ஜாகிர் நாயக் குறித்து பல்கலைக்கழகத் தேர்வில் கேள்வி: வெடித்தது புது சர்ச்சை

ஜாகிர் நாயக் தொடர்பாக மலேசிய பல்கலைக்கழகம் ஒன்றின் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அப்பல்கலைக்கழகத்தை பலரும் விமர்சித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய கேள்வி தேர்வில் இடம்பெற்றது குறித்து விசாரணை நடந்து வருவதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகம் (UniMAP) அண்மையில் இன உறவுகள் தொடர்பான பாடத்துக்குரிய தேர்வை நடத்தியது. அதில்தான் சர்ச்சைக்கு வித்திட்ட கேள்வி இடம்பெற்றிருந்தது.

"ஜாகிர் நாயக் இஸ்லாமிய உலகத்தின் அடையாளம் (மேதை). உண்மையான இஸ்லாத்தை பரப்புவதில் அவர் தீவிரமாக உள்ளார். குர்-ஆனைப் பின்பற்றுகிறார். "தம்மிடம் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்குமான காரணத்தையும் பதில்களையும் அவரால் அளிக்க முடிகிறது. எனினும் மலேசியாவில் அவர் தனது சமயப் பிரசங்கம் செய்ய அனுமதி இல்லை. ஒரு மலேசிய குடிமகனாக ஏன் இவ்வாறு நடந்தது? என்பது குறித்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்."

இதுதான் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி.

இதற்கு கீழ்கண்ட நான்கு பதில்களை குறிப்பிட்டு, அதில் ஏதேனும் ஒரு பதிலை மாணவர்கள் தேர்வு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

1. மலேசியர்கள் தகவல்களைப் பெறுவதில் அக்கறை காட்டுவதில்லை.

2. மலேசியர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். காரணமின்றி தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக நினைப்பவர்கள்.

3. மலேசியர்கள் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஒரு கூட்டத்தின் பின்னே செல்லக் கூடியவர்கள்.

4. மலேசியர்கள் தங்களது மதங்கள் குறித்தே அறிந்திராதவர்கள்.

இந்த நான்கு பதில்களும் ஜாகிர் நாயக்குக்கு ஆதரவான கருத்துகளைக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

சீரமைப்பு நடவடிக்கையில் மலேசிய கல்வித்துறை அமைச்சர் தோற்றுவிட்டார்

"ஜாகிர் நாயக் எதற்காக இந்தியாவில் தேடப்படுகிறார்? அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன? மலேசியா அவருக்கு அடைக்கலம் அளித்ததற்கான காரணம் என்ன? எதனால் பொது நிகழ்வுகளில் பேச அவருக்குத் தடை விதிக்கப்பட்டது? என்பன போன்ற தகவல்கள் ஏதும் கேள்விக்குரிய பதில்களாக அளிக்கப்படவில்லை," என்று சுட்டிக்காட்டுகிறார் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி.

இந்தத் தகவல்கள் தவிர்க்கப்படுமாயின் மாணவர்கள் சரியான பதிலைத் தேர்வு செய்ய போதுமான தகவல்கள் அளிக்கப்படவில்லை என அர்த்தமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம் இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்றும் ராமசாமி தெரிவித்துள்ளார்.

ஜாகிர் நாயக் குறித்து தாம் கருத்துரைக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஜாகிர் நாயக் சமயப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது அவரது சொந்த விவகாரம் எனக் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கல்வித்துறையை அவர் சாடியுள்ளார்.

"பொதுப் பல்கலைக்கழகங்களை சீரமைப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதில் மலேசிய கல்வித்துறையின் அமைச்சர் மஸ்லி மாலிக் தோற்றுவிட்டார்.

"இத்தகைய பல்கலைக்கழகங்கள் உலகளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்வதைக் காட்டிலும் மதம் தொடர்பான நடவடிக்கைகளிலும், தங்களை அடையாளமாக முன்னிலைப்படுத்திக் கொள்ளும் குற்றவாளிகளை உயர்ந்தவர்களாக காட்டுவதிலும்தான் முனைப்பாக உள்ளன," என்று ராமசாமி மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பை பதிவு செய்தது மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி

இதற்கிடையே மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் இது தொடர்பாக கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

"ஜாகிர் நாயக் இஸ்லாமிய உலகத்தின் அடையாளம் என்று குறிப்பிடுவது குறித்து நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பதில்கள் குறித்தே கேள்வி எழுப்புகிறோம்," என்று அக்கட்சியின் தேசிய உதவித் தலைவர் சிவராசா மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு மேதை குறித்து பெருமைப்படுவது பகுத்தறிவற்ற செயலில் முடிவடையக் கூடாது என்று பினாங்கு மாநில முஃப்தி வான் சலீம் வான் மொஹமத் நூர் தெரிவித்துள்ளார்.

தேர்வுத் தாளை அமைக்கும் போது பல்கலைக்கழகங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, பல்கலைக்கழகத் தேர்வில் ஜாகிர் நாயக் குறித்த கேள்வி எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து மலேசியக் கல்வி அமைச்சு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ வலியுறுத்தி உள்ளார்.

விசாரணை நடத்தப்படும் என பல்கலைக்கழகம் அறிவிப்பு

இதற்கிடையே, தேர்வில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து விசாரணை நடந்து வருவதாக மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

"தற்போதைய நிலையில் உணர்வுகளைத் தூண்டும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம். விரிவான விசாரணை நடைபெற கால அவகாசம் அளிக்க வேண்டும்," என பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை முடிவடைந்த பின்னர் அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றும் அப்பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

பல்வேறு கலாசாரபின்னணியைக் கொண்ட மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் படித்து வருவதாக அதன் நிர்வாகம் சுட்டிக்காட்டி உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: