சிவிங்கிப்புலி: இந்தியாவுக்கு மீண்டும் திரும்பும் உலகின் அதிவேக விலங்கு - விரிவான தகவல்கள்

    • எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
    • பதவி, பிபிசி மராத்தி

இந்தியாவுக்கு சிவிங்கிப்புலிகளைக் (Cheetah) கொண்டு வருவதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. எனவே, தற்போது ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சிவிங்கிப்புலிகளை கொண்டு வரலாம்.

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக சிவிங்கிப்புலிகள் இருந்துள்ளன. ஆனால், இருபதாம் நூற்றாண்டில் அவை கிட்டத்தட்ட முற்றிலும்அழிந்துவிட்டன. இப்போது உச்ச நீதிமன்றத்தின் அனுமதி காரணமாக, தரையில் அதிவேகமாக ஓடக் கூடிய இந்த மிருகத்தைப் பார்க்கும் வாய்ப்பு இந்திய மக்களுக்குக் கிடைத்துள்ளது.

முகலாயர் காலத்தில் இருந்து இந்திய மன்னர்கள் சிவிங்கிப்புலிகளை வளர்ப்பதில் விருப்பம் கொண்டிருந்தனர். வேட்டைக்குச் செல்லும் போது அவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

முகலாய ஆட்சியாளர்களைப் போல, சமஸ்தான ஆட்சியாளர்களும் சிவிங்கிப்புலிகளை வளர்த்து வந்துள்ளனர். அவர்களும் வேட்டைகளுக்கு வெட்டுப்புலிகளைப் பயன்படுத்தியுள்ளனர். கோலாப்பூர், பரோடா, பவநகர் சமஸ்தான ஆட்சியாளர்களும் சிவிங்கிப்புலிகளை வளர்த்திருக்கிறார்கள். பாட்ஷா அக்பர் பல வெட்டுப்புலிகளை வைத்திருந்தார் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. அந்த காலக்கட்டத்தில் வரையப்பட்ட வேட்டைகள் குறித்த ஓவியங்களில் சிவிங்கிப்புலிகள் காணப்படுகின்றன.

`சிட்டேவான்' என்ற புதிய சமுதாயப் பிரிவு

கோலாப்பூர் சமஸ்தானத்தில் சத்ரபதி ஷாகு மகராஜுக்குப் பிறகு ராஜாராம் மகராஜ் வேட்டைக்கு சிவிங்கிப்புலிகளை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பவநகரைச் சேர்ந்த ராஜா பவசின்ஜி மகராஜ், ஷாகு மகராஜுடன் படித்தவர். வேட்டைக்கு சிவிங்கிப்புலிகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை பவநகரில் ஷாகு மகராஜ் பார்த்த பிறகு, கோலாப்பூருக்கு சிவிங்கிப்புலிகளைக் கொண்டு வந்து, வேட்டைக்குப் பயன்படுத்த விரும்பினார்.

கோலாப்பூர் திரும்பிய பிறகு, தனது விலங்குகள் பராமரிப்பு அலுவலர்களை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பியுள்ளார் என்று, `அதவனிடில் ஷிகர்' (நினைவில் கொள்ள வேண்டிய ஒரு வேட்டை) என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ள வரலாற்றாளர் யசோதன் ஜோஷி கூறியுள்ளார்.

சிசிவிங்கிப்புலிகளை பராமரித்து, அவற்றை வேட்டைக்குப் பயிற்றுவிப்பதற்காக கோலாப்பூரில் ஒரு சமுதாயத்தினர் இருந்துள்ளனர். அவர்கள் `சிட்டேவான்' சமுதாயத்தினர் என குறிப்பிடப்பட்டனர்.

சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில், இஸ்மாயில் சிட்டேவான், தோண்டி லிம்பாஜி பாட்டீல் போன்ற பிரபலமான சிட்டேவான்கள் இருந்துள்ளனர் என்று யசோதன் ஜோஷி குறிப்பிட்டுள்ளார். 1936ல் கோலாப்பூர் சென்ற மிருகங்களின் தோலை பதப்படுத்தி, அதில் பொருள்களை திணித்து உண்மையான மிருகம் போன்ற உருவத்தை உருவாக்கும் நிபுணரான போதா வான் இன்ஜென் என்பவர், அப்போது அங்கு 35 சிவிங்கிப்புலிகள் இருந்ததாக குறிப்பு எழுதி வைத்துள்ளார்.

இஸ்மாயில் சிட்டேவானின் பேரனான சலீம் ஜமடார் (சிட்டேவான்) இதுபற்றிய தகவல்களை பிபிசி மராத்தி பிரிவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

``எனது தாத்தாவும், கொள்ளு தாத்தாவும் சிவிங்கிப்புலிகளை மேற்பார்வை செய்து, வளர்த்து வந்திருக்கிறார்கள். அவர்கள் சிறுத்தைகளைப் பிடித்து, வளர்த்து வந்திருக்கிறார்கள். அதனால் `சிட்டே-பர்தி' என அழைக்கப்பட்டார்கள். சத்ரபதி ஷாகு மகராஜ் இதைப் பார்த்து, இந்த சமுதாயத்தினருக்கு ராஜாங்க மரியாதை அளித்திருக்கிறார். ராஜாராம் மகராஜ் வேட்டையில் அதிக நாட்டம் கொண்டிருந்துள்ளார். `சிட்டே - கானா' (சிவிங்கிப்புலி வளர்க்கப்படும் பகுதி) ஒன்று அப்போது இருந்திருக்கிறது. இப்போது கோலாப்பூர் பேருந்து நிலையம் அருகே அந்த இடத்தில் விக்ரம் உயர்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது.

சிவிங்கிப்புலி பராமரிப்பு

சிவிங்கிப்புலியை பிடித்ததும், கோபத்தில் உறுமிக் கொண்டிருக்கும். கூண்டில் இருந்து வெளியேற முயற்சி செய்யும். சிட்டேவான்கள் அதை அமைதிப்படுத்த வேண்டும்.

அதுபோன்ற வேட்டைகளில் சென்றிருக்கும் லீலாவதி ஜாதவ் என்ற பெண்மணி, அந்த காலக்கட்டத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்து வைத்துள்ளார். இடுப்பில் ஒரு கயிறைக் கட்டி வைத்து சிவிங்கிப்புலியை அமைதிப்படுத்துவார்கள் என்று அவர் குறித்து வைத்துள்ளார். இந்த வேட்டை சம்பவங்களை நேரில் பார்த்த, வேட்டைகளில் ஈடுபட்டவர்களில் கடைசியாக உயிர் வாழ்ந்தவர் லீலாவதி ஜாதவ். அவருடைய பல்வேறு நேர்காணல்களைத் தொகுத்து, அவரின் நினைவுகளை `அதவனிடில் ஷிகர்' புத்தகம் பதிவு செய்துள்ளது.

``நார்க்கட்டிலில் சிவிங்கிப்புலிகளை தூங்க வைப்பது வழக்கம். இரண்டு பேர் தொடர்ந்து சிவிங்கிப்புலியை தடவிக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மரத்தாலான ஸ்பூன் மூலம் சிவிங்கிப்புலிக்கு அவர்கள் உணவு தருவார்கள். அந்த நடைமுறை `டம்பா டெனே' எனப்பட்டது. ஓரளவுக்குப் பழக்கியதும், மர கம்பத்தில் கயிறால் சிவிங்கிப்புலியைக் கட்டி வைப்பார்கள். அது `தோகலா டெனே' என்று கூறப்பட்டது'' என்று லீலாவதி ஜாதவ் கூறியதாக அந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமும் உணவு கொடுப்பதற்கு முன்பு, கருப்பு போர்வை போர்த்திக் கொண்டு அதன் எதிரே ஆண்கள் ஓடுவார்கள். மாமிசத்துக்கும் கருப்பு நிறத்துக்கும் ஒரு தொடர்பை சிவிங்கிப்புலி உணர வேண்டும் என்பதற்காக அப்படி செய்வார்கள். கலைமான்களை சிவிங்கிப்புலி விரட்டிச் செல்வதற்குப் பழக்குவதற்காக இந்த உத்தி கையாளப்பட்டது. கருப்பு போர்வையுடன் ஓடும் ஆண்களை சிவிங்கிப்புலி விரட்டத் தொடங்கினால், அது வேட்டைக்குத் தயாராகிவிட்டது என்று அர்த்தம்.

கோலாப்பூரில் சிவிங்கிப்புலிகள் குதிரை வண்டியில் நின்றபடி செல்லும். மான்கள் கூட்டம் தென்பட்டதும், சிவிங்கிப்புலி தாவிச் சென்று மான்களை மிகச் சரியாக வேட்டையாடும். அதற்குள் அந்த வண்டி அந்த இடத்துக்குச் சென்றுவிடும். பிறகு சிட்டேவான்கள் சிவிங்கிப்புலியை இழுத்து கழுத்து மற்றும் இடுப்பில் கயிறு போட்டு கட்டிவிடுவார்கள்.

சில சிவிங்கிப்புலிகளுக்கு ஸ்டார், பவானிசங்கர், வீர்மட்டி, லட்சுமி, கணப்யா என்பவை போன்று சில சிவிங்கிப்புலிகளுக்கு பெயரிடப்பட்டிருந்ததாக லீலாவதி ஜாதவ் கூறியுள்ளார்.

கோலாப்பூரில் உள்ள புல்வெளிப் பகுதிகள் வேட்டைக் களமாக இருந்திருக்கின்றன. பிரிட்டிஷாரோ அல்லது ராஜ குடும்ப விருந்தினரோ வந்தால், இதுபோன்ற வேட்டை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். சிவிங்கிப்புலிகள் வேட்டையாடும் காட்சிகளை, விருந்தினர்கள் தொலைவில் இருந்து பைனாகுலர் மூலம் பார்ப்பார்கள். கோலாப்பூரில் கடைசி வெட்டுப்புலி 1960ல் இறந்து போனது என்று லீலாவதி குறித்து வைத்துள்ளார்.

சிவிங்கிப்புலிகள் இந்தியாவுக்கு வந்தால்.......

இந்தியாவுக்கு மீண்டும் சிவிங்கிப்புலிகளைக் கொண்டு வர வேண்டும் என்று பத்தாண்டுகளுக்கும் மேலாக முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சிவிங்கிப்புலிகளை திறந்து விடுவதற்கு உரியதாக 3 பகுதிகளை இந்திய வனவிலங்கு டிரஸ்ட் மற்றும் இந்திய வனவிலங்கு இன்ஸ்டிடியூட் 2010ல் அடையாளம் கண்டன.

மத்தியப் பிரதேசத்தில் குனோ பாலபூர் மற்றும் நவ்ரோடேஹி வனவிலங்கு சரணாலயம், ராஜஸ்தானில் ஷாஹ்கர் ஆகிய இடங்களில் வனத்தில் சிவிங்கிப்புலிகளை விடலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த அமைப்புகள் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், சண்டீகர் மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டு இந்தப் பரிந்துரையை அளித்தன.

சிவிங்கிப்புலிகளுக்கான உணவு கிடைக்கும் வாய்ப்பு, அந்தப் பகுதிவாழ் மக்களின் கருத்துகள், தொலையுணர் கருவிகள் மூலம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்தியாவுக்கு வெட்டுப்புலிகளைக் கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது என்றாலும், சிவிங்கிப்புலிகள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சுற்றுச்சூழலும், வாழ்விட சூழலும் இருக்கின்றனவா என்தற்கான உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை.

இந்தியாவுக்கு சிவிங்கிப்புலிகளைக் கொண்டு வருவதற்கான முடிவு குறித்து சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் லட்சுமிகாந்த் தேஷ்பாண்டே கூறியுள்ளார். ``இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் வாழ்ந்துள்ளன. உணவுக்காக வேட்டையாடும் போது சிவிங்கிப்புலிகளுக்குள் போட்டி ஏற்படக் கூடாது. எனவே, சிவிங்கிப்புலிகள் வாழ்வதற்கான பகுதியைத் தேர்வு செய்யும்போது, ஓர் ஆய்வு நடத்தப்பட வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.

``ஒன்று அல்லது இரண்டு இடங்களுக்கு மட்டும் நாம் சிவிங்கிப்புலிகளைக் கொண்டு வந்தால், ஆப்பிரிக்காவில் உள்ளதைப் போன்ற இயற்கை வனவிலங்கு காப்பகமாக அது மாறிவிடும். விலங்குகள் பாதுகாப்பில் தவறான முன்னுதாரணத்தை அது ஏற்படுத்திவிடும். பகட்டு அறிவிப்புக்காக இந்தியாவுக்கு சிவிங்கிப்புலிகளைக் கொண்டு வருவது தவறான உதாரணமாகிவிடும். அவற்றின் இனப்பெருக்கத்திற்கும் நாம் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்'' என்கிறார் அவர்.

சிவிங்கிப்புலி - சிறுத்தை வித்தியாசம்என்ன?

இரு வகை புலிகளின் உடலில் உள்ள புள்ளிகள் பலருக்கும் பல சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் இவை இரண்டுக்கும் இடையில் எளிதாக வித்தியாசத்தைக் காண முடியும். சிவிங்கிப்புலிகளுக்கு உடலில் கறுப்புப் புள்ளிகள் இருக்கும். சிறுத்தைகளுக்கு புள்ளிகள் ரோஜா நிறம் கலந்து இருக்கும். சிவிங்கிப்புலிகளுக்கு முகத்தில் கறுப்புக் கோடு தெரியும். சிறுத்தைகளுக்கு அது இருக்காது.

திறந்த புல்வெளிகளில் சிவிங்கிப்புலிகள் வாழ விரும்பும். ஆனால் சிறுத்தைகள் அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் மரங்களைத் தான் விரும்பும். அவை மரங்களின் மீது தான் அதிக பொழுதைக் கழிக்கும். ஆண் சிவிங்கிப்புலி சுமார் 54 கிலோவும், பெண் சிவிங்கிப்புலி சுமார் 43 கிலோவும் இருக்கும். மாறாக, ஆண் சிறுத்தை 60 முதல் 70 கிலோ வரையும், பெண் சிறுத்தை 30 முதல் 40 கிலோ வரையும் எடை இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: