You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசியா தைப்பூசம்: களைகட்டிய திருவிழா, லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
மலேசியா முழுவதும் இன்று தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கானோர் பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலில் திரண்டு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
மலேசியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பத்துமலைக்கு வருகை தந்திருந்தனர். கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு குறித்த அச்சமின்றி லட்சக்கணக்கானோர் திரண்ட நிலையில், பாதுகாப்புப் பணியில் 1,700க்கும் மேற்பட்ட போலிசார் ஈடுபட்டிருந்தனர்.
பத்துமலை முருகன் கோவிலில் 130ஆவது ஆண்டாக தைப்பூச விழா கொண்டாடப்பட்டுள்ளது.
இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தைப்பூசத்தையொட்டி, பால்குடமும் காவடியும் ஏந்தி வருவதும் வழக்கம். ஆயிரக்கணக்கானோர் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தும் வகையில் இவ்வழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.
மலை மேல் அமைந்துள்ள குகைக் கோவிலுக்கு 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். தைப்பூசத்தையொட்டி, இந்தப் படிகள் அறவே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு பக்தர் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பால் குடமும், பல்வேறு வடிவங்களில் காணப்பட்ட காவடிகளுடனும் பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு பக்திப் பரவசத்துடன், பத்துமலை கோவிலுக்கு வந்திருந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடைவிடாமல், 'அரோகரா... வேல் வேல் வெற்றி வேல்... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்று முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தனர். திரும்பிய திசையெங்கும் 'அரோகரா'வைக் கேட்க முடிந்தது.
கடந்த ஐந்தாண்டுகளில் காணப்படாத கூட்டத்தை இம்முறை கண்டதாகச் சொல்கிறார் இளம் புகைப்படக் கலைஞரும் செய்தியாளருமான மோகன் ராஜ்.
"தைப்பூசத்தையொட்டி பெரும் பக்தர் கூட்டம் வரும் என்பதால் கடந்த இரு தினங்களாக புகைப்படங்கள் எடுத்து வருகிறேன். சனிக்கிழமை தைப்பூசம் என்பதால், வெள்ளிக்கிழமை இரவு முதலே பக்தர்கள் கோவிலுக்குத் திரண்டு வந்தனர். குறிப்பாக நள்ளிரவு 12.30 மணிக்குப் பிறகு கூட்டம் கட்டுக்கடங்கவில்லை. அந்தக் கூட்டத்தை காட்சிப்படுத்த வேண்டும் என்பதால் நான் கோவில் வளாகத்திலேயே இரவு முழுவதும் இருந்துவிட்டேன்," என்கிறார் மோகன் ராஜ்.
கொரோனா கிருமித்தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவச உறைகள் அணிய வேண்டும் என்று பொதுவான அறிவுறுத்தலை பெரும்பாலான பக்தர்கள் கண்டுகொள்ளவில்லை.
பக்திப் பெருக்கில் இருந்த பலர், முருகப் பெருமான் அனைவரையும் காப்பாற்றுவார் என்று சொன்னதை கேட்க முடிந்தது.
வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துவோருடன் உடன் வந்த சிலரும் மட்டுமே முகமூடியுடன் காணப்பட்டனர்.
தைப்பூசத்தையொட்டி, மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹம்மத் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரது வாழ்த்துச் செய்தி அவரது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கடந்த சில ஆண்டுகளாக தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தற்போது பிரதமர் பதவியில் இல்லாத நிலையில், பல்வேறு வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுள்ள போதிலும், இன்று பத்துமலை முருகன் கோவிலுக்கு வருகை புரிந்தார்.
அங்கு பக்தர்களுடனும், அவரது ஆதரவாளர்களுடனும் பேசிய அவர், பின்னர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளையும் பார்வையிட்டார்.
அப்போது தமக்குப் பிடித்தமான சில தின்பண்டங்கள், உணவு வகைகளை அவர் வாங்கினார்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அறிவித்திருந்தது மலேசிய அரசு. பத்துமலை முருகன் கோவிலை அடுத்து, பினாங்கு மாநிலத்தில் உள்ள தண்ணீர் மலை, ஈப்போ கல்லு மலை, கெடா சுங்கை பட்டாணி ஆலயம் என மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருந்த முருகன் ஆலயங்களிலும் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தின் போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகளவில் குப்பைகளை விட்டுச் செல்வதாக குறைகூறல்கள் எழுவது வழக்கம். மேலும் ஏராளமான உணவை வீணடிப்பதாகவும் பேச்சு எழும். இம்முறை சில தன்னார்வல அமைப்புகளும், சமூக இயக்கங்களும் இணைந்து தைப்பூசத்துக்கு முன்பே குப்பைகள் போட வேண்டாம், உணவை வீணடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தும் விதமாக விழிப்புணர்வு காணொளிப் பதிவுகளை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிட்டிருந்தனர். மேலும் தன்னார்வல ஊழியர்கள் பலர் கோவில் வளாகத்தில் குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: