You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரே நாளில் ரூ. 144.5 விலை ஏறிய சமையல் எரிவாயு
உலக அளவில் நடந்த விலை ஏற்றத்தின் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஒரே நாளில் 144 ரூபாய் 50 காசுகள் அதிகரித்துள்ளது.
அதே நேரம், நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தரப்படும் மானியமும் கிட்டத்தட்ட அதே அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
14.2 கிலோ எடையுள்ள இல்லங்களுக்கான சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.714ல் இருந்து ரூ.858.50 ஆக உயர்ந்துள்ளது என அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
2014ஆம் ஆண்டு சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.220 உயர்ந்து, 1,241 ரூபாய் ஆனது. அதன் பிறகு தற்போதுதான் ஒரே நாளில் அதிகப்படியான விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் தனியாக செலுத்தப்படுகிறது. இந்த மானியம் இந்த விலை உயர்வுக்குப் பிறகு இரு மடங்காக உயர்த்தப்படும். தற்போது ஒரு சிலிண்டருக்கு மானியம் ரூ. 153.86 வழங்கப்படுகிறது. இந்த மானியம் இனி 291.48 ஆக உயரும். இதனால் மானிய சிலிண்டர் வாங்குபவர்களுக்கு இந்த விலை உயர்வால் பெரிய தாக்கம் இருக்காது.
பிரதமரின் உஜ்வலா திட்டப் பயனாளிகளுக்கு ஒரு சிலிண்டருக்கான மானியம் ரூ. 174.86ல் இருந்து 312.48 ஆக உயரும்.
சமையலுக்கு சுற்றுச் சூழலுக்கு உகந்த எரிபொருளைத் தருவதற்காக தொடங்கப்பட்ட உஜ்வலா திட்டத்தின் கீழ் 8 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.
சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று மாற்றியமைக்கப்படும். ஆனால், இந்த மாதம் இந்த விலை உயர்வு அறிவிக்கப்படுவதற்கு இரண்டு வார காலம் தாமதமாகியுள்ளது. இவ்வளவு பெரிய விலை உயர்வை செய்வதற்கு ஒப்புதல்களைப் பெறவேண்டியிருந்தது என்று இத்துறை அலுவலர்கள் கூறுவதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறுகிறது.
அதே நேரம், டெல்லி சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டே இந்த விலை உயர்வு தள்ளிப்போடப்பட்டிருக்கவேண்டும் என்று பிறர் கருத்துக் கூறுவதாகவும் அது தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: