கொரோனா வைரஸ்: தமிழகத்தில் 2 வகை வௌவால்களில் கோவிட்-19 நோய்த்தொற்று - உண்மை நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி: தமிழகத்தில் 2 வகை வௌவால்களில் கொரோனா வைரஸ் - உண்மை நிலவரம் என்ன?
தமிழகத்தில் காணப்படும் 2 வகை வௌவால்களில் கொரோனா வைரஸ் காணப்படுவது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாசலப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் காணப்படுகிற 2 வகை வௌவால்களில் “வௌவால் கொரோனா” வைரஸ் (பேட் கோவிட்) காணப்படுகிறது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுபற்றிய ஆய்வை நடத்திய புனே தேசிய வைராலஜி நிறுவனத்தின் விஞ்ஞானி பிரக்யா டி யாதவ், “பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிடெரோபஸ் வௌவால் மற்றும் ரூசெட்டஸ் வௌவால் வகைகளை ஆராய்ந்தோம். அவற்றின் தொண்டை மற்றும் மலக்குடல் மாதிரிகளை எடுத்து ஆராயப்பட்டது.”
“இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் காணப்படுகிற வௌவால்களில் ‘வௌவால் கொரோனா’ வைரஸ் இருப்பது தெரிய வந்தது. எங்கள் ஆய்வை உறுதி செய்வதற்கு, ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையும் நடத்தினோம். அதே நேரத்தில், கர்நாடகம், சண்டிகர், பஞ்சாப், தெலுங்கானா, குஜராத், ஒடிசா மாநிலங்களில் காணப்படுகிற வௌவால்களில் ‘வௌவால் கொரோனா’ வைரஸ் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் காணப்படுகிற வௌவால்களில் காணப்படுகிற “வௌவால் கொரோனா” வைரசுக்கும், மனிதர்களுக்கு தற்போது பரவி வருகிற கொரோனா வைரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை: “ஜூன் 1-ம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை”

பட மூலாதாரம், Getty Images
தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு இந்திய துணைக் கண்டத்தில் ஜூன் 1-ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:
'இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் நீர் ஆதாரத்தைப் பூர்த்தி செய்யும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்குகிறது. தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் மழை இயல்பான அளவில் இருக்கும்.”
“பொதுவாக தென்மேற்குப் பருவமழை இந்திய துணைக் கண்டத்தில் கேரளாவிலிருந்துதான் தொடங்கும். அதன் அடிப்படையில் கேரளாவில் ஜூன் 1-ம் தேதி தொடங்கும். தமிழகத்தில் அக்டோபர் 15-ம் தேதி தென்மேற்குப் பருவமழை முடிவடையும். அதன் பின்னர் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கும்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: ‘திருப்பூர் இருக்கு, சீனா எதுக்கு?’
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு தேவைப்படும் பாதுகாப்பு கவச உடைகளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை விடுத்து, ஆடை உற்பத்தியில் சிறந்து விளங்கும் தமிழகத்தின் திருப்பூரிலேயே தயாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிபிஇ எனப்படும் மருத்துவ பாதுகாப்பு கவச உடைகளுக்கான தேவை இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. இதை ஈடுகட்டுவதற்காக சீனாவில் இருந்து அவற்றை இறக்குமதி செய்யும் முயற்சிகள் உடனடியாக பலனளிக்கவில்லை. இந்நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தேவையான முகக்கவசங்கள் உள்ளிட்ட கவச உடைகளை திருப்பூரிலேயே தயாரிக்க முடியும் என்று கூறுகிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்.
மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பும், ஊக்கமும் இருந்தால் களையிழந்துள்ள திருப்பூருக்கு இதுபோன்ற வாய்ப்புகளின் மூலம் புத்துயிரூட்ட முடியுமென்று அவர் கூறுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.













