ஆசிரியரை கொலை செய்த 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு மரண தண்டனை மற்றும் பிற செய்திகள்

ஆசிரியர் ஒருவரை துன்புறுத்தி கொலை செய்த குற்றத்திற்காக 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு சூடான் நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது.

அந்நாட்டின் அதிபர் ஒமர் அல்-பஷீர் அரசாங்கத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 36 வயதான அஹமத் அல்-கைர் கைது செய்யப்பட்டார். காவலில் எடுக்கப்பட்ட அவர், கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.

சூடானின் கிழக்கு பகுதியில் உள்ள கஸாலா என்ற மாநிலத்தில் உள்ள தடுப்பு காவல் மையத்தில் அஹமத் அல்-கைர் அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்டது நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது.

29 புலனாய்வு அதிகாரிகளுக்கும் தண்டனை அறிவித்த நீதிபதி, உயிரிழந்த அல்-கைரின் சகோதரரிடம், அவர்களை மன்னிக்க விரும்புகிறீர்களா அல்லது அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அந்த சகோதரர், 29 பேரையும் தண்டிக்க வேண்டும் என்று கூறினார்.

காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க கடலை நோக்கி படையெடுக்கும் மக்கள்

ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

காட்டுத் தீயை அணைக்க நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு ராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.

காட்டுத் தீயினால் மலக்கூட்டாவில் உள்ள மக்கள் கப்பலில் ஏறி கடலுக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வானம் ரத்தம் போல் சிவந்து காணப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பியது ஒரு பயங்கரமான அனுபவம் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி: அதிகாரங்கள் என்னென்ன?

பிபின் ராவத் இந்தியாவின் முதல் முப்படைகளுக்கான தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சகத்தில் ஏற்கனவே இருக்கும் நான்கு துறையின் செயலாளர்களுடன் 5வது செயலாளராக உருவாக்கப்பட்ட பதவியே இந்த முப்படைகளின் தளபதி.

பாதுகாப்பு அமைச்சருக்கு முப்படைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் முதன்மை ஆலோகராக செயல்படுவார். பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் மற்றும் பாதுகாப்புத்துறை திட்டமிடல் குழு ஆகியவற்றில் பங்காற்றுவார்.

பாதுகாப்புத் அமைச்சகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராக, அதற்கு தலைமை வகிப்பார்.

சிஏஏவா...? சிசிஏவா...? கேலிக்குள்ளான பாஜகவின் ட்விட்டர் டிரெண்ட்

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அந்த சட்டத்துக்கு ஆதரவாக இணையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மேற்கொண்ட பிரசாரம் பெரும் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் பல ஹாஷ்டேகுகள் கடந்த சில தினங்களாக டிரெண்டாகி வந்தன.

இந்த சூழலில், #IndiaSupportsCCA என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இந்த டிரெண்டை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த குறிப்பிட்ட ஹாஷ்டேக் #IndiaSupportsCAA என்று இருந்திருக்க வேண்டும். ஒரே ஒரு எழுத்து மாறியதால் பெரும் நையாண்டிக்கு உள்ளாகி வருகிறது பாஜக.

ஜாகிர் நாயக் குறித்து பல்கலைக்கழகத் தேர்வில் கேள்வி

ஜாகிர் நாயக் தொடர்பாக மலேசிய பல்கலைக்கழகம் ஒன்றின் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அப்பல்கலைக்கழகத்தை பலரும் விமர்சித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய கேள்வி தேர்வில் இடம்பெற்றது குறித்து விசாரணை நடந்து வருவதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகம் (UniMAP) அண்மையில் இன உறவுகள் தொடர்பான பாடத்துக்குரிய தேர்வை நடத்தியது. அதில்தான் சர்ச்சைக்கு வித்திட்ட கேள்வி இடம்பெற்றிருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: