பினராயி விஜயன்: CAA திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள சட்டசபையில் தீர்மானம்

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டங்களில் 15க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் நடந்த போராட்டங்களில் பங்கெடுத்த 8000க்கும் அதிகமான மக்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

சென்னை பெசண்ட் நகரில் நான்கு பெண்கள் உட்பட 5 பேர் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அதன் பின் கோலமே ஒரு போராட்ட வடிவமாக மாறியது.

மத்திய அரசின் சிஏஏ, என்ஆர்சி ஆகியவற்றை தங்களது மாநிலங்களில் அமல்படுத்தப்போவது இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

இப்படியான சூழலில் கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

இதற்கு ஆதரவாக 138 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

பினராயி விஜயன், "மதச்சார்பின்மையை பன்னெடுங்காலமாக பாதுகாத்து வருகிறது கேரளா. கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள் என பலரும் இந்த நிலத்துக்கு வந்துள்ளனர். வரலாற்று தொடக்க காலங்களிலேயே கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கேரளாவுக்கு வருகை தந்தவர்கள். இந்த மரபை பாதுகாக்க விரும்புகிறோம்," என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :