You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Coronavirus News:: "கிண்டல் செய்யாதீர்கள், பொய் செய்திகளை பரப்பாதீர்கள்" - எச்சரித்த உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸ் குறித்துப் பொய் செய்திகளைப் பரப்பாதீர்கள். அது குறித்து கிண்டல் செய்யாதீர்கள் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சீனாவில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் இந்த நோய் சிக்கலில் இது ஒரு மோசமான நாளாக அமைந்தது. இதன் மூலம் சீனாவில் மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 908 ஆகியுள்ளது.
பொய் பரப்புரைகள்
சூழல் இவ்வாறாக இருக்கும் போது, பொய் பரப்புரைகள் எங்களது முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.
34,800 பேருக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் பெரும்பாலானவர்கள் சீனாவை சேர்ந்தவர்கள். சீனாவில் இதுவரை 908 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர். சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸில் ஒருவர் பலியாகி உள்ளார்.
இப்படியான சூழலில் மீட்புப் பணியில் நமது கதாநாயகர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்று கூறி உள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "இது போன்ற பொய் செய்திகள் நமது கதாநாயகர்கள் மேற்கொண்டுள்ள பணியை மேலும் சிரமமாக்கிவிடுகிறது," என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "உண்மையில் நாங்கள் வைரஸை எதிர்த்து போராடுவதைவிட, இதுபோன்ற பொய் செய்திகளை, கிண்டல்களை எதிர்த்துதான் அதிகம் போராடுகிறோம்," என்று அவர் கூறி உள்ளார்.
என்னென்ன மாதிரியான பொய் செய்திகள் பரவுகின்றன?
- அமெரிக்காதான் இந்த வைரஸை பரப்பியது. இதன் பின்னால் பெரிய மருந்து நிறுவனங்களின் சதி உள்ளது.
- சீன பெண் ஒருவர் வெளவால் சூப் குடித்தார். அதன் காரணமாகத்தான் இந்த வைரஸ் பரவியது. இது குறித்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது. அதில் இந்து காட்சியானது வுஹான் மாகாணத்தில் எடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அது உண்மை அல்ல. அது பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு பிராந்தியத்தில் 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட காணொளி அது.
கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்காவா? #BBCFactCheck
சீனாவை மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் அச்சமடைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்து எண்ணற்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இதுவரை சீனாவில் மட்டும் 170 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், அதன் பரவலை தத்தமது நாடுகளில் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே அது எங்கிருந்து, எப்படி உருவானது? என்ற கேள்வி மக்களிடையே இருந்து வருகிறது. இந்த கேள்விக்கு தெளிவான பதில் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அதுதொடர்பாக பல செய்திகள் இணையத்தில் உலாவி வருகின்றன. எனவே, கொரோனா வைரஸ் குறித்து தீவிரமாக பரவி வரும் இரண்டு விடயங்கள் குறித்த உண்மைத்தன்மையை பிபிசி தமிழ் ஆராய்ந்து.
விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்காவா?
சீனா செல்லாத போதும் பரவும் வைரஸ்
இப்படியான சூழலில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், வைரஸ் தொற்று நிலையை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: