You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதிகள் - அச்சத்தில் மக்கள் மற்றும் பிற செய்திகள்
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், கொரோனா வைரஸ் தொற்றால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட ஒரு சிறையில், சில கைதிகள் சுரங்கம் தோண்டி அதன் மூலம் தப்பிக்க எடுத்த முயற்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்வாய்சென்சியோவில் உள்ள அந்த சிறையில் நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் தயாரிக்கப்படும் ஆயுதங்களை கொண்டு 7 கைதிகள் தங்கள் சிறை செல்லில் சுரங்கம் தோண்ட முயற்சித்தனர்.
உள்ளூர் சண்டைகளில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கொண்டு இவர்கள் சுரங்கம் தோண்டி தப்பிக்க எடுத்த முயற்சியை சரியான நேரத்தில் தகவல் கிடைத்ததால் அதிகாரிகளால் முறியடிக்க முடிந்தது.
அந்த சிறையில் உள்ள சிறைக்காவலர்கள் உள்பட 314 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் அந்த வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த விஷயங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய அந்த கைதிகள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தி, கொரோனா அச்சத்தால் சற்றே பாதுகாப்பு குறைபாடான சூழலை பயன்படுத்தி கொள்ள முயன்றனர்.
இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் புகைப்படங்களை வெளியிட்ட சிறை காவலர்கள், இவர்கள் தோண்ட ஆரம்பித்த சுரங்கத்தின் புகைப்படம் அல்லது மற்ற தகவல்களை வெளியிடவில்லை.
கொலம்பியாவில் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சிகள் நடப்பது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான் என்றாலும், தற்போது நாடே கொரோனா அச்சத்தால் ஆழ்ந்திருக்கும் நிலையிலும், கொரோனா பாதிப்பு உள்ள சிறையில் இருந்து பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி சில கைதிகள் தப்பிக்க எடுத்த முயற்சிகள் அங்கு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னையில் 900ஐத் தாண்டிய கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நோயாளிகள் அதிகரிப்பது இதுவே முதல் முறை.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,323ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை (மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை) நேற்று 922 ஆக இருந்த நிலையில், இன்று 1035ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பவர்களில் 97 பேர் ஆண்கள். 64 பேர் பெண்கள்.
இதுகுறித்து மேலும் படிக்க: சென்னையில் 900-ஐத் தாண்டிய கொரானா நோயாளிகள் எண்ணிக்கை
'கொரோனா வைரஸ் பரவல் முடிந்தபின் சீனாவுக்கான முதலீடுகளை இந்தியா ஈர்க்கும்`
உலகம் முழுவதும் கோவிட்- 19 பெருந்தொற்று பரவலின் காரணமாக சர்வதேச பொருளாதாரம் பெருமளவில் சரிந்துள்ள நிலையில், தங்களின் உற்பத்திச் சாலைகளை சீனாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அந்த நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு நிறுவனங்கள் பரிசீலனை செய்து வருகின்றன.
சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் சர்வதேச நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் பெருமளவில் முதலீட்டைப் பெற நாம் தயாராக இருக்க வேண்டும் என்று ஏப்ரல் 27-ஆம் தேதி அன்று மாநில முதல் அமைச்சர்களுடன் நடந்த காணொலிக் காட்சி வாயிலான கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியிருந்தார் என்று இந்திய ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப் போக்குவரத்து துறைக்கும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கும் அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரி கோவிட்- 19 நோய்த்தொற்று காரணமாக சீனாவுக்கு உண்டாகியுள்ள இந்த சிக்கல் தொழில் உற்பத்தி மையமாக இந்தியா உருவாவதற்கான வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் படிக்க:'கொரோனாவுக்கு பின் சீனாவுக்கான முதலீடுகளை இந்தியா ஈர்க்கும்; புவி அரசியல் மாறும்'
நகரில் வலம் வரும் விலங்குகள்
கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், விலங்குகளுக்கு மனிதர்கள் நடமாட்டம் இல்லாத நகரில் வலம் வர ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நகர்ப்புற பகுதிகளில் உள்ள விலங்குகள் தெருக்களை உல்லாசமாக சுற்றி திரிவதைப்பார்த்து மனிதர்களும் மகிழ்கின்றனர். இது தவிர பூங்காக்கள் மற்றும் தேசிய விலங்குகள் சரணாலயத்தில் உள்ள விலங்குகளும், சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் மகிழ்ச்சியாக இருப்பதாக பூங்கா கண்காணிப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
பொதுவாக டால்ஃபின்களை நம்மால் கடற்கரையில் நின்றபடி காண முடியாது. ஆனால் தற்போது டால்ஃபின்கள் கடற்கரையோரம் வந்து செல்கின்றன என்பது ஒரு நல்ல செய்தி தான். அவ்வாறு சில காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மேலும் படிக்க: கொரோனா வைரஸ் ஊரடங்கு: உலகெங்கும் ஆளில்லா வீதிகளில் சுற்றித்திரியும் விலங்குகள்
டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த "கிறுக்குத்தனமான மிருகம்" கண்டுபிடிப்பு
"கிறுக்குத்தனமான மிருகம்" என்று அழைக்கப்படும் பூனை அளவுடைய பாலூட்டி ஒன்று பூமியில் வாழ்ந்த கடைசி டைனோசர்களுடன் மடகாஸ்கரில் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
6.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய அந்த விலங்கின் புதை படிமத்தை ஆராய்ந்ததில் இதுகுறித்து தெரியவந்துள்ளதாக நேச்சர் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலூட்டிகளின் பரிணாம வரலாற்றுப்படி, 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எலிகளை ஒத்த அளவே பாலூட்டிகள் இருந்ததாக இதுவரை நம்பப்பட்டு வந்தது.
தாங்கள் ஆராய்ந்த அந்த விலங்கு அதன் இறப்பின்போது முழு வளர்ச்சியை அடையவில்லை, ஆனால் அப்போதே அது மூன்று கிலோ எடை கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மேலும் படிக்க: டைனோசர்களுடன் வாழ்ந்த “கிறுக்குத்தனமான மிருகம்” கண்டுபிடிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: