தூத்தி சந்த்: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

    • எழுதியவர், ராக்கி சர்மா
    • பதவி, பிபிசிக்காக

ஒரு தடகள வீரரை பற்றி குறிப்பிடப்படும் போதெல்லாம், பாதையில் வேகமாக ஓடும் ஓர் உயரமான- ஆஜானுபாகுவான வீரரின் உருவமே நமது மனதில் தோன்றும்.

நான்கு அடி-பதினொரு அங்குலம் உயரமுள்ள இந்திய தடகள வீராங்கனை தூத்தி சந்த்தைப் பார்க்கும்போது, அவர் ஆசியாவிலேயே வேகமாக ஓடும் பெண் வீராங்கனை என்று நம்புவது கடினம்.

தன்னை 'தடகள ராணி' என்று சக வீரர்கள் அன்பாக அழைப்பதாக கூறி புன்னகைக்கிறார் தூத்தி சந்த்.

'2012ஆம் ஆண்டில், ஒரு சிறிய காரை வென்றேன், அதன் பிறகு நண்பர்கள் என்னை 'நானோ' என்று அழைக்கத் தொடங்கினர். ஆனால் இப்போது நான் வளர்ந்துவிட்டேன் (வயதில்), அனைவரும் 'அக்கா' என்று அழைக்கிறார்கள்.

தடகள வீராங்கனை ஆக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தூத்தி. குடும்பத்தில் ஆறு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை, பெற்றோர் என மொத்தம் ஒன்பது பேர் கொண்ட பெரிய குடும்பம். தந்தை நெசவு வேலையில் ஈடுபட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் தடகளப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தூத்தி நிறைய போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தூத்தியின் மூத்த சகோதரி சரஸ்வதி சந்த் மாநில அளவில் தடகள வீராங்கனையாக இருந்தவர். அவர்தான் தூத்திக்கு முன்மாதிரி. சகோதரி ஓடுவதைப் பார்த்து தூத்தி தடகளப் போட்டிகளில் ஈடுபட முடிவு செய்தார்.

"என் சகோதரி என்னை ஓடத் தூண்டினார். எங்களிடம் படிக்கத் தேவையான வசதியோ, பணமோ இல்லை. விளையாடினால், பள்ளியின் சாம்பியனாகிவிடலாம் என்று அக்கா சொன்னார். அப்போதுதான், படிப்புக்கு பள்ளியே கட்டணம் செலுத்தும், பின்னர், விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலை கிடைக்கும் என்று சொன்னார். இதை மனதில் வைத்துத்தான் ஓட ஆரம்பித்தேன்" என்கிறார் தூத்தி.

மலை போன்ற சவால்கள்

தூத்தியின் பாதையில் சவால்களுக்கு பஞ்சமேயில்லை. அவரிடம் ஓடுவதற்கு தேவையான காலணிகள் இல்லை, பயிற்சி செய்வதற்கான களமும் இல்லை, தடகள நுணுக்கங்களை கற்பிக்க எந்த பயிற்சியாளரும் இல்லை. பயிற்சிக்காக வாரந்தோறும் இரண்டு-மூன்று நாட்கள் கிராமத்திலிருந்து புவனேஸ்வருக்கு வர வேண்டியிருந்தது, அதற்காக எந்த உதவிகளும் கிடைக்கவில்லை.

ரயில்வே பிளாட்பாரத்தில் பல இரவுகளை செலவிட்டார் தூத்தி.

"ஆரம்பத்தில் நான் தனியாக ஓடுவேன். சில நேரங்களில் சாலையில், சில நேரங்களில் கிராமத்திற்கு அருகிலுள்ள ஆற்றின் அருகே வெறுங்காலுடன் ஓடுவேன். பின்னர் 2005ஆம் ஆண்டில், நான் ஓர் அரசாங்க விளையாட்டு விடுதியில் சேர்க்கப்பட்டேன். அங்கு நான் முதல் பயிற்சியாளர் சித்தரஞ்சன் மகாபத்ராவை சந்தித்தேன். ஆரம்ப கட்டங்களில் அவர்கள் என்னை தயார் செய்தார்"

முதல் பதக்கம் கொடுத்த மகிழ்ச்சி எப்படி இருந்தது?

தூத்தியின் கடின உழைப்பு விரைவில் பலனளித்தது. 2007ஆம் ஆண்டில், அவர் தேசிய அளவிலான தனது முதல் பதக்கத்தை வென்றார். இருப்பினும், சர்வதேச பதக்கத்திற்காக ஆறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஜூனியர் வீராங்கனையாக இருந்தபோதிலும், 2013இல் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று வெண்கலம் வென்றார்.

தூத்தியின் முதல் சர்வதேச நிகழ்வு ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் ஆகும். அதில் பங்கேற்பதற்காக அவர் துருக்கிக்கு சென்றார்.

அந்த அனுபவத்தை நினைவு கூறும் தூத்தி, 'நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அதற்கு முன்பு எங்கள் கிராமத்தில் ஒரு காரைக் கூட பார்த்ததில்லை. ஆனால் விளையாட்டுதான் எனக்கு, சர்வதேச விமானத்தில் பறக்க வாய்ப்பு கொடுத்தது. அது எனது கனவுகளுக்கு சிறகுகளைக் கொடுத்தது.'

பதக்கம் பெற்ற பிறகு, மக்களின் அணுகுமுறை மாறத் தொடங்கியது. பதக்கம் பெறுவதற்கு முன்பு அவரை விமர்சித்தவர்கள், இப்போது அவரை ஊக்குவிக்கவும், கொண்டாடவும் தொடங்கினர்.

ஹார்மோன் சர்ச்சை

தூத்தியின் கடினமான சோதனைக்காலம் முடிவுக்கு வரவில்லை, மாறாக தொடர்ந்தது. 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து அவரது பெயர் திடீரென நீக்கப்பட்டது.

தூத்தியின் உடலில் ஆண்கள் உடலில் அதிகமாக இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் அதிக அளவில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஒரு பெண் வீரராக தூத்தி பங்கேற்பதற்கு தடைவிதிக்கப்பட்டது.

'நான் அப்போது மனரீதியாக சித்தரவதையை அனுபவித்தேன். ஊடகங்களில் என்னைப் பற்றி மோசமான விஷயங்கள் கூறப்பட்டன. நான் பயிற்சிக்கு செல்ல விரும்பினாலும்கூட பயிற்சியைத் தொடர முடியவில்லை தூத்தி கூறுகிறார்.

ஆனால் தூத்தி சந்த் சோர்ந்து போகாமல், 2015ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மன்றத்தை அணுகி மேல்முறையீடு செய்தார்.

தூத்திக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. ஆனால் அதுவரை 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அவரால் முழுமையாகத் தயாராக முடியவில்லை.

''ரியோவுக்குத் தயாராவதற்கு எனக்கு ஒரு வருடம் மட்டுமே இருந்தது. நான் கடுமையாக உழைத்து ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றேன்,'' என்று கூறுகிறார்.

''2014ஆம் ஆண்டு தடைக்கு பின்னர் வளாகத்திலிருந்து என்னை வெளியேற்றிவிட்டார்கள். எனவே, புவனேஸ்வரில் இருந்து ஹைதராபாத்திற்கு இடம் மாற வேண்டியிருந்தது. பின்னர் புல்லேலா கோபிசந்த் சார் என்னை தனது அகாடமிக்கு வந்து ரயில் எடுக்கச் சொன்னார்."

ரியோ தன்னம்பிக்கையை உடைக்கவில்லை

2016 ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்றபோது, ஒலிம்பிக் 100 மீட்டர் போட்டியில் பங்கேற்ற மூன்றாவது இந்திய பெண் வீரர் என்ற பெருமையை தூத்தி பெற்றார்.

இருப்பினும், அவரது பயணம் வெற்றிப்படிகளில் பயணிக்கவில்லை. அவர் 11.69 வினாடிகளில் இலக்கை எட்டினார்.

ஆனால் அதன் பின்னர், தூத்தியின் திறனில் தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்படுகிறது. 2017 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில், 100 மீட்டர் மற்றும் 4X100 மீட்டர் தொடரோட்டத்தில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

தென்கொரியாவில் நடந்த 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் செய்ய முடியாததை, ஜகார்த்தாவில் 2018ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் செய்தார் தூத்தி சந்த். அப்போது 100 மீட்டர் தொலைவை 11.32 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இதைத் தவிர 200 மீட்டரிலும் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். 1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பி.டி.உஷாவுக்குப் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது ஆசிய வெள்ளிப் பதக்கம் இதுவாகும்.

ஒருபாலுறவினர் என்பதை வெளிப்படுத்திய தூத்தி சந்த்

தடகளத்தில் தடங்களில் தன்னை நிரூபித்த தூத்தி, தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு போரை நடத்த வேண்டியிருந்தது.

2019 ஆம் ஆண்டில், அவர் ஒருபாலுறவினர் என்பதை முதல் முறையாக வெளிப்படுத்தினார்.

இதன் பின்னர் கிராமத்திலும், குடும்பத்திலும் எதிர்ப்பை எதிர்கொண்டார், ஆனால் அவர் அதற்காக மனம் தளரவில்லை.

இன்று தூத்தி தனது துணையுடன் வசித்து வருகிறார். இருப்பினும், பிபிசியுடனான சிறப்பு நேர்காணலில், இது தொடர்பாக அவர் எதுவும் கூற மறுத்துவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :