கொரோனா வைரஸ்: 'ஆசிய நாடுகளின் வளர்ச்சி பூஜ்ஜியம் ஆகப்போகிறது' - 60 ஆண்டுகளில் இதுவே முதல் முறை

சீனா கடைகள்

பட மூலாதாரம், Getty Images

அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக ஆசிய நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாக இருக்கப்போகிறது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

1930களில் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார 'பெருமந்தத்துக்கு' (Great Depression) பின் ஆசிய பொருளாதாரத்தில் ஏற்படும் மிகப்பெரிய சரிவு இது என்று அந்த அமைப்பு எச்சரித்த பின்னர் இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆசியாவின் சேவைத் துறை மீண்டெழ கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்கிறது சர்வதேச நாணய நிதியம்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல நாடுகளிலும் அமலாகியுள்ள ஊரடங்கால் விமானப் போக்குவரத்து, வர்த்தகம், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தின் இயக்குநர் சாங்யாங் ரீ, "இவற்றை சரிசெய்ய நாடுகளின் அரசுகள் அதீதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

பயணத் தடைகள், சமூக விலகல் போன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களை இலக்கு வைத்து அரசின் கொள்கை வகுப்பாளர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

2008-09இல் உண்டான சர்வதேச பொருளாதார நெருக்கடி (4.7% வளர்ச்சி விகிதம்), 1997-98இல் உண்டான ஆசிய பொருளாதார நெருக்கடி (1.3% வளர்ச்சி விகிதம்) ஆகியவற்றின்போது இருந்த வளர்ச்சி விகிதத்தைவிடவும் இப்போது வளர்ச்சி விகிதம் குறையும் என்கிறது சர்வதேச நாணய நிதியம்.

Banner image reading 'more about coronavirus'
Banner

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் வெற்றி பெற்றால், அடுத்த ஆண்டு ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6% ஆக இருக்கும் என்று வாஷிங்டனில் தலைமையகத்தை கொண்டுள்ள இந்த அமைப்பு தெரிவிக்கிறது. ஆனால் அவ்வாறு நடப்பது 'மிகவும் உறுதியாகக் கூற முடியாத ஒன்று' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது மற்றும் வறுமையை ஒழிப்பது ஆகியவையே இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களாக உள்ளன.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு வளரும் நாடுகளுக்கு கடனுதவி வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் முக்கிய பங்காற்றுகிறது.

சீனா எந்த அளவுக்கு பாதிக்கும்?

சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2020இல் 1.2%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனேவே கணக்கிடப்பட்ட 6% எனும் அளவைவிட மிகவும் குறைவு.

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து சீனா மீண்டு வந்தாலும், இந்த தொற்று மீண்டும் பரவவும், இயல்பு நிலை திரும்ப நீண்ட காலம் ஆகவும் வாய்ப்பும் உள்ளதால் சீனாவுக்கு அபாயங்களும் உள்ளன என்றும் சர்வதே நாணய நிதியம் எச்சரிக்கிறது.

கொரோன வைரஸ்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனா இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை முழுவீச்சில் தொடங்கி, அடுத்த ஆண்டு 9.2% அளவு வளரும் என்று இந்த அமைப்பால் கணிக்கப்பட்டுள்ளது.

'இந்த தலைமுறையின் பெருமந்தம்'

கரிஷ்மா வஸ்வாணி, ஆசிய வர்த்தகப்பிரிவு செய்தியாளர்

60 ஆண்டுகளில் முதல் முறையாக ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியம் சதவிகிதம் எனும் அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, ஆசிய பொருளாதார நெருக்கடி காலகட்டத்தை கடந்து வந்தவர்களுக்கு நிதி நெருக்கடி, சொத்துகளின் மதிப்பு வீழ்ச்சி, பல கோடி வேலை இழப்பு உள்ளிட்ட அவலமான பழைய நினைவுகளைத் தூண்டும்.

கொரோனா வைரஸால் உண்டாகும் பொருளாதார வீழ்ச்சி இந்தத் தலைமுறையின் பெருமந்தமாக இருக்கப்போகிறது.

ஆசிய பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள் இதை எதிர்கொள்ளும் திறனுடன் உள்ளன. ஆனால் பல நாடுகள் அதிக மக்கள்தொகை, குறைவான வளங்கள், அரசியல் நிலையின்மைக்கான சாத்தியம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளன.

அந்த நாடுகளின் மக்கள் உடல்நலப் பாதிப்பு அல்லது பசி ஆகியவற்றில் ஒன்றையோ, அவை இரண்டையுமோ எதிர்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: