Coronavirus News: கலங்கவைக்கும் மருத்துவப் பணிக்கு நடுவில் இதயங்களை இணைக்கும் கொரோனா வைரஸ்

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால் 900க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் வைரஸ் தொற்று பரவுவது இப்போதுதான் மட்டுப்படத் தொடங்கியுள்ளது. ஆனாலும், சீனாவில் களத்தில் உள்ள நிலைமைகள் பற்றிய தகவல்கள் குறைவாகவே வெளியில் தெரிகின்றன.

ஆரம்பத்தில் இந்த ஆட்கொல்லி நோய் பற்றி அந்த நாட்டில் இருந்து செய்தி நிறுவனங்கள் விரிவாக தகவல்களை வெளியிட முடிந்தது.

இருந்தபோதிலும், கடந்த சில நாட்களில், வைரஸ் தடுப்பில் அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் பல கட்டுரைகள் இணையதளங்களில் நீக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது ஒரு டாக்டர் விடுத்த எச்சரிக்கைகளை வெளிவராமல் தடுக்க அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.

அபூர்வமான நிகழ்வாக ஹூபேயில் உள்ள சுகாதார அலுவலர் ஒருவருடன் பிபிசி பேசியது. இந்த வைரஸ் பரவியதன் முக்கிய மையமாக அந்த மாகாணம் தான் உள்ளது.

தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொள்வதற்காக, தன் பெயரை யாவோ என குறிப்பிடுமாறு அந்தப் பெண்மணி கேட்டுக்கொண்டார்.

ஹுபேய் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரான ஜியாங்கியாங் நகரில் ஒரு மருத்துவமனையில் யாவோ பணிபுரிகிறார். ``காய்ச்சல் கிளினிக்'' என குறிப்பிடப்படும் மையத்தில் அவர் வேலை பார்க்கிறார். அங்கு கொண்டு வரப்படும் ரத்தத்தில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என ஆய்வு செய்து கண்டறிவது அவருடைய வேலை.

இந்த நோய் பரவுவதற்கு முன்னதாக, சீன புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாட குவாங்ஜோவ் நகருக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

அவருக்கு முன்னதாக அவருடைய தாயும் குழந்தையும் அங்கு சென்றுவிட்டனர். ஆனால் நோய் பரவத் தொடங்கியதும் ஜியாங்கியாங்கில் இருந்து சேவை செய்ய அவர் முன்வந்தார்.

``நம் எல்லோருக்கும் ஒரு முறை தான் வாழ்க்கை என்பது நிஜம். ஆனால் `நீ போயாக வேண்டும்' என்ற பலத்த குரல் என்னுள் ஒலித்துக் கொண்டிருந்தது'' என்று பிபிசியிடம் அவர் கூறினார்.

முதலில் தன்னுடைய முடிவு பற்றிய சந்தேகங்களுக்கு அவர் விடை காண வேண்டியிருந்தது.

``எனக்கு நானே கூறிக் கொண்டது: தயார்படுத்திக் கொள். உன்னை நன்றாக பாதுகாத்துக் கொள்'' என்று யாவோ தெரிவித்தார். ``பாதுகாப்பு கவச உடை இல்லாவிட்டாலும், நான் ஒரு மழை கோட்டை அணிந்து கொள்வேன். மாஸ்க் கிடைக்காவிட்டால், எனக்கு ஒரு மாஸ்க் அனுப்புமாறு சீனா முழுக்க உள்ள நண்பர்களை நான் கேட்டுக் கொள்வேன். எல்லாவற்றுக்கும் எப்போதும் ஒரு வழி கிடைக்கும்'' என்கிறார் அவர்.

தாம் எதிர்பார்த்ததைவிட மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் தாராளமாகவே கிடைக்கின்றன என்று யாவோ தெரிவித்தார். தேவையான உபகரணங்களை அரசு வழங்கியுள்ளது. இதில் உதவிகரமாக தனியார் நிறுவனங்களும் பொருள்களை நன்கொடையாக அனுப்பியுள்ளன.

இருந்தபோதிலும் பாதுகாப்பு மாஸ்க் பற்றாக்குறை இருக்கிறது. பணியில் உள்ள எல்லோருக்கும் மாஸ்க் கிடைக்கவில்லை.

``இது சிரமமான பணி. மிகவும் சோகமானது, மனதை உருக்குலைய வைக்கக் கூடியது. பெரும்பாலான நேரங்களில், எங்களுடைய பாதுகாப்பு பற்றி சிந்திக்கக்கூட எங்களுக்கு நேரம் இல்லை'' என்றார் யாவோ.

``மிகுந்த கவனத்துடன் நோயாளிகளுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனெனில் பலரும் மிகுந்த பயத்துடன் எங்களிடம் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களில் சிலர் பதற்றத்தில் நினைவிழக்கும் நிலையில் வருகின்றனர்.''

அதிக எண்ணிக்கையில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவமனை ஊழியர்கள், ஒவ்வொரு ஷிப்டிலும் 10 மணி நேரம் வரை வேலை பார்க்கின்றனர். இந்த ஷிப்டு நேரங்களில் யாரும் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, ஓய்வெடுப்பது அல்லது கழிப்பறை செல்வது கூட கிடையாது என்று யாவோ கூறினார்.

``ஷிப்டு முடிந்து, பாதுகாப்பு உடைகளை நாங்கள் கழற்றும்போது, உள்ளே இருக்கும் உடைகள் வியர்வையால் முழுக்க நனைந்திருக்கும்'' என்றார் அவர். ``எங்களுடைய நெற்றி, மூக்கு, கழுத்து மற்றும் முகத்தில் மாஸ்க் அழுந்தியதன் ஆழமான பள்ளம் தெரியும், சில நேரங்களில் அதனால் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டிருக்கும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

``என் சக அலுவலர்கள் பலர் ஷிப்டு முடிந்ததும் இருக்கையில் அமர்ந்தபடியே தூங்கிவிடுகிறார்கள். ஏனெனில் நடக்க முடியாத அளவுக்கு அவர்கள் மிகுந்த களைப்பாகி இருக்கிறார்கள்'' என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், மருத்துவமனை ஊழியர்கள் யாருக்கும் இந்த வைரஸ் தொற்று பரவவில்லை என்றும் யாவோ கூறினார்.

மக்களின் கனிவான மெசேஜ்கள் தனக்கும், தன்னுடைய சகாக்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். சிலர் தங்களுக்கு உணவும், தினசரி பயன்பாட்டுக்கான பொருட்களும் அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

``அவர்கள் வீடுகளில் தனிமையில் வைக்கப்பட்டிருந்தாலும், எங்கள் இதயங்களை வைரஸ் இணைத்துள்ளது என கருதுகிறேன்'' என்று யாவோ கூறினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து சீன அரசு ``ஓரளவுக்கு வேகமாக'' நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

``மேற்கத்திய நாடுகளில், சுதந்திரம் அல்லது மனித உரிமைகள் பற்றி நிறைய பேசுகிறீர்கள். ஆனால் இப்போது சீனாவில் வாழ்வா சாவா என்பது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்'' என்றார் யாவோ.

``நாளை சூரிய உதயத்தை நாம் பார்ப்போமா என்பது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே அனைத்து மக்களும் செய்ய வேண்டியது, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, மருத்துவ அலுவலர்களுக்கு ஆதரவு தருவது தான்'' என்று யாவோ கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: