You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Coronavirus News: கொரோனா வைரஸ் தொற்றால் சீனாவில் மட்டும் இதுவரை 722 பேர் பலி; 34,546 பேர் பாதிப்பு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது. அதே போன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 34,546 என்னும் எண்ணிக்கையை தொட்டுள்ளது.
சீனாவுக்கு வெளியே குறைந்தது 25 நாடுகளில் 270 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சீனாவை தவிர்த்து பிலிப்பைன்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதே சூழ்நிலையில், சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட ஹாங்காங்கில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் (சனிக்கிழமை)நடைமுறைக்கு வந்துள்ளன.
அதாவது, இன்று முதல் சீனாவிலிருந்து ஹாங்காங்கிற்கு வருபவர்கள் இரண்டு வாரகாலத்திற்கு கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவர்.
இதற்காக சீனாவிலிருந்து ஹாங்காங் வருபவர்களுக்கு இரண்டு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருவர் தன்னைத்தானே விடுதிகளில் தனிமைப்படுத்தி கொள்ளலாம் அல்லது அரசாங்கம் நடத்தும் மையங்களில் சேர்ந்து கொள்ள வேண்டும். அதே சூழ்நிலையில், ஹாங்காங் வாசிகள் தங்களது வீடுகளுக்குள்ளேயே இருப்பது அவசியம்.
மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு அபாரதத்துடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, சீனா - ஹாங்காங் இடையிலான எல்லைப்புற நகரான ஷென்சென்னில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஹாங்காங்கை பொறுத்தவரை, இதுவரை 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, கொரோனா வைரஸ் ஹாங்காங்கில் பரவுவதை தடுக்கும் வகையில் சீனாவுடனான அனைத்து எல்லைகளையும் மூட வேண்டுமென்று அந்நகர மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத அரசு, பெரும்பாலான எல்லைகளை மூடுவதற்கு உத்தரவிட்டிருந்தது.
ஒவ்வொரு நாளும் சீனா - ஹாங்காங் இடையே பல்லாயிரக்கணக்கானோர் பயணித்து வந்த சூழ்நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்கு குறைந்து காணப்படுகிறது.
சீனா எடுத்துவரும் நடவடிக்கைகள் என்னென்ன?
கொரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்கும் ஹூபே மாகாணம் உள்பட நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூட வாய்ப்புள்ள பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
ஹாங்க்சோ மற்றும் நாஞ்சாங் உள்ளிட்ட நகரங்களில், ஒவ்வொரு நாளும் எத்தனை குடும்ப உறுப்பினர்கள் வீட்டை விட்டு வெளியேறலாம் என்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, ஹூபே மாகாணத்தில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதை தடுக்கும் வகையில், மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்தூக்கிகளின் செயல்பாடு முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் தவிக்கும் கப்பல்
ஜப்பானின் யுகோஹாமா துறைமுகத்துக்கு வந்த சொகுசு கப்பலின் பயணிகளில் மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே சிலருக்கு வைரஸ் பாதித்திருந்த நிலையில் , தற்போது மொத்தம் 61 பேரை கொரோனா தாக்கியுள்ளது.
டைமண்ட் பிரின்ஸஸ் என்ற 3,700 பயணிகளைக் கொண்ட சொகுசுக் கப்பல், கடந்த இரண்டு வாரமாக ஜப்பானின் யுகோஹாமா துறைமுகத்தில் உள்ளது.
வேர்ல்டு ட்ரீம்ஸ் என்னும் 3,600 பயணிகள் கொண்ட மற்றொரு சொகுசுக் கப்பலில் நடந்த சோதனையில் இதுவரை யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: