டெல்லி தேர்தல் முடிவுகள்: ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் என்ன?

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமையன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது.

இதன்படி, ஆம் ஆத்மி 62 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெறுவதற்கு 36 இடங்கள் போதும் என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி இறுதி நிலவரப்படி 62 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது .

அதேவேளையில், 1998 முதல் 2013 வரை 15 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

பிரதான கட்சிகளின் வாக்கு சதவீதம் என்ன?

2020 டெல்லி சட்டமன்ற தேர்தலில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி 53.57 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் 38.51-ஆக பாஜகவின் வாக்கு சதவீதம் உள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 4.26 மட்டுமே. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு சதவீதம் முறையே 0.01 மற்றும் 0.02 ஆகும்.

இதேவேளையில், கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த முந்தைய டெல்லி சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு சதவீதம் 54.59 ஆகும். அதேபோல் இந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 32.78 மற்றும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 9.70 ஆகும்.

இதன்படி, ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் 1 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதேவேளையில் பாஜகவின் வாக்குகள் 5 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் சரிபாதிக்கும் மேலாக குறைந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: