"விஜய் படங்களை நான் ரசித்திருக்கிறேன்" - பொன். ராதாகிருஷ்ணன்

நடிகர் விஜய் மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை. அவரின் படங்களில் அவரை நான் ரசித்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன்.

"நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையோடு பாஜகவை தொடர்புபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வருமானவரித் துறையினர் அவர்களது கடமையைச் செய்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு எது உண்மை என்பது தெரியவரும். நெய்வேலியில் பாதுகாக்கப்பட்ட ஓர் இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்திருக்கக்கூடாது. நடிகர் விஜயின் படப்பிடிப்பு நடந்ததால் பாஜகவினர் முற்றுகையிடவில்லை, படப்பிடிப்பின் காரணமாக அங்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு உண்டாகும். அதை கருதியே பாஜகவினர் அங்கு போராட்டம் நடத்தினர்," என்று கோவையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

"எனக்கும் நடிகர் விஜய்க்கும் எந்தவிதமான தனிப்பட்ட மோதலும் இல்லை. நடிகர் விஜயை அவரது படங்களில் நான் ரசித்து இருக்கிறேன்," என அவர் தெரிவித்தார்.

மேலும், நடிகர் ரஜினியின் அரசியல் மற்றும் பாமகவுடனான கூட்டணி குறித்து தமிழருவி மணியன் தெரிவித்த கருத்து பற்றி பேசிய அவர், "பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எது நடந்தாலும் தமிழக மக்களுக்கு நன்மையாக நடக்கும் என எதிர்பார்க்கிறேன்," என்றார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "டெல்லியில் முந்தைய தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட அதிக வாக்குகளை இந்த முறை பாஜக பெற்றுள்ளது. பொய்யான சில வாக்குறுதிகளை அளித்தும், இலவசத் திட்டங்களை அறிவித்தும், முந்தைய திட்டங்களை பட்டை தீட்டியும் தற்போது ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணமாக இருந்த பிரசாந்த் கிஷோர் மிகவும் திறமைசாலி. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை அவருடைய கணிப்பு தோல்வியில்தான் முடியும். பிரசாந்த் கிஷோர் ஒரு சிறந்த ஓட்டுநர். ஆனால் தமிழகத்தில் அவர் ஓட்டுவதற்காக தேர்வு செய்திருப்பது மிகப்பழமையான வாகனம்," என திமுகவை விமர்சித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.

மேலும், "பாஜக தீவிர இந்துத்துவ அரசியலை முன் வைப்பதாகவும் ஆம் ஆத்மி மிதமான இந்துத்துவ அரசியலை முன்வைப்பதாகவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். அந்த விதத்தில் இந்துத்துவா இல்லாமல் அரசியலில் எதுவும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது," என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: