செல்பேசி பயன்படுத்துவதற்கு முகத்தை ஸ்கேன் செய்வதை கட்டாயமாக்கும் சீனா மற்றும் பிற செய்திகள்

செல்பேசி பார்க்கும் இளைஞர்கள் இருவர்

பட மூலாதாரம், AFP

சீனாவில் புதிய செல்பேசி சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்கின்றவர்கள் தங்களின் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது.

நாட்டிலுள்ள மில்லியன் கணக்கான இணையதள பயனாளர்களின் அடையாளங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதற்கு இது அவசியமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த புதிய விதிமுறை டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இணையவெளியில் சஞ்சரிக்கும் குடிமக்களின் சட்டபூர்வ உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க விரும்புவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக சீன அரசு தெரிவித்திருக்கிறது.

செல்பேசி கைரேகை பதிவு

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் மக்களை கண்காணிக்க முகத்தை அடையாளங்காணும் தொழில்நுட்பத்தை அந்நாட்டு அரசு ஏற்கெனவே பயன்படுத்தி வருகிறது.

இத்தகைய தொழில்நுட்பங்களை உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் நாடாக சீனா உள்ளது. ஆனால், சமீபத்தில் நாடு முழுவதும் இதனை அதிகமாக பயன்படுத்த தொடங்கியிருப்பது அந்நாட்டில் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

புதிய செல்பேசி சேவை அல்லது புதிய தரவுகளை பதிவிறக்கும் வசதியை பெற மக்கள் முயலும்போது அவர்களின் தேசிய அடையாள அட்டையை வழங்க வேண்டும். அவர்கள் புகைப்படமும் எடுக்கப்படுகிறார்கள்.

ஆனால், மக்கள் வழங்குகின்ற அடையாள அட்டையோடு, அவர்களது அடையாளங்கள் ஒத்து போகின்றனவா என்பதை பார்க்க அவர்களின் முகம் இப்போது ஸ்கேன் செய்யப்படும்.

தங்களின் சொந்தப் பெயர்களில் மக்கள் இணைய வசதியை பயன்படுத்துகிறார்களா என்பதை அறிய சீனா இத்தகைய விதிமுறைகைள அமலாக்க பல ஆண்டுகளாக முயன்று வருகிறது.

கணினியை பார்க்கும் நபர்

பட மூலாதாரம், Getty Images

இணையத்தில் மக்கள் ஏதாவது பதிவிட வேண்டுமானால் அர்களின் உண்மையான அடையாளத்தை சரிபார்க்கும் புதிய விதியை சீனா கடந்த 2017ம் ஆண்டு அமலாக்கியது.

சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிகள், செல்பேசி சேவையை பயன்படுத்துகிறவர்களை கண்டறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

சீன மக்களில் அதிகமானோர் தங்களின் செல்பேசி வழியாகதான் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த விதி அமலாக்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டபோது, சீன ஊடகங்கள் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், இத்தகைய நடவடிக்கை தீவிர கண்காணிப்பை வலுப்படுத்தும் என்று மக்கள் பலரும் சமூக ஊடகங்களில் கவலை தெரிவித்திருந்தனர்.

Presentational grey line

இலங்கையில் மண்சரிவு - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்

மண்சரிவு

பட மூலாதாரம், KRISHANTHAN

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், 1,156 குடும்பங்களைச் சேர்ந்த 4,126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

இலங்கையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்வதுடன், மோசமான வானிலை நிலவி வருகின்றது.

இந்த நிலையில், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் தொடர்ந்து பெய்த கடும் மழையுடனான வானிலையினால் நுவரெலியா பகுதியில் பெரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.

Presentational grey line

ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்

ஆப்பிள் பழம்

பட மூலாதாரம், PVM

குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் என்று கூறப்படும் புதிய வகை ஆப்பிள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த வகை ஆப்பிளை கண்டறிவதற்கு ஆராய்ச்சியாளர்களுக்கு இரு தசாப்தங்கள் ஆனதாக கூறப்படுகிறது.

'காஸ்மிக் கிரிஸ்ப்' என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஆப்பிளானது 'ஹனிகிரிஸ்ப்', 'எண்டர்ப்ரைஸ்' ஆகியவற்றின் கலப்பினமாகும். இது முதன் முதலில், 1997ஆம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது.

Presentational grey line

பாகிஸ்தானில் திடீரென ஒரு பகுதியில் பரவிய எச்.ஐ.வி: குழந்தைகளுக்கு பெருமளவு பாதிப்பு

எயிட்ஸ் பரிசோதனை

பாகிஸ்தானில் லர்கானா மாவட்டத்தில் ராட்டோடெரோ பகுதியில் ஊரக சுகாதார மையத்தில் ஏழு வயதான ஒரு ஆண் குழந்தைக்கு டாக்டர் முஸாபர் காங்ரோ மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார்.

சிறுவன் அமைதியாக, தந்தையின் மடியில் அமர்ந்திருந்தான். தன் உடல்நிலை பற்றி விசாரித்த தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த டாக்டரை பார்த்தபடி அவன் இருந்தான்.

அவனுடைய கண்களைப் பரிசோதித்த டாக்டர், சில குறிப்புகளை காகிதத்தில் எழுதினார். பிறகு சட்டையை தூக்கச் சொன்னார். தன் கைகளை சானிட்டைசர் கொண்டு சுத்தம் செய்த பிறகு, சிறுவனின் வெற்று மார்பில் ஸ்டெத்தாஸ்கோப் வைத்து, நன்றாக இழுத்து மூச்சு விடும்படி கேட்டுக்கொண்டார்.

Presentational grey line

மாணவி கூட்டு வன்புணர்வு: பிறந்தநாள் கொண்டாட பூங்கா சென்றவருக்கு கொடுமை, நால்வர் கைது

போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

கோவையில் பிளஸ் ஒன் படித்து வரும் 17 வயது மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு வன்புணர்வு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரம் செவ்வாய்கிழமை, மாலை வேளையில், தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, வீட்டின் அருகே உள்ள பூங்காவிற்கு தனது நண்பருடன் சென்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி.

அப்போது அங்கிருந்த 6 பேர் இருவரையும் தாக்கியதோடு, சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்துள்ளதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: