இந்திய சர்க்கரை இறக்குமதியை திடீரென அதிகரித்த மலேசியா: வணிகப் போரில் சமரச முயற்சியா?

இந்திய சர்க்கரை இறக்குமதியை அதிகரித்த மலேசியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஆக்கிரமிப்பு என்ற ஒற்றைச் சொல் இந்தியா - மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மறைமுக வர்த்தகப் போரை துவக்கி வைத்திருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

'காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது இந்தியா' என்று மலேசியப் பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்தையடுத்து, சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால் மலேசியாவுக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து வாங்கும் கச்சா சர்க்கரையின் அளவை திடீரென அதிகரித்துள்ளது மலேசியா. இது சர்வதேச வர்த்தக தளத்தில் பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை தொடர்பில் இந்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தார் மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத். இதையடுத்து மலேசியாவிலிருந்து இந்தியா பாமாயில் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை விதித்தபோதும் கொள்கைப்படியே செயல்பட முடியும் என மகாதீர் பதிலடி கொடுத்தார்.

News image

இந்நிலையில் திடீர் திருப்பமாக, நடப்பு காலாண்டில் இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 33 ஆயிரம் டன் அளவிலான கச்சா சர்க்கரையை வாங்க இருப்பதாக மலேசியாவின் எம்எஸ்எம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் மிகப்பெரிய சர்க்கரை சுத்திகரிப்பு நிறுவனங்களில் இதுவும் ஒன்று. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் இந்தியாவில் இருந்து 88 ஆயிரம் டன் சர்க்கரை மட்டுமே இறக்குமதி செய்திருந்தது.

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே மறைமுக வணிகப் போர் துவங்கி இருப்பதாக ஊடகங்கள் கூறி வரும் நிலையில், மலேசியாவின் முன்னணி நிறுவனம் ஒன்று திடீரென வழக்கத்தைவிட சரிபாதிக்கும் மேலான அளவில் கூடுதல் சர்க்கரை கொள்முதல் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? இந்தியத் தரப்பில் விலை குறைக்கப்பட்டதா? அல்லது மலேசியாவில் சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ளதா? என்ற கேள்விகளுக்கு மலேசியத் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் இல்லை.

மொத்தம் 200 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான சர்க்கரையை மலேசிய நிறுவனம் கொள்முதல் செய்யப் போகிறது. இதையடுத்து மலேசிய பாமாயிலை இறக்குமதி செய்ய இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? அல்லது நீக்கப்படுமா? எனும் கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஏற்றுமதியால் கிடைக்கும் ஆதாயங்களை இழக்க விரும்பாத மலேசியா

இந்தியா, மலேசியா இடையேயான வர்த்தக உறவில் இதுவரை மலேசியாவுக்குதான் ஆதாயங்கள் அதிகம் என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.

இருதரப்பு வணிகத்தில் மலேசியாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பை விட, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு குறைவுதான்.

இந்தியா கடந்த மார்ச் வரையிலான ஓராண்டு காலத்தில் சுமார் 6.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதேசமயம் 10.8 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

எனவே மலேசியாவுக்கு சாதகமாக அமைந்துள்ள இந்த வர்த்தக மதிப்பு இடைவெளியைக் (Trade Plus) குறைக்க வேண்டும் என இந்தியத் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன் காரணமாகவே மலேசியா தற்போது கூடுதல் சர்க்கரை வாங்குவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2019-ல் சுமார் 1.95 மில்லியன் டன் கச்சா சர்க்கரையை இந்தியாவிடம் இருந்து வாங்கியுள்ளது மலேசியா. உலகளவில் சர்க்கரையை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருப்பதாக அனைத்துலக சர்க்கரை உற்பத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

பாமாயில் வர்த்தகத்துக்குப் பாதிப்பு

இது ஒருபுறமிருக்க இந்தியாவின் மறைமுகத் தடையால் மலேசியாவுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படுமா, அதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும்?

இந்தியா வாங்கும் மலேசிய பாமாயிலின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இதனால் குறைந்தபட்சம் சுமார் 2 மில்லியன் டன் அளவிலான தனது சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை விற்பதற்கு மலேசியா புதிய சந்தையை, வாடிக்கையாளரைத் தேடிப் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 1.4 பில்லியன் டாலர்கள் (5.7 பில்லியன் மலேசிய ரிங்கிட்) என்றும் நிபுணர்கள் தெரிவிப்பதாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாமாயில் வர்த்தகத்துக்குப் பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

புதிய சந்தையை நாடிச் செல்லும்போது ஏற்றுமதி வரியில் மலேசியா சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்றும், அப்போதுதான் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதையடுத்து இந்தியாவின் மறைமுகத் தடையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மலேசிய அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

பாமாயில் சார்ந்த விவகாரங்களுக்குப் பொறுப்பேற்றுள்ள அந்நாட்டின் முதன்மைத் தொழில்துறை அமைச்சர் தெரசா கோக் அண்மையில் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார்.

அங்கு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து அந்நாட்டுக்கான மலேசிய பாமாயிலின் ஏற்றுமதி அளவு ஜனவரி மாதத்தின் முதல் 20 நாட்களுக்குள் சுமார் 80 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஜனவரி 20ஆம் தேதி வரை பாகிஸ்தானுக்கு சுமார் 74 ஆயிரம் டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை ஏற்றுமதி செய்துள்ளது மலேசியா. கடந்தாண்டு ஜனவரி மாதம் குறைந்தளவு பாமாயில்தான் ஏற்றுமதியானது.

இதே காலக்காலகட்டத்தில் இந்தியாவுக்கான சுத்திகரிக்கப்பட்ட மலேசிய பாமாயில் ஏற்றுமதியின் அளவு 49 விழுக்காடு குறைந்துள்ளது.

இந்தோனீசியா கூறுவது என்ன?

இந்தியா, மலேசியா இடையேயான இந்த மறைமுக மோதல் காரணமாக எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி ஆதாயமடையப் போவது இந்தோனீசியா தான். உலகளவில் பாமாயில் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் அந்நாடும் இந்தியாவுக்கு அதிகளவில் பாமாயிலை ஏற்றுமதி செய்கிறது.

இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு தங்களிடம் பாமாயில் இருப்பதாக இந்தோனீசிய பாமாயில் அமைப்பு (Indonesian Palm Oil Association) தெரிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியாகிவிட்டது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் செயல் இயக்குநர் முக்டி சர்ட்ஜோனோவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. அப்போது, இந்தியாவின் பாமாயில் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும், தெற்காசியாவில் பாமாயில் ஏற்றுமதி வர்த்தகத்தில் தனக்குரிய பங்கையும் இடத்தையும் இந்தோனீசியா மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் என்றும் முக்டி சர்ட்ஜோனோ நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தோனீசியா கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தோனீசியாவைப் பொறுத்தவரை ஐரோப்பிய யூனியன், சீனா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்குதான் பாமாயிலை அதிகளவு ஏற்றுமதி செய்கிறது. எனினும் இந்தியாவின் இறக்குமதி கொள்கைக்கு ஏற்ப கடந்தாண்டு இந்தோனீசிய பாமாயிலுக்கு அதிக வரி விதிக்கப்பட்டதாகவும், அதனால் அந்நாட்டுக்கு இந்தோனீசியா ஏற்றுமதி செய்த பாமாயில் அளவு குறைந்து போனதாகவும் முக்டி கூறுகிறார்.

"கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவுக்கான எங்களது பாமாயில் ஏற்றுமதி 7.6 மில்லியன் டன்னாக இருந்தது. அடுத்த ஆண்டே இது 6.7 மில்லியனாகக் குறைந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கடந்த 2019 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவுக்கான எங்களது பாமாயில் ஏற்றமதி 3.7 மில்லியன் டன்னாக குறைந்து போனது.

பாமாயிலும் அதைச் சார்ந்த பொருட்களையும் ஏற்றமதி செய்வதற்கும் மற்றொரு நாட்டின் இறக்குமதி வரிக் கொள்கைக்கும் இடையே நிச்சயம் தொடர்பு உண்டு. ஆனால், மலேசியா மற்றும் இந்தோனீசியாவின் பாமாயில் இறக்குமதி தொடர்பில் இந்திய அரசு இரு வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தது. மலேசிய பாமாயிலுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை விட இந்தோனீசிய பாமாயிலுக்கான வரி அதிகமாக இருந்தது.

தற்போது அந்த நிலை மாறி இரு நாடுகளுக்கும் ஒரே மாதிரியான வரி விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியா கொண்டு வந்துள்ள புதிய கொள்கை எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்," என்று குறிப்பிட்ட முக்டி, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கான பாமாயில் ஏற்றுமதி அளவை அதிகரிப்பதற்கு இந்தோனீசியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

இந்தியாவின் தேவையை ஈடுகட்ட தயார் நிலையில் இந்தோனீசியா

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவுக்கான பாமாயில் ஏற்றுமதி 51 விழுக்காடு அதிகரித்ததாக முக்டி சுட்டிக் காட்டுகிறார். கடந்த செப்டம்பரில் இந்தியாவுக்கு 4,81,000 டன் பாமாயிலை ஏற்றுமதி செய்துள்ளது இந்தோனீசியா.

இதற்கு, இறக்குமதி வரிவிதிப்பில் இந்தியா மேற்கொண்ட மாற்றமே காரணம் என்றும், மலேசியா மற்றும் இதர தெற்காசிய நாடுகளுக்கு விதிக்கப்படும் அதே வரிதான் தற்போது இந்தோனீசியாவுக்கும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம் இந்தோனீசியாவின் ஒட்டுமொத்த பாமாயில் உற்பத்தியும் முந்தைய ஆண்டு அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 13 விழுக்காடு அதிகரித்துள்ளது. இத்தகைய அம்சங்களை கொண்டு கணக்கிடும்போது இந்தோனீசிய பாமாயில் வர்த்தகம் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என அனுமானிக்க முடிகிறது என்கிறார் முக்டி.

இந்தியாவின் தேவையை ஈடுகட்ட தயார் நிலையில் இந்தோனீசியா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவும் சீனாவும் மிகப்பெரிய பாமாயில் சந்தையைக் கொண்டுள்ளவை. இவ்விரு நாடுகளின் தேவைகளையும் இந்தோனீசியாவால் ஒருசேர ஈடுகட்ட முடியுமா? என்ற கேள்விக்கும் முக்டி பதிலளித்தார்

"நிச்சயமாக ஈடுகட்ட முடியும். அதற்குத் தயார் நிலையில் உள்ளோம். இதுவரை இந்திய தரப்பிலிருந்து அதிகளவு பாமாயில் கேட்டு எந்தவிதத் தகவலும் வரவில்லை. எனினும் அவ்வாறு அழைப்பு வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம்," என்றார் முக்டி.

இந்நிலையில் மலேசிய பாமாயில் வர்த்தகம் எந்தளவில் உள்ளது? ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பதை அறிய மலேசிய பாமாயில் சுத்திகரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை.

'மலேசியாவுக்கு நஷ்டமோ, பெரும் பாதிப்போ ஏற்பட்டுவிடாது'

மலேசியாவில் தற்போது ஏற்றுமதிக்கு தயாராக உள்ள சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இந்தியா வாங்காமல் புறக்கணித்தால் என்ன ஆகும்? கெட்டுப்போக வாய்ப்புண்டா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இக்கேள்வியை பாமாயில் வர்த்தகத்துறை ஆலோசகரான கோலாலம்பூரைச் சேர்ந்த சிவநேசனிடம் முன்வைத்தபோது, கவலை கொள்ளும் வகையில் மலேசியாவுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடாது என்றார்.

'மலேசியாவுக்கு நஷ்டமோ, பெரும் பாதிப்போ ஏற்பட்டுவிடாது'

பட மூலாதாரம், TWITTER /NARENDRA MODI

அதேசமயம் மலேசிய பாமாயிலுக்கு புதுச்சந்தைகளையும் வாடிக்கையாளர்களையும் தேடிப்பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

"சர்வதேச சந்தையில் உடனடியாக வர்த்தகக் கூட்டாளிகளை அடையாளம் காண இயலாது. அதற்கு கால அவகாசம் தேவை. தற்போது ஏற்றுமதிக்கு தயாராக உள்ள பாமாயிலை அதன் உற்பத்தியாளர்கள் பாதுகாக்க முடியும். குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் தொடங்கி, அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை பாமாயிலை கெட்டுப்போகாமல் வைத்திருக்க முடியும்," என்றார் சிவநேசன்.

அதேசமயம் ஆறு மாதங்களுக்குள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டாக வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதையும் அவர் நினைவூட்டுகிறார்.

எனவே தென்கிழக்காசியாவில் தனது வர்த்தகப் போட்டியாளரை எதிர்கொள்ள வேண்டும் எனில், இந்தியாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்குக் காத்திருக்க இயலாது என மலேசியா உணர்ந்துள்ளதாக தெரிகிறது.

எனவேதான் கூடுதல் சர்க்கரை இறக்குமதி என்ற அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமற்ற சமசர நடவடிக்கையை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்துள்ளது மலேசியா என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: