ரஷ்யா: பால்கனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை குளிரில் உறைந்து மரணம் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவின் கடும் பனியில் வீட்டின் பால்கனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை குளிரில் உறைந்து உயிரிழந்தது.
கிழக்கு ஹபார்வ்ஸ்க் பிராந்தியத்தில் -7 டிகிரி செல்ஸியஸ் குளிரில், 7 மாத குழந்தையை, 5 மணிநேரத்திற்கு பால்கனியில் தனியே விட்டு சென்ற பெற்றோர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வகுகின்றனர்.
நல்ல காற்றை சுவாசிக்க வீட்டில் உள்ள பால்கனியில் குழந்தையை அதன் சிறிய தள்ளுவண்டியில் பெற்றோர் அமரவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் குழந்தை ஹைப்போதர்மியாவால் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. ஹைப்போதர்மியா என்பது கடும் குளிரினால் உடலின் வெப்பநிலை மிகவும் குறையும்போது ஏற்படுகிறது.
இது குறித்து அந்த பிராந்தியத்தின் சுகாதார துறை அமைச்சர் கூறுகையில் ''இங்கு நிலவும் கடும் குளிரினால் யாரையும் தனியே விடுவது ஆபத்து. குறைந்த பட்ச வெப்பநிலையால், குழந்தைகள் விரைவில் பாதிக்கப்படுவார்கள், அதனால் எப்போதும் குழந்தைகள் கண்காணிக்கப்படவேண்டும் '' என்றும் கூறியுள்ளார்.

ஜே.என்.யு. போராட்டத்தில் தீபிகா படுகோன்: பாதிக்கப்பட்ட மாணவர்களோடு நின்றார்

பட மூலாதாரம், SPICE PR
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து முகமூடி அணிந்த வன்முறை கும்பல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.
முகமூடி அணிந்த கும்பல் ஒன்று டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து கடுமையாகத் தாக்கியது. இதில் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவி ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்.
காயம்பட்ட இடதுசாரி மாணவர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாஜக ஆதரவு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குற்றம்சாட்டுகின்றனர்.

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்

பட மூலாதாரம், DELHI POLICE
டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றவாளிகளின் தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் வழங்கப்பட வேண்டும் எனவும் அப்பெண்ணின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த தேதிக்கு முன்னதாக குற்றவாளிகள் கருணை மனு மற்றும் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 'நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவித்தால் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்'

பட மூலாதாரம், BBC
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆளுநர் இதுவரை முடிவு ஏதும் எடுக்கவில்லை. இந்நிலையில், நளினியின் சார்பில் புதிதாக ஒரு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.

இரான் தளபதி சுலேமானீ இறுதிச்சடங்கு: கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலி

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க டிரோன் விமானம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதாக இரானிய ஊடகங்கள் கூறுகின்றன.
தென்கிழக்கு இரானின் கெர்மான் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 48க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசெம் சுலேமானீயின் உடல் இரானிலுள்ள அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது இறுதிச்சடங்கில் மில்லியன்கணக்கான மக்கள் கலந்து கொள்ளலாம் என ஏற்கனவே கணக்கிடப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












