விராட் கோலி, தோனி குறித்து கபில் தேவ் கூறுவது என்ன?

    • எழுதியவர், விதித் மெஹ்ரா
    • பதவி, பிபிசி

இங்கிலாந்தில் 1983-இல் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை யாரும் எதிர்பாராவண்ணம் இளம் இந்திய அணி வென்றது.

இறுதி போட்டியில் பலம் பொருந்திய மேற்கிந்திய தீவுகள் அணியை வென்ற இந்திய அணிக்கு தலைமை தாங்கிய கபில் தேவ், இந்திய கிரிக்கெட் குறித்தும், நாட்டில் பெண் வீராங்கனைகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் குறித்தும் பிபிசி வேர்ல்ட் நியூஸ் நடத்திய 16ஆவது கோல்ஃப் கனெக்ட் நிகழ்வில் பங்கேற்றபோது பேசினார்.

அவரது பேட்டியின் முழு விவரம்-

1983 உலகக்கோப்பையை நீங்கள் வென்றபோது, அந்த உணர்வு எப்படியிருந்தது?

வாழ்க்கை முழுவதும் நாம் கனவு கண்ட ஒரு விஷயம் நனவானபோது மகிழ்ச்சியாக தானே இருக்கும். அப்படிதான் எங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வென்றவுடன், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓய்வறைக்கு சென்று அந்த அணியின் கேப்டன் கிளைவ் லாய்டிடம் சாம்பைன் கேட்டீர்களாமே?

ஆமாம், எங்களிடம் அப்போது சாம்பைன் இல்லை; நாங்கள் 183 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் அவர்கள் அணியின் ஆதரவாளர்கள் தாங்கள் நிச்சயம் வென்றுவிடுவோம் என்று கூறினர். இந்நிலையில் நாங்கள் வென்றவுடன், நான் அவர்களின் ஓய்வறைக்கு சென்று கிளைவ் லாய்டிடம், ''கேப்டன்! இனி உங்களுக்கு இவ்வளவு சாம்பைன் பாட்டில்கள் தேவைப்படாது. ஆனால் எங்களுக்கு தேவை '' என்று கூறி கையில் நான்கைந்து பாட்டில்களை எடுத்துவந்தேன்.

அன்று மைதானத்தில் இருந்த 11 பேரால்தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. வெற்றிக்காக அணியின் வீரர்கள் எந்தமாதிரியான திட்டங்களை வகுத்தீர்கள்?

அந்த அளவு நாங்கள் திட்டமிடவில்லை. விளையாட்டை நன்கு அனுபவித்து இயல்பாக தொடங்கிய எங்கள் பயணத்தில் ஒவ்வொரு போட்டியாக வெல்ல, எங்களின் நம்பிக்கை அதிகரித்தது. அதற்கு பிறகு நடந்தது அனைவரும் அறிந்ததே!

இந்திய விளையாட்டு வீராங்கனைகள், நாட்டை பல சந்தர்ப்பங்களில் தங்களின் சாதனைகளால் பெருமைப்படுத்தியுள்ளனர். அவர்களின் பங்களிப்பை எப்படி மதிப்பீடுகிறீர்கள்?

நிச்சயமாக வீராங்கனைகளின் சாதனைகள் மிகவும் மதிக்கப்படவேண்டியது. பேட்மிண்டன், டென்னிஸ், தடகளம் போன்ற பல விளையாட்டிகளில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் சாதித்துள்ளனர். அவர்களும் உரிய அங்கீகாரம் தரப்பட வேண்டும்.

வரும் ஆண்டுகளில் இந்தியாவில் வீராங்கனைகளுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது எப்படி இருக்கும்?

நிச்சயமாக பெண்கள் விளையாட கூடுதல் வாய்ப்புகள் தரப்படவேண்டும். இந்தியாவில் அனைத்து விளையாட்டுகளிலும் நாம் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதுதான் நாட்டில் விளையாட்டு வீரர்களின் மத்தியில் மிகவும் முக்கியமான தேவையாக உள்ளது.

உங்களுக்கு பிடித்த விளையாட்டு வீராங்கனை யார்?

பல வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பேட்மிண்டன், டென்னிஸ், குத்துசண்டை என பல விளையாட்டுகளில் பல வீராங்கனைகள் சாதனைகள் செய்துள்ளனர். ஒருவரை மட்டும் குறிப்பிடுவது நியாயம் இல்லை. நன்றாக விளையாடும் அனைத்து வீராங்கனைகளையும் எனக்கு பிடிக்கும்.

இருந்தாலும் குறிப்பாக யாராவது……

இல்லை, ஒருவரை மட்டும் குறிப்பிடுவது நியாயமில்லை. அண்மையில் ஹிமா தாஸ் சிறப்பாக விளையாடி வருகிறார். சாய்னா போன்ற பலர் நன்கு பங்களித்து வருகின்றனர். ஏன் பெண்கள் கிரிக்கெட் அணியினரும் எதிர்பார்ப்பை தாண்டி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஒலிம்பிக்கில் யார் இந்தியாவுக்கு பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

தற்போது நான் அந்த அளவுக்கு விளையாட்டை கவனிப்பதில்லை. யார் ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்கிறார்களோ, அவர்கள் நல்ல மனப்பக்குவம் மற்றும் தகுதியுடன் விளையாடி வெல்ல முயல வேண்டும்.

விளையாட்டில் சாதனைகள் தொடர்ந்து முறியடிக்கப்படுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த உங்களின் சாதனையை கோர்ட்னி வால்ஷ் முறியடித்தார். தற்போது விராட் கோலி விளையாடும் விதத்தை பார்த்தால் அவர் பல சாதனைகளை முறியடிப்பார் என்று தோன்றுகிறதே!

நிச்சயமாக, விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். நல்ல உடல் தகுதி மற்றும் சாதிக்கும் வேகத்தில் அவர் விளையாடி வருகிறார். இதேபோல் அவர் இன்னும் 5-6 ஆண்டுகள் விளையாடினால் பேட்டிங்கில் பல சாதனைகளை அவர் படைக்கக்கூடும்.

இந்தியாவின் பேட்டிங் எப்போதுமே நன்றாக இருக்கும். தற்போது ஷமி, புவனேஸ்வர், சைனி போன்ற பல் பந்துவீச்சாளர்கள் ஜொலிக்கும் நிலையில் பந்துவீச்சு பலம் பெற்றுள்ளதா?

ஆம், தற்போது இந்தியாவின் பந்துவீச்சு பலம் பெற்றுள்ளது. அதனால் இந்திய அணி கூடுதலாக வென்று வருகிறது. வேக மற்றும் சுழல் பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் டெஸ்ட் போட்டியை வெல்லமுடியும். ஒருநாள் போட்டியிலும் அப்படித்தான் எதிரணியை கட்டுப்படுத்த முடியும். அதனால் பந்துவீச்சு மிக முக்கியம்.

மீண்டும் 1983-க்கு வருவோம். அந்த ஆண்டில் ஒரு குறிப்பிட்ட தருணத்தை கூற முடியுமா?

அப்படிக்கூற முடியாது. அந்த ஆண்டில் உலகக்கோப்பையை வென்றுள்ளோம் அதில் இருந்து ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மட்டுமே கூற இயலாது.

இதுவரை விளையாடிய இந்திய அணிகளில் தற்போதைய இந்திய அணியே சிறந்த அணி என்று கூற முடியுமா?

நிச்சயமாக தற்போதைய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்களின் பங்களிப்பு தொடர்ந்து சிறப்பாக இருந்துவருகிறது. சிறந்த இந்திய அணிகளில் இந்த அணி நிச்சயம் இடம்பெறும்.

வெளிநாடுகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடுவதில்லை என்று விமர்சகர்கள் கூறுவது பற்றி …

விமர்சகர்களின் பணி விமர்சனம் செய்வது. அது என் வேலை அல்ல. நான் தொடர்ந்து ஊக்குவிப்பேன். இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாகவே விளையாடி வருகிறது.

எம். எஸ். தோனி ஒய்வு பெற்றபிறகு அதனை இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும்? அது இழப்புதானே?

தோனி என்றில்லை, சச்சின், கவாஸ்கர் என்று எந்த வீரர் ஒய்வு பெறும்போதும் இந்த பேச்சு வரத்தான் செய்யும். எந்த தனி வீரரையும் தாண்டி அணியின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கும். தோனி பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி உள்ளார்.

அவரது சாதனைகள் மதிக்கப்படவேண்டும். பல சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவரை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: