You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
coronavirus news: ஒரு ஊழியருக்கு கொரோனா - 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சிங்கப்பூர் வங்கி
ஒரு ஊழியருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதால் குறிப்பிட்ட வங்கிக் கிளையில் வேலை செய்யும் 300 பேரையும் உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவைத்தது சிங்கப்பூரில் உள்ள டி.பி.எஸ். என்னும் ஒரு மிகப்பெரிய வங்கி.
இந்த வங்கிக் கிளை அமைந்திருக்கும் கட்டடத்தின் 43வது மாடியில் வேலை செய்யும் 300 ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிடும்படி புதன்கிழமை கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
சிங்கப்பூரில் ஏற்கெனவே 47 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சீனா தவிர்த்து, அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.
சீன பெருநிலப் பரப்பில் கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் எண்ணிக்கை, 44 ஆயிரம். 20 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவயிருக்கிறது.
குறிப்பிட்ட டி.பி.எஸ். வங்கியின் ஊழியர் செவ்வாய்க்கிழமை பரிசோதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் வேலை செய்த குறிப்பிட்ட தளத்தில் வேலை செய்யும் 300 பேரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்தே வேலை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர் என்று அந்த வங்கி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சிக்கலான இத்தருணத்தில் குறிப்பிட்ட ஊழியருக்கும், அவரது குடும்பத்துக்கும் தேவையான எல்லா ஆதரவையும், வழிகாட்டுதலையும் வங்கி அளிக்கும்," என்றும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.
யார் யார் அந்தக் குறிப்பிட்ட ஊழியருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது என்பது ஆராயப்படுகிறது. மெரினா பே ஃபினான்சியல் சென்டர் கட்டடத்தின் மின் தூக்கி, கழிப்பிடங்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு இடங்கள், முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன.
வீட்டுக்கு அனுப்பப்பட்ட எல்லா ஊழியர்களுக்கும், தெர்மாமீட்டர், முகக் கவசம், கிருமி நீக்கிகள் ஆகியவை உள்ளடங்கிய பராமரிப்பு உபகரணத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவ உதவிக்கான சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் 'கிருமித் தொற்று எதிர்வினை அமைப்பு' இந்தக் கிருமித் தொற்று தொடர்பான எச்சரிக்கை சமிக்ஞையை ஆரஞ்சு நிறமாக உயர்த்தியுள்ளது. இதன் பொருள், இந்த நோய் தீவிரமானது, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது என்பதாகும்.
இதன் விளைவாக, எல்லா நிறுவனங்களும், பொது இடங்களும், தங்கள் ஊழியர்களை, வருகை தருவோரை, காய்ச்சல் இருக்கிறதா என்று சோதிக்கத் தொடங்கியுள்ளன.
கோவிட்-19 என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படத் தொடங்கியுள்ள இந்த நோயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சீனாவில் 1,100ஐக் கடந்துள்ளது. எனினும், புதிதாகக் கண்டறியப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக மட்டுப்படத் தொடங்கியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: