You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலியா காட்டுத்தீ: "இதை இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம்" - ஸ்காட் மோரிசன்
ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவையும் புரட்டிப்போட்டு வரும் காட்டுத்தீயை தான் கையாளும் விதம் குறித்து அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
காட்டுத்தீ விவகாரம் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆஸ்திரேலிய அரசு மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தி வரும் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான வீடுகள் எரிந்து கருகியுள்ளன.
அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய காடுகளில் வாழும் லட்சக்கணக்கான விலங்குகள் இந்த காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பூதாகரமாகி வரும் காட்டுத்தீ விவகாரம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய ஸ்காட் மோரிசன், பல்வேறு விடயங்களை இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம் என்று தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களான நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று பாதிப்புகளை பார்வையிட்டு வரும் மோரிசன் மக்களால் தொடர்ந்து இழிவுப்படுத்தப்பட்டு வருகிறார்.
உதாரணமாக, நியூ சௌத் வேல்ஸின் கொபர்கோ எனும் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர், தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்குரிய மேலதிக வளங்கள், உதவிகளை தீயணைப்பு படைக்கு வழங்குங்கள் என்று தெரிவித்த நிலையில், பலர் மோரிசனை பார்த்து "முட்டாள்" என்று அழைத்தனர். மேலும், "இனி இந்த பகுதியிலிருந்து உங்களுக்கு எந்த வாக்கும் கிடைக்காது" என்று உள்ளூர் மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
"இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த விடயம்தான், ஆனால் மற்றவர்களை போன்று பிரதமருக்கும் உடலில் சதையும், இரத்தமுமே உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்" என்று ஏபிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் மோரிசன் தெரிவித்துள்ளார்.
காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் சந்திக்கும் அழுத்தம் குறித்து பேசிய ஸ்காட் மோரிசன், இதுபோன்ற பேரிடர்களின்போது அரசாங்கம் களத்தில் நேரடியாக இறங்கி செயல்படுவதற்கான அவசியத்தை உணர்ந்துள்ளதாக கூறினார்.
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ விவகாரம் பூதாகரமாகிய நிலையில், கடந்த மாதத்தின் இறுதியில், பிரதமர் ஸ்காட் மோரிசன் அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில் தன் மீதான விமர்சனத்தை தாங்க முடியாத மோரிசன், ஹவாய் பயணத்தை பாதிலேயே ரத்து செய்துவிட்டு ஆஸ்திரேலியா திரும்பினார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்