்து விமானங்களுக்கும் இராக் அரசாங்கம் தடை விதித்தது. ஆனால் இந்த தடை உத்தரவுக்கு பிறகும் இரானில் இருந்து விமானம் மூலம் இராக்கின் புனித தலங்களுக்கு வந்த பலரை இராக் அரசாங்கம் நாட்டிற்குள் வர அனுமதி அளித்துள்ளது. சுமார் 15 விமானங்கள் இந்த சேவையில் ஈடுபட்டதை பிபிசியால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும்.
இராக் அரசாங்கம் பிபிசிக்கு அளித்த தகவலில், சில விமானங்கள் திரும்பி அனுப்பப்படும் என்றும், இன்னும் சில விமானங்கள் இராக் சிவில் ஏவியேஷன் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று இராக்கில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது. இராக்கில் இருந்து இரான் செல்லும் அனைத்து விமானங்களும் தொடர்ந்து இயங்கும் ஆனால் இரானில் இருந்து வரும் பயணிகள் இராக் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சீனா மற்றும் இரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதும் விமானங்கள் இயங்கின.
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்த நேரத்திலும் இரானில் இருந்து சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் உட்பட நான்கு முக்கிய நகரங்களுக்கு மஹான் விமானங்கள் இயங்கியது பிபிசி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜனவரி 31 அன்று சீனாவிற்கு இரான் விமானங்களை இயக்கத் தடை விதித்திருந்தது. இந்த தடையை இரான் நாடே பொருட்படுத்தாமல் சீனாவிற்கு மஹான் விமானங்களை இயக்கி இருக்க வேண்டும்.
சீனாவில் உள்ள இரானியர்களை மீட்டு சொந்த நாட்டிற்கு கொண்டுவர நான்கு விமானங்களை பிப்ரவரி 5ம் தேதி வரை பயன்படுத்தியதாக சீனாவில் உள்ள சமூக வலைத்தளங்கள் சில குறிப்பிடுகின்றன. இந்த விமானங்களின் புகைப்படங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 6 மஹான் விமானங்கள் மூலம் தேவையான மருத்துவ உபகரணங்களும் கொண்டு வரப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
சீனாவிற்கு இரான் தனது விமான சேவையை தொடரப்போவதில்லை என அறிவித்த பிறகும் 157 விமானங்கள் இரான் மற்றும் சீனாவிற்கு இடையில் பயணித்தது பிபிசி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜனவரி 31 முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை இரானில் இருந்து சீனாவிற்கு நேரடியாக பயணித்த ஒரே விமான சேவை மஹான் விமான நிறுவனத்தினுடையதுதான்.
இரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நேரத்திலும், சீனா மட்டும் அல்லாமல் பல நாடுகளுக்கு இரானியர்களை மஹான் விமானம் அழைத்து சென்றுள்ளது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இரானில் இருந்து வரும் விமானங்களுக்கு சிரியா மார்ச் 8ம் தேதி தடை விதித்திருந்தது. ஆனால் இந்த தடை உத்தரவுக்கு பிறகு எட்டு மஹான் விமானங்கள் சிரியா சென்றது குறிப்பிடத்தக்கது.
மஹான் ஏர் நிறுவனம் 37 விமானங்களை துபாய்க்கும், 19 விமானங்களை துருக்கிக்கும், 18 விமானங்களை மலேசியா மற்றும் தாய்லாந்திற்கும் இயக்கியுள்ளது.
இரானில் இருந்து வேறு சில விமான நிறுவனங்களும் இயங்குகின்றன. ஆனால் அதிக எண்ணிக்கையில் மஹான் விமானங்கள் இயங்குவது தெரியவந்துள்ளது.
மஹான் ஊழியர்கள் வெளிப்படையாக பேச அனுமதி மறுப்பு
விமான சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், விமான பயணிகளால் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற உண்மையை வெளிப்படையாக கூற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதற்கு பிபிசியிடம் ஆதாரம் உள்ளது.
பிப்ரவரி மாத இறுதியில் மஹான் விமானத்தில் பணியாற்றிய 50 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹான் விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அளித்த தகவல் இது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை, பாதுகாப்பு கவசங்கள் வழங்கவில்லை என மஹான் விமான சேவையில் பணிபுரிபவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஷார்க்ஹ என்ற நாளிதழில் வெளிவந்த ஒரு செய்தியில் மஹான் ஏர் ஊழியர் ஒருவர் பேட்டி அளித்திருந்தார். அதில் ''விமானம் மூலம் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு திரும்பி வந்தவுடன் எங்களுக்கு 15 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அவகாசம் வழங்கப்படவில்லை'' என முதல் முறையாக பிப்ரவரி 27 அன்று குறிப்பிட்டிருந்தார்.
ஏப்ரல் 18ம் தேதி, மஹான் விமான நிறுவனம் நெருக்கடி நிலையில் ஊழியர்களை சரியாக கையாளவில்லை என ஒரு கடிதம் எழுதி அதில் 1300 மஹான் விமான நிறுவன ஊழியர்கள் கையெழுத்திட்டிருந்தனர். இந்த கடிதத்தை ஏவியா செய்தி நிறுவனம் வெளியிட்டது. மேலும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கக்கோரி தொடர்ந்து கோரிக்கை வைத்தபோதும், சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பும் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விமான பணியாளர்கள் தங்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நாடு முழுவதும் கொரோனா வைரஸை பரப்பியதாகவும் குற்றம் சட்டப்படுகிறார்கள்.
நிறுவனத்தில் நிலவும் நெருக்கடி சூழலை வெளிப்படையாக வெளியில் சொன்னால், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என மிரட்டி அளித்த கடிதத்தின் நகலை மஹான் ஏர் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரிடம் இருந்து பிபிசி பெற்றுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மஹான் ஏர் விமான நிறுவனத்திடம் பிபிசி விளக்கம் கேட்டது. ஆனால், இதுவரை அவர்கள் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












