You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Dwarfism: உலகை உலுக்கிய ஆதிக்குடி சிறுவன், கண்ணீர் துடைக்க கரம் கோர்த்த மனிதநேயர்கள்
ஒரு சிறுவனின் கண்ணீரைத் துடைக்கக் கண்டங்களைத் தாண்டி மனிதநேயமிக்க மக்கள் கரம் கோர்த்து இருக்கிறார்கள். சக மனிதன் மீதான பாசம், பரிவு, அன்பு மரணித்துவிடவில்லை என நிரூபித்து இருக்கிறார்கள்.
"நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என ஒரு குழந்தை தன் தாயிடம் கூறினால், அந்த தாயின் மனநிலை எப்படியானதாக இருக்கும். அவர் எப்படியான துயரத்தை அடைவார். தாயின் துயரத்தைக்கூட விடுங்கள். அந்த குழந்தை எப்படியான துயரத்தைச் சந்தித்து இருந்தால், தாம் தற்கொலை செய்து கொள்ள போவதாகக் கூறி இருக்கும்.
உலகை உலுக்கிய அழுகுரல்
கண்டங்களை கடந்து சமூக ஊடகங்களில் அந்த குழந்தையின் அழுகுரல்தான் நேற்று நிறைந்திருந்தது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெயில்ஸ் தனது மகன் குவேடன் பெயில்ஸ் அழும் ஆறு நிமிட வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்து இருந்தார். குள்ளமாக (Dwarf) இருக்கும் அந்த சிறுவன் தன் உருவத்தால் கிண்டலுக்கு உள்ளாவதாகவும், வாழப்பிடிக்கவில்லை என்றும் அந்த காணொளியில் கூறி அழுது இருந்தான்.
"நீங்கள் கிண்டல் செய்வதால், ஒருவர் அடையும் மன வேதனை இதுதான்," என்று அந்த காணொளியில் பெயில்ஸ் குறிப்பிட்டு இருந்தார். அந்த காணொளியை பலர் பகிர்ந்து இருந்தனர்.
யார் இவர்கள்... காணொளியில் என்ன இருந்தது?
ஆஸ்திரேலியாவின் அபோர்ஜினல் இனத்தை சேர்ந்தவர்கள் குவேடன் பெயில்ஸ் குடும்பத்தினர். ஆஸ்திரேலியாவின் மிகவும் பழமையான, பூர்வகுடி இனம் அபோர்ஜினல் இனம்.
அவர் பகிர்ந்திருந்த காணொளியில், "தினம், தினம் இப்படியான கிண்டல்களையும், கேலியையும்தான் என் மகன் எதிர்கொள்கிறான். நீங்கள் கிண்டல் செய்வதால் இதுதான் நடக்கிறது. உங்களது பிள்ளைகளுக்கு, குடும்பத்தினருக்கு, உங்கள் நண்பர்களுக்கு தயவு செய்து சொல்லிக் கொடுங்கள்," என்று பகிர்ந்து இருந்தார்.
திரண்ட நிதி
இப்படியான சூழலில் அந்த சிறுவனை டிஸ்னிலேண்ட் அழைத்துச் செல்வதற்காக நிதி திரட்டும் முயற்சியில் இறங்கினார் அமெரிக்க நடிகர் பிராட் வில்லியம்ஸ்.
பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் திரட்டுவதற்கு இலக்கு வைக்கப்பட்டிருந்து. ஆனால் இப்போது முப்பது மடங்கு அதிகமாக, அதாவது ஏறத்தாழ 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் குவிந்துள்ளன.
ரக்பி விளையாட்டு வீரர்கள் முதல் திரைப்பட நட்சத்திரம் என பலர் நிதி அளித்து அந்த சிறுவனை உற்சாகப்படுத்தி உள்ளனர்.
"கேலி, கிண்டல் செய்வது தங்கள் உரிமை என பலர் நினைத்துக் கொள்கிறார்கள்," என்கிறார் குள்ள மனிதர்களுக்காக அமைப்பு நடத்தி வரும் கிலியன் மார்ட்டிம்.
நாங்களும் உங்களை போன்ற சக மனிதர்கள்தான். எங்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தாதீர்கள் என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: