You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#ISWOTY: ஓடுவதற்கு மைதானம் இல்லை பின் எப்படி ஒலிம்பிக் மெடல் கிடைக்கும்?
பெண் குழந்தைகள் என்றாலே விளையாட்டை விடப் படிப்பில்தான் கவனம் செலுத்தவேண்டும் என்னும் கற்பிதத்தைப் பெற்றோர் கைவிடவேண்டும் என்கிறார் அனுபவமிக்க தடகள பயிற்சியாளர் நாகராஜன்.
2019ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய வீராங்கனை விருது வழங்கும் விழாவை இந்தியாவில் முதன்முறையாக நடத்துகிறது பிபிசி.
2019ம் ஆண்டின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனையைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில், இறுதிக் கட்ட தேர்வாக, இணையத்தில் வாக்கெடுப்பு நடந்துவருகிறது. இந்த வாக்கெடுப்பில் பங்கெடுத்த, நாகராஜன் விளையாட்டுத்துறையில் பெண்கள் சந்திக்கும் தடைகள் குறித்து விரிவாகப் பேசினார்.
சென்னையைச் சேர்ந்த பயிற்சியாளர் நாகராஜன் பெண் குழந்தைகளை வளர்க்கும்போதே அவர்களின் கல்விக்கு மட்டும்தான் பெரும்பாலான பெற்றோர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார் என்கிறார். ''ஒரு பட்டதாரியாக இருக்கவேண்டும் என்பது அவசியம்தான். ஆனால் விளையாட்டுத்துறையில் தற்போது பெண்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. தடகள போட்டிகளைப் பொறுத்தவரை, பெரிய செலவுகள் இல்லாமல், உடற்பயிற்சி, கடுமையான உழைப்பை மட்டுமே நம்பி சாதிக்கமுடியும். பலவகையான ஓட்டம், எறிதல், நடத்தல், தாண்டுதல் உள்ளிட்ட விதவிதமான தடகள போட்டிகள் உள்ளன. இந்த போட்டிகள் பெண்களின் உடல்நலனுக்குப் பெரிதும் உதவும்,''என்றார்.
விளையாட்டு வீரராக வளரும் பெண் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று கூறும் நாகராஜன், ''விளையாட்டுத் துறையில் ஈடுபடும் பெண்களுக்கு ஆண்தன்மை வந்துவிடும் என்ற தவறான எண்ணம் சமூகத்தில் பலகாலமாக நிலவுகிறது. இந்த கற்பிதங்களை இந்த நவீன காலத்திலாவது நாம் ஒழிக்கவேண்டும். தொடர்ந்து விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு உடல் உறுதி மட்டுமல்ல, மனவுறுதி அதிகமாகவே இருக்கும். அவர்களின் திருமண வாழக்கையில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள்,''என்கிறார் நாகராஜன்.
விளையாட்டுத் துறையில் பெண்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த அரசின் முன்னெடுப்புகளோடு, பெற்றோரின் அரவணைப்பும் அவசியம் என்கிறார் அவர்.
இந்திய நகரங்களிலும், கிராமங்களிலும் பெண் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானங்கள் குறைவாக உள்ளன என்றும் கூறுகிறார் நாகராஜன். ''சென்னை நகரம் உள்ளிட்ட பல நகரங்களில் பொது இடங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களில், பெண் குழந்தைகளைப் பார்ப்பது கடினம். மைதானங்கள் ஆண்களுக்கானவை என்ற எண்ணமும் உள்ளது. பெண்களுக்கான மைதானங்கள் தேவை. ஓடுவதற்கான இடம் இல்லாமல் ஒலிம்பிக் மெடல் மட்டும் தேவை என நாம் எதிர்பார்க்கிறோம்,''என்கிறார்.
பிற செய்திகள்:
- வென்றது ஆம் ஆத்மி: சாமானிய தோற்றம், மோதியுடன் மோதல் - யார் இந்த அரவிந்த் கேஜ்ரிவால்?
- உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்தா? வல்லுநர்கள் கூறுவது என்ன?
- CAA NRCக்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? - வல்லுநர்கள் கூறுவது என்ன?
- காவிரிக்கு கைகொடுத்த முதல்வர் கடலூரை கைவிட்டுவிட்டாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: