You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் ஏவுகணை தாக்குதல்: வேண்டுமென்றே உயிர்பலிகள் வராமல் தாக்குதல் நடத்தப்பட்டதா?
இரானின் மூத்த ராணுவ தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு, தகுந்த விலையை அமெரிக்கா அளிக்க வேண்டியிருக்கும் என கடும் சீற்றத்துடன் இரான் எச்சரித்திருந்தது.
மேலும் எச்சரித்தது போலவே, கடந்த புதன்கிழமை இராக்கின் அல்-அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது பத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இரான் தாக்குதல் நடத்தியது.
கடும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என இரான் எச்சரித்திருந்தாலும், அந்நாட்டின் தாக்குதலால் உயிர்பலி ஏதும் ஏற்படவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
அப்படியானால், வேண்டுமென்றே உயிர்பலியை தவிர்த்ததா இரான்?
இரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையினருக்கு நெருக்கமான ஊடகமாக அறியப்படும் டஸ்நிம் செய்தி நிறுவனம், ஃபடே-313 மற்றும் குயம் ரக ஏவுகணைகள் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இராக்கிலுள்ள தங்களது இரண்டு ராணுவ தளங்கள் மீது டஜன் கணக்கான பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை கொண்டு இரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இரானின் தாக்குதலில் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும், தளத்திற்கு மிக குறைந்த சேதமே ஏற்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதும், அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரியான மார்க் மில்லே, இதனை ஒரு மோசமான தாக்குதலாக கருதலாம் என தெரிவித்துள்ளார்.
ஆனால் உயிர்பலிகள் குறைவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே இரான் தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசுகளுக்கு நெருக்கமான சிலர், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் அமெரிக்காவுடனான மோதல் மேலும் தீவிரமாவதை தடுப்பதற்காக, அந்நாட்டு ராணுவ தளத்தின் உயிர் பலி ஏற்படும் சாத்தியம் உள்ள சில முக்கிய பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாவதை இரான் தவிர்த்துவிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தங்கள் தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக கடந்த செவ்வாய்கிழமை மதியமே உளவுத்துறை தகவல்கள் மூலம் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிய வந்துவிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
உளவுத்துறையின் எச்சரிக்கை கிடைத்ததற்கும், தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்திற்கும் இடையே பல மணி நேர இடைவேளை இருந்ததால், தங்கள் படை வீரர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதற்கு போதுமான கால அவகாசம் அமெரிக்காவுக்கு கிடைத்தது என பெண்டகனுக்கான பிபிசி செய்தியாளர் டேவிட் மார்ட்டின் கூறுகிறார்.
செயற்கைக்கோள்கள் ,சமிஞ்கைகள் மற்றும் தகவல் தொடர்பு இடைமறிப்பு ஆகியவற்றிலிருந்து கிடைத்த கலவையான தகவல்கள் மூலம் தாக்குதல் குறித்து முன்னரே தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இந்த நுட்பங்களே, வடகொரியாவை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் தனக்கு பரிட்சயமான அமெரிக்க மூத்த ராணுவ தளபதி ஒருவர், இந்த ஊகங்களை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார் என செய்தியாளர் டேவிட் மார்ட்டின் கூறுகிறார். மேலும் தங்களுடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே அமெரிக்கர்களின் உயிரை காப்பாற்றியதாகவும் அந்த ராணுவ அதிகாரி மார்ட்டினிடம் தெரிவித்துள்ளார்.
``திட்டமிட்டே உயிர்பலி தவிர்க்கப்பட்டதா அல்லது ஏவுகணைகளின் தயாரிப்பு மற்றும் துல்லியத்தன்மை ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக உயிர்பலி இல்லையா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. ஆனால் அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளை ஏவுவது ஆபத்தான ஒரு முடிவு `` என பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஜொனாதன் மார்கஸ் தெரிவிக்கிறார்.
மேலும் அவர், `தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகள் குறித்த முதற்கட்ட செயற்கைக்கோள் படங்களை பார்க்கும் போது, அல் அசாத் விமானத் தளத்தில் பல கட்டுமானங்கள் சேதமடைந்துள்ளதை பார்க்க முடிகிறது. எனவே உயிர்பலி இல்லாததற்கு காரணம் அதிர்ஷ்டமோ அல்லது வடிவமைப்போ காரணமாக இருக்கும்`` என கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: