You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
’காஷ்மீரில் இளைஞர்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர்’: ஜாகிர் நாயக்
காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு மத போதகர் ஜாகிர் நாயக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகளால் காஷ்மீரில் தற்போது பாலத்தீனத்தைப் போன்ற நிலைமை உருவாகி வருவதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகிர் நாயக், தற்போது மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அண்மையில் மலேசிய வாழ் இந்தியர்கள், சீனர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்களால் சர்ச்சை வெடித்துள்ளது.
இதையடுத்து அவரை நாடு கடத்த வேண்டும் எனும் கோரிக்கை மலேசியாவில் வலுத்து வரும் நிலையில், அவர் பொது இடங்களில் பேசுவதற்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக ஜாகிர் நாயக் தரப்பு மவுனம் காத்து வந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
’காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது’
அதில், இந்தியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலமான காஷ்மீர் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாக ஜாகிர் நாயக் குறிப்பிட்டுள்ளார். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை இஸ்ரேல் வழிநடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"லட்சக்கணக்கான படையினரை காஷ்மீரில் திணிப்பது என்பது நாட்டின் மிகப் பெரிய முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பாஜக அரசின் போர் நடவடிக்கையாகும். காஷ்மீர் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டு அம்மாநிலத்திற்கு வெளியே உள்ள விவரம் தெரிவிக்கப்படாத சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்." என்று அவர் தெரிவித்தார்.
’சித்ரவதைக்கு ஆளாக்கப்படும் காஷ்மீர் இளைஞர்கள்’
"இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பல மணி நேர கடும் சித்ரவதைகளுக்கு ஆட்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் தடிகள், இரும்புக் கம்பிகளால் அடிப்பது, மின்சாரம் பாய்ச்சுவது போன்றவையும் பல மணி நேரங்களுக்கு ஒருசேர நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன," என்று ஜாகிர் நாயக் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்கள், காஷ்மீர் பெண்கள், குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும் அவர் சாடியுள்ளார்.
ஆனால் இந்திய அரசோ வழக்கம் போல் இத்தகைய இறப்புகள், காயங்கள் குறித்து மறுப்பு தெரிவிப்பதுடன், இந்திய ராணுவத்தின் தவறுகளையும் தொடர்ந்து மறுத்து வருவதாக ஜாகிர் நாயக் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
’பாலத்தீனத்தை போன்ற நிலைமை’
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முடிவை, காஷ்மீர் மக்கள் மீதான மோடி அரசின் அட்டூழியம் என்றும் அவர் விவரித்துள்ளார்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றுக்கு இஸ்ரேல் மீது அபிமானம் உண்டு என்று குறிப்பிட்டுள்ள ஜாகிர் நாயக், தற்போது காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசுக்கு இஸ்ரேல் ஆலோசனை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் காஷ்மீரில் பாத்தீனத்தைப் போன்ற நிலைமை உருவாகி வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஜாகிர் நாயக்கை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரசிடம் கடந்த பல மாதங்களாக இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், இந்திய அரசை மிக வெளிப்படையாகவும் காட்டமாகவும் விமர்சித்துள்ளார் ஜாகிர் நாயக்.
பிற செய்திகள்:
- பிக்பாஸ்: ஓவியா முதல் லொஸ்லியா வரை சந்தித்த மனஅழுத்தமும், விமர்சனங்களும் - காரணம் என்ன?
- ஜாகிர் நாயக்கை நாடு கடத்த போராடும் பினாங்கு ராமசாமி - வலுக்கும் மோதல்
- உளவுப் பார்க்க புறாக்களை பயன்படுத்தியது எப்படி? - முக்கிய ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்காவின் சிஐஏ
- சுபஸ்ரீ மரணம்: நொறுங்கிப் போன குடும்பம் - பிரியாவிடை தந்த பெற்றோர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்