2019ஆம் ஆண்டு உலக நிகழ்வுகள்: தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய சம்பவங்கள்

கிரைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல்

பட மூலாதாரம், Empics

படக்குறிப்பு, கிரைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல் நடந்தபின் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை ஆற்றுப்படுத்திய இந்தப் புகைப்படம் அந்த சமயத்தில் உலக அளவில் பிரபலமானது.
    • எழுதியவர், மரிய மைக்கேல்
    • பதவி, பிபிசி தமிழ்

2019ம் ஆண்டு உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 20 முக்கிய நிகழ்வுகளை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

01. நிலவின் தென் துருவப் பகுதியில் இறங்கிய சீனாவின் சாங்'ங-4

சீனாவின் சாங்'ங-4

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் சாங்'ங-4 என்ற விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியிலுள்ள ஐட்கென் படுகையில் பெய்ஜிங் நேரப்படி ஜனவரி 3ம் தேதி காலை 10.26 மணிக்கு தரையிறங்கியது என்று சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.

Presentational grey line

02. வெனிசுவேலா அரசியல் சாசன நெருக்கடி

குவான் குவைடோ (இடது) மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ

பட மூலாதாரம், YURI CORTEZ/Getty Images

படக்குறிப்பு, குவான் குவைடோ (இடது) மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ

ஜனவரி 10, 2019 - வெனிசுவேலா தேசிய பேரவை குவான் குவைடோவை இடைக்கால தலைவராக அறிவித்ததோடு, அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பதவியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளை தொடங்கியது.

குவைடோவை வெனிசுவேலாவின் இடைகால தலைவராக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகள் ஏற்றுகொண்டிருந்தன.

போராட்டம்

பட மூலாதாரம், John Moore/Getty Images

இதையடுத்து வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொண்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வெனிசுவேலாவில் அதிகாரத்தை அபகரிக்கப்பார்ப்பதாக ரஷ்யா கண்டித்தது.

Presentational grey line

3. அமெரிக்கா, கனடா, சீனா இடையே சர்ச்சை ஏற்படுத்திய ஹுவாவெய்

ஹூவாவெய்

பட மூலாதாரம், Getty Images

ஜனவரி 28 - ஹுவாவெய் நிறுவன தலைமை அதிகாரி மெங் வான்ட்சொ-ஐ அமெரிக்கா கேட்டுகொண்டதன் பேரில் கனடா கைது செய்தது. இந்த சம்பவம் கனடா, சீனா, அமெரிக்கா இடையே ராஜ்ஜீய சர்ச்சையாக உருவாகியது. ஹுவாவெய் நிறுவனத்தை அமெரிக்கா கறுப்பு பட்டியலில் சேர்த்தது.

இரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை ஹூவாவெய் நிறுவனமும், அதன் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ட்சொ-வும் மீறினார்கள் என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஹூவாவெய் மறுக்கிறது.

மெங் வான்ட்சொ-ஐ கைது செய்த்து மனித உரிமை மீறல் என்று தெரிவித்த சீனா, இரண்டு கனடா நாட்டவரை கைது செய்து, அவர்கள் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டியது.

Presentational grey line

04. அரேபிய தீபகற்பத்திற்கு சென்ற முதல் போப்

அமீரகம் சென்றடைந்த போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம், Francois Nel/Getty Images

பிப்ரவரி 3 - ஐக்கிய அமீரகம் சென்ற போப் பிரான்சிஸ் அரேபிய தீபகற்பத்திற்கு செல்லும் முதல் போப் என்ற பெருமை பெற்றார். அபுதாபி வந்த அவரை முடியரசர் ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் வரவேற்றார்.

போப் பிரான்சிஸ் பங்கேற்ற மதநல்லிணக்க கூட்டத்தில் சுமார் 120,000 பேர் கலந்துகொண்டனர். சௌதி அரேபியா பங்கேற்றுள்ள நிலையில், அரேபியா செல்லும் முன் ஏமன் போர் குறித்து போப் கவலை தெரிவித்திருந்தார்.

Presentational grey line

05. தோல்வியில் முடிந்த டிரம்ப்- கிம் ஜாங்-உன் இரண்டாவது சந்திப்பு

டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன்

பட மூலாதாரம், SAUL LOEB/Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன் இரண்டாவது சந்திப்பு பிப்ரவரி 27ம் தேதி இரவு விருந்துடன் தொடங்கி வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டு நாட்கள் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், இரண்டாம் நாள் கூட்டத்தின்போது, வடகொரியாவின் கோரிக்கைகள் முழுவதையும் ஏற்றுகொள்ள முடியாது என்று கூறி டிரம்ப் வெளிநடப்பு செய்தார்.

Presentational grey line

06. கிரைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல்

கிறைஸ்ட் சர்ச் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி

பட மூலாதாரம், Carl Court/Getty Images

மார்ச் 15: கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள மிகப் பெரிய மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நியூசிலாந்தில் பயங்கரவாத குற்றச்சாட்டு வைக்கப்பட்டது இதுவே முதல்முறை

Presentational grey line

07. பாரிஸ் பழமையான நோட்ர-டாம் தேவாலய தீ விபத்து

பிரான்ஸ் நோர்டடாம் தேவாலயத்தில் தீவிபத்து

பட மூலாதாரம், FRANCOIS GUILLOT/Getty Images

ஏப்ரல் 15: பாரிஸ் நகரில், தீ விபத்தால் ஏறக்குறைய 850 ஆண்டுகள் பழமையான நோட்ர-டாம் தேவாலயம் சேதமடைந்தது.

தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டுச் சுவர்கள் ஆகியன கடுமையாகச் சேதமடைந்து இடிந்து விழுந்தன.

இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டுகளைக் கொண்ட கோபுரங்கள் உள்ளிட்ட தேவாலயத்தின் முக்கியப் பகுதிகள் தீ விபத்தில் இருந்து தப்பின.

400 தீயணைப்பு வீரர்கள் இணைந்து சுமார் 15 மணிநேரம் போராடி இந்த தீயை முழுமையாக கட்டுக்கு கொண்டு வந்தனர்.

Presentational grey line

08. இலங்கை ஈஸ்டர் தாக்குதல்

இலங்கை ஈஸ்டர் தாக்குதலில் சேதமடைந்த தேவாலயம்

பட மூலாதாரம், Getty Images

ஏப்ரல் 21. இலங்கையிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் 259 பேர் கொல்லப்பட்ட நிலையில், 500-க்கும் மேலானோர் காயமடைந்தனர்.

2009ம் ஆண்டு இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்து உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் நடைபெற்ற மிக பெரிய தீவிரவாத தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

Presentational grey line

09. தாய்லாந்து மன்னராக மணிமுடி சூடினார் வஜ்ரலாங்கோர்ன்

தாய்லாந்து புதிய மன்னர்

பட மூலாதாரம், SOPA Images/Getty Images

தாய்லாந்து அரசராக மகா வஜ்ரலாங்கோர்ன் மணிமுடி சூட்டப்பட்டார். முடிசூடும் சடங்குகள் மூன்று நாட்கள் நடைபெற்றன.

நீண்டகாலம் ஆட்சி செய்த தந்தை பூமிபோன் அடூன்யடேட் 2016ம் ஆண்டு இறந்த பின்னர், 66 வயதாகும் அரசர் மகா வஜ்ராலங்கோர்ன் அரசமைப்பு சட்ட முடியாட்சியின் மன்னரானார்.

மே மாதம் முதல் நாள், தனது மெய்காப்பாளர் பிரிவின் துணைத் தலைவர் ஜெனரல் சுதிடா வஜ்ராலங்கோர்ன் நா அயூடியா என்பவரை அரச குடும்பத்தில் சேர்த்து திருமணம் செய்து கொண்ட மன்னர் வஜ்ராலங்கோர்ன், தாய்லாந்தின் அரசியாக சுதிடா விளங்குவார் என்று அறிவித்தார்.

Presentational grey line

10. சிரியா உள்நாட்டு போரில் முக்கிய தாக்குதல்

சிரியா உள்நாட்டுப் போர் பாதிப்பு

பட மூலாதாரம், BULENT KILIC/Getty Images

மே மாதம் 6ம் தேதி சிரியா உள்நாட்டு போரில் மிக முக்கிய தாக்குதல் நடத்தியுள்ளதாக குர்து இனத்தவர் தலைமையிலான அமெரிக்க ஆதரவு படை தெரிவித்தது.

Presentational grey line

11. சௌதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்குதல்

சௌதி அரம்கோ நிறுவனத்தில் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

மே மாதம் 12ம் தேதி அரம்கோ நிறுவனத்தின் இரண்டு எண்ணெய் கப்பல் உள்பட நான்கு கப்பல்கள் சேதமடைந்தன. இதற்கு இரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

ஜூன் 13ம் தேதி நடைபெற்ற இன்னொரு எண்ணெய் கப்பல்கள் தாக்குதல், வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா 1000 படைவீரர்களை நிறுத்த காரணமாகியது.

ஜூன் 20ம் தேதி அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது.

தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கப்பல்

பட மூலாதாரம், Getty Images

செப்டம்பர் 14ம் தேதி சௌதி அரேபியா எ்ணணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர், செப்டம்பர் 21ம் தேதி, பல நுற்றுக்கணக்கான துருப்புக்களை வளைகுடாவுக்கு அனுப்பவும், ஆயுதங்களை விற்கவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதி வழங்கினார்.

Presentational grey line

12. ஆண்கள் கிரிகெட் உலகக் கோப்பை - இங்கிலாந்து சாம்பியன்

ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை - இங்கிலாந்து வெற்றி

பட மூலாதாரம், Clive Mason/Getty Images

ஜூலை 14. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதல்முறையாக இங்கிலாந்து அணி வென்றது.

வரலாறு காணாத பரபரப்போடு இந்த போட்டி நடந்து, கடைசி பந்தில் வெற்றி தோல்வியில்லாமல் சமநிலையில் முடிந்தது.

பிறகு வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவர் போட்டியும் சமநிலையில் முடிந்தது.

எனவே, ஆட்டத்திலும் சூப்பர் ஓவரிலும் அதிக பவுண்டரிகளை எடுத்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்துக்கு உலகக் கோப்பை வழங்கப்பட்டது.

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி - அமெரிக்கா சாம்பியன்

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வென்ற அமெரிக்கா

பட மூலாதாரம், Richard Heathcote/Getty Images

ஜூலை 7ம் தேதி பிரான்சி்ல் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா கோப்பையை தட்டிச்சென்றது.

Presentational grey line

13. சந்தேக நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் மசோதாவுக்கு எதிராக போராட்டம்

ஹாங்காங் போராட்டங்கள்

பட மூலாதாரம், SOPA Images/Getty Images

ஜூன் 9 - சந்தேக நபர்களை பெருநிலப்பகுதி சீனாவிடமும், மக்கௌவிடமும் ஒப்படைக்க வழிசெய்யும் மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்தில் 10 லட்சத்திற்கு மேலானோர் கலந்து கொண்டனர்.

1997ம் ஆண்டு ஹாங்காங் சீனாவிடம் வழங்கப்பட்ட பின்னர், நடைபெறும் மிக பெரிய போராட்டம் இதுவாகும்.

Presentational grey line

14. பிரிட்டனுக்கு புதிய பிரதமர்

போரிஸ் ஜாண்சன்

பட மூலாதாரம், Carl Court/Getty Images

பிரெக்ஸ்ட் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புகொள்ள மறுத்துவிட்டதால், பிரிட்டனின் முன்னாளர் பிரதமர் தெரீசா மே பதவி விலகுவதாக ஜூன் 7ம் நாள் அறிவித்ததோடு, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் அவர் விலகினார்.

ஜூலை 24ம் தேதி பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பொறுப்பேற்றார்.

Presentational grey line

15. ரஷ்யாவோடு செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்

1987ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தம்

பட மூலாதாரம், Bettmann/Getty Images

ரஷ்யா - அமெரிக்கா இடையே பனிப்போர் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து முறைப்படி விலகிவிட்டது அமெரிக்கா.

மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம் (இன்டர்மீடியேட் ரேஞ்ஜ் நியூக்ளியர் ஃபோர்சஸ் டிரீட்டி) 1987-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இடையே கையெழுத்தானது.

500 கி.மீ. முதல் 5,500 கி.மீ தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்துவதை இந்த ஒப்பந்தம் தடை செய்தது.

Presentational grey line

16. அமேசானில் வரலாறு காணாத காட்டுத்தீ

அமேசான் காட்டுத்தீ

பட மூலாதாரம், UniversalImagesGroup/Getty Images

ஆகஸ்ட் 21: பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காட்டில் தீ பற்றி பெரும் பாதிப்புகளை உண்டாக்கியது.

இந்த காட்டுத்தீ 'சர்வதேச நெருக்கடி' என்று விவாதிக்கப்படும் அளவுக்கு பெரிய அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.

அந்த வார இறுதியில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் அளவுக்கு பெரிய பிரச்சனையானது.

Presentational grey line

17. பருவநிலை மாற்றம் தொடர்பான மாணவர்கள் போராட்டம்

பருவநிலை மாற்றத்திற்கு முன்பு பிரேசிலில் நடைபெற்ற போராட்டம்.

பட மூலாதாரம், Hector Vivas/Getty Images

செப்டம்பர் 20: பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டம் உலகெங்கும் தொடங்கியது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

16 வயது சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா டூன்பெர்க்

பட மூலாதாரம், MARTIN OUELLET-DIOTTE/Getty Images

படக்குறிப்பு, 16 வயது சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா டூன்பெர்க்

இதனை தொடர்ந்து செப்டம்பர் 27ம் தேதி கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ செயற்பாட்டளார் கிரேட்டா துன்பர்க் மோன்ரீலில் நடத்திய போராட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்றனர். அன்று உலகெங்கும் நடைபெற்ற போராட்டங்களில் 40 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

Presentational grey line

18. டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம்

டொனால்ட்டு டிரம்ப்

பட மூலாதாரம், Win McNamee/Getty Images

செப்டம்பர் 24: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் தொடர்பான முறையான விசாரணைக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பலோசி அறிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகள் அவையில் இந்த விசாரணை தொடங்கியது.

தனது அரசியல் எதிராளியை வீழ்த்த வெளிநாட்டு நபர் ஒருவரிடம் உதவி கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது குறித்த முறையான விசாரணை ஒன்றை அந்நாட்டின் ஜனநாயக கட்சியினர் துவக்கியுள்ளனர்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சியினரின் முயற்சிகளை ''குப்பை'' என்று வர்ணித்திருந்தார்.

Presentational grey line

19. இராக்கை ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம்

இராக் போராட்டம்

பட மூலாதாரம், AHMAD AL-RUBAYE/Getty Images

இராக் நாட்டு மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகக் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

மிக அதிகமாக இருக்கும் வேலைவாய்ப்பின்மை, மோசமான பொதுச் சேவைகள், மற்றும் ஊழல். இதுதான் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடுவதற்கான முக்கிய காரணங்கள்.

Presentational grey line

20. ஜமால் கஷோக்ஜி கொலை: 5 பேருக்கு மரண தண்டனை

ஜமால் கஷோக்ஜி

பட மூலாதாரம், Getty Images

டிசம்பர் 23: கடந்த ஆண்டில் சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்கியது.

துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் இருக்கும் சௌதி அரேபியாவின் துணை தூதரகத்தில் அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சௌதி அரசு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த ஆண்டின் இறுதியில் அவரது கொலையாளிகள் என்று சௌதி அரசு கூறும் நபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை சௌதி மீது எழுந்துள்ள சர்வதேச கண்டனங்கள் மற்றும் விமர்சனங்களை போக்கும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: