இலங்கை வரலாற்றிலேயே அதிக யானை மரணங்கள் நடந்தது 2019ல் மற்றும் பிற செய்திகள்

2019ம் ஆண்டில் மட்டும் இலங்கையில் 361 யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை வரலாற்றில் ஒரே ஆண்டில் பதிவான அதிகபட்ச யானைகள் இறப்பு இதுதான் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றில் பெரும்பாலான யானை மரணங்கள் மனிதர்களால் நிகழ்த்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இலங்கையிலுள்ள காடுகளில் மொத்தம் 7,500 யானைகள் இருப்பதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் யானைகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம், எனினும் காடுகளிலிருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் வரும்போது பிரச்சனை வெடிக்கிறது.

இலங்கையில் யானைகள் போற்றப்படுகின்றன, ஆனால் சில விவசாயிகள் அவற்றை அழிவை ஏற்படுத்த கூடிய ஒன்றாகவே பார்க்கிறார்கள்.

இலங்கையில் கடந்த ஆண்டு நேர்ந்த யானைகளின் உயிரிழப்புகளில், 85 சதவீதத்துக்கு மனிதர்களின் நடவடிக்கைகளே காரணம் என்று பிபிசியிடம் கூறுகிறார் அந்நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான சஞ்சீவ சமிக்கரா.

மின்வேலிகள், நஞ்சு, உணவுகளில் மறைத்து வைக்கப்பட்ட வெடிபொருட்கள் ஆகியவற்றின் மூலம் மனிதர்கள் யானைகளை கொல்வதாக அவர் மேலும் கூறுகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் ஏழு யானைகள் கொல்லப்பட்டதற்கு உள்ளூரை சேர்ந்தவர்கள் தங்களது பயிர்களை பாதுகாப்பதற்காக நஞ்சு கொடுத்ததே காரணமாக இருக்கலாம் என்று இலங்கை வனத்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

இலங்கை முழுவதும் காடுகளை ஒட்டிய பகுதிகளில் மனிதர்களின் இடப்பெயர்வு அதிகரித்து வருவதால், காடுகளில் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் யானைகள் ஊருக்குள் வருவதாக கூறுகிறார் பிபிசி தெற்காசியப் பிரிவு ஆசிரியர் அன்பரசன் எத்திராஜன்.

"இந்திய பிரதமர் மோதியின் பிரதிநிதி என்னை சந்தித்துப் பேரம் பேசினார்"

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரது நேரடி உத்தரவின் பேரில் இந்திய அரசின் பிரதிநிதி ஒருவர் தம்மை சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்துள்ளார் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்.

காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், தாம் தகுந்த பாதுகாப்புடன் இந்தியா திரும்ப வழிவகை செய்யப்படும் என அந்தப் பிரதிநிதி தம்மிடம் உறுதியளித்ததாகவும் ஜாகிர் நாயக் குறிப்பிட்டுள்ளார்.

ஜாகிர் நாயக்கின் கூற்று தொடர்பாக இந்திய அரசு தரப்பில் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

முஸ்லிம் பெண்கள் முன்னெடுத்துள்ள பெரும் போராட்டம்

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், எதிர்ப்பின் மையமாகிவிட்டது. இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்வதற்கான தகுதியில் இருந்து முஸ்லிம்களை நீக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிர்ப்பு தெரிவித்து, ஸ்கார்ப் அணிந்துள்ள பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

எச்சரிக்கைகள், துப்பாக்கிச் சூடுகள், கண்ணீர் புகைக்குண்டு வீச்சுகள், வழக்குப் பதிவுகளுக்குப் பிறகும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் பெண்களின் தன்னெழுச்சியால் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாகிஸ்தானால் சமரசம் செய்ய முடியுமா?

இஸ்லாமாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையில் சமாதானம் ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கும் என்று கூறினார்.

சௌதி அரேபியா மற்றும் அமெரிக்காவுக்கு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷி பயணம் மேற்கொள்வதாக ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய கிழக்கில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சமாதானத்தை ஏற்படுத்தும் நிலையில் பாகிஸ்தான் இருக்கிறதா என்று பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி விளக்குகிறார்.

136 பாலியல் வல்லுறவு குற்றங்கள்: ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர்

159 பாலியல் குற்றங்கள் மற்றும் 136 பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்காக பிரிட்டனில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. "அவரை விடுவிப்பது என்றும் பாதுகாப்பாக இருக்காது" என்று இவருக்கு தீர்ப்பு எழுதிய நீதிபதி கூறியிருக்கிறார்.

ரேயின்ஹார்டு சினாகா - மான்செஸ்டர் கிளப்களுக்கு வெளியில் இருந்து 48 ஆண்களை வசீகரித்து அழைத்துச் சென்று, போதை மருந்து கொடுத்து, தாக்கியதோடு, தாக்கியதை படம் பிடித்து வைத்தார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

36 வயதான சினாகா, குறைந்தது 190 பேருக்கு குறி வைத்திருந்தார் என்பதற்கு காவல் துறையினரிடம் ஆதாரங்கள் உள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: