You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானில் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை எதிர்த்து போராட்டம்: அமெரிக்கா ஆதரவு
உக்ரேனிய பயணிகள் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தவில்லை என்று முதலில் கூறிய இரான் அரசு, பின்பு மற்ற நாடுகளின் குற்றஞ்சாட்டுகளை தொடர்ந்து குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதை கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரான் தலைநகர் டெஹ்ரானில் குறைந்தது இரண்டு பல்கலைக்கழகங்களின் முன்பு குவிந்த நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், இரானிய அரசு அதிகாரிகளை 'பொய்யர்கள்' என்று கூறி முழக்கமிட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"ஊக்கமளிக்கக் கூடிய" இந்த போராட்டத்துக்கு தான் ஆதரவு அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி புறப்பட்ட விமானம் அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்து மூன்று நாட்களுக்கு பிறகு, நேற்று (சனிக்கிழமை) தாங்கள் "தவறுதலாக" அந்த விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக இரான் ராணுவம் அறிவித்தது.
இரானின் புரட்சிகர ராணுவ படைக்கு சொந்தமான முக்கிய தளத்தை ஒட்டி உக்ரைன் விமானம் பறந்தபோது, 'மனித தவறுகளின்' காரணமாக அதை சுட்டு வீழ்த்திவிட்டதாக அந்நாட்டு ராணுவம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, தாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்கா , கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தெரிவித்தன.
அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த இரான், தற்போது விமானத்தை சுட்டு வீழ்த்தியது தாங்கள்தான் என்று அறிவித்துள்ளது உலகம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
போராட்டத்தில் நடந்தது என்ன?
டெஹ்ரானிலுள்ள ஷெரீப், அமீர் கபீர் ஆகிய பல்கலைக்கழகங்களின் வெளியே சனிக்கிழமையன்று கூடிய மாணவர்கள் முதலில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு அதே கூட்டம் சில மணிநேரங்களுக்கு பிறகு போராட்ட களமாக உருவெடுத்தது.
இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இரான் அரசு சார்பு செய்தி முகமையான ஃபார்ஸ், "பல்கலைக்கழகங்களின் முன்பு கூடிய கிட்டதட்ட 1,000 போராட்டக்காரர்கள் இரானிய தலைவர்கள் பற்றிய எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதோடு, அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்த இரான் புரட்சிகர ராணுவ படையின் தலைமை தளபதி காசெம் சுலேமானீயின் படங்களை கிழித்தெறிந்தனர்" என செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் மற்றும் அந்த சம்பவத்தை முதலில் மறைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இரானின் அதிவுயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனியை குறிக்கும் வகையில் "கமாண்டர் இன் சீப் பதவி விலகுக" மற்றும் "பொய்யர்களுக்கு மரணம்" ஆகிய முழக்கங்களையும் போராட்டக்காரர்கள் எழுப்பினர்.
சாலைகளை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கலைந்துபோகச் செய்ததாக செய்திகள் தெரிவிக்கும் நிலையில், அப்போது கண்ணீர் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் காணொளிகள் பரப்பப்பட்டு வருகின்றன.
மேலும், இரானிய அரசாங்கத்தை கண்டிக்கும் வகையிலான பதிவுகளை சமூக ஊடகங்களில் பொது மக்கள் இட்டு வருகின்றனர்.
எனினும், சுலேமானீயின் இறுதிச்சடங்கின்போது குவிந்த கூட்டத்தை விட, நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த எதிர்ப்பு போராட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் பங்கெடுத்தனர்.
விழுந்து நொறுங்கிய விமானம்
உக்ரைன் இண்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த விமானம் ஜனவரி 8ஆம் தேதி டெஹ்ரானில் உள்ள இமாம் காமேனீ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணித்த 176 பேருமே உயிரிழந்தனர்.
தங்கள் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், தலைநகர் டெஹ்ரானில் இருந்து கிளம்பிய இந்த விமானம் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களில் 82 பேர் இரான் நாட்டவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள், ஒன்பது விமான ஊழியர்கள் உள்பட 11 உக்ரைன் நாட்டவர்கள் ஆவர்.
பத்து சுவீடன் நாட்டவர்கள், நான்கு ஆப்கானியர்கள், மூன்று பிரிட்டானியர்கள் மற்றும் மூன்று ஜெர்மானியர்களும் இறந்தவர்களில் அடக்கம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: