You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனாவை தவிர்க்க 'சலாம் மலேசியா' போதும்; கைகுலுக்க வேண்டாம்
கொரோனா கிருமித் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள பிறருடன் கைகுலுக்குவதை தவிர்க்குமாறு மலேசிய சுகாதாரத்துறை துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் (Dr Lee Boon Chye) அறிவுறுத்தி உள்ளார்.
மாறாக ஒருவருக்கு வணக்கம் தெரிவிக்கவோ அல்லது வாழ்த்து தெரிவித்து வரவேற்கவோ 'சலாம் மலேசியா' எனக் குறிப்பிடலாம் என்று அவர் கூறினார்.
அதாவது, ஒருவர் தனது வலது கையை தன் நெஞ்சின் மீது வைத்து வணக்கம் தெரிவிப்பதே 'சலாம் மலேசியா' என அவர் விளக்கம் அளித்தார்.
கொரோனா கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மலேசிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிப்ரவரி 9ஆம் தேதி இரவு வரையிலான நிலவரப்படி மலேசியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக இருந்தது.
"உமிழ்நீர்த் துளிகள் மூலமாகவும் கொரோனா கிருமி பரவும்"
இந்நிலையில், மலேசியாவின் ஈப்போ நகரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் அந்நாட்டின் மனிதவளத்துறை அமைச்சர் குலசேகரனுடன் கலந்து கொண்டார் துணையமைச்சர் டாக்டர் லீ பூன் சாய். அப்போது பக்தர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா கிருமியின் தாக்கம் குறையும் வரை பிறருடன் கைகுலுக்குவதை தவிர்ப்பது நல்லது என அவர் அறிவுறுத்தினார். மேலும் 'சலாம் மலேசியா' குறித்தும் விவரித்தார்.
"கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொள்ளும் போது நமக்கும் கிருமித் தொற்று ஏற்படுகிறது. கொரோனா கிருமி பாதிப்பு உள்ள ஒருவர் நமக்கு மூன்று அடி தூரத்தில் இருந்தபடி இருமினால் கூட போதும், நமக்கும் கிருமி பாதிப்பு ஏற்படக்கூடும்.
"பாதிக்கப்பட்ட நபர் இருமுகிற போது, அவரது உமிழ்நீர்த் துளிகள் மூலமாக கிருமி நமக்கும் கடத்தப்படும். மேலும், அந்த உமிழ்நீர்த் துளிகள் அருகிலுள்ள மேசை, நாற்காலிகள், மின் தூக்கி (Lift) உள்ளிட்ட மக்கள் புழங்கக்கூடிய இடங்களின் மீது படலாம், விழலாம்.
"அப்படி நிகழும் பட்சத்தில், அந்தத் துளிகளில் உள்ள கொரோனா கிருமியானது சில மணி நேரங்களுக்கு உயிர்ப்புடன் இருக்கும். அந்தத் துளிகளை ஒருவர் தொட நேர்ந்தால், அவருக்கும் கிருமித்தொற்று ஏற்படும்," என்றார் துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய்.
கொரோனா கிருமி பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஒவ்வொரு தனி நபரும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவுதல், கிருமி நீக்கிகள் கொண்டு கைகளைச் சுத்தப்படுத்துதல் அவசியம் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.
"சிங்கப்பூர் செல்ல மலேசியர்களுக்குத் தடையேதும் இல்லை"
சிங்கப்பூரில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், மலேசிய குடிமக்கள் அந்நாட்டிற்குச் சென்று வர தடையேதும் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.
சிங்கப்பூரால் நிலைமையைச் சமாளிக்க இயலும் என்றும், கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் மலேசிய அரசு நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் சிங்கப்பூர் கிருமித்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போகும் பட்சத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என துணையமைச்சர் லீ பூன் சாய் குறிப்பிட்டதாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: