You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹாங்காங் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்ட போலீஸ்: கயிறு கட்டி குதித்து தப்பிக்கும் மாணவர்கள் மற்றும் பிற செய்திகள்
போலீஸாரால் சூழப்பட்ட ஹாங் காங் பல்கலைக்கழகத்திலிருந்து பலர் கயிற்றின் மூலம் வெளியில் இறங்கி இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர்.
மேலும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தைவிட்டு தப்பிக்க முயன்ற சுமார் 100 பேர் போலீஸாரின் கண்ணீர் புகைகுண்டு மற்றும் ரப்பர் குண்டுகளால் தாக்கப்பட்டனர். சிலரை போலீஸார் கைது செய்தனர்.
ஹாங் காங்கில் பல மாதங்களாக நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்துக்கான சமீபத்திய களமாக இந்த பல்கலைக்கழகம் மாறியுள்ளது.
திங்களன்று நடைபெற்ற இந்த வன்முறையில் 116 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது சமீப காலங்களில் நடைபெற்ற மிக மோசமானதொரு வன்முறை. சர்ச்சைக்குரிய ஒரு சட்ட மசோதாவை எதிர்த்து தொடங்கப்பட்ட இந்த போராட்டம் தற்போது அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டமாக வளர்ந்து நிற்கிறது.
திங்களன்று, போராட்டக்காரர்கள் முகமூடி அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை, அரசமைப்புக்கு எதிரானது என ஹாங் காங் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எங்களது இறையாண்மை மற்றும், ஹாங் காங்கின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க எங்களிடம் உள்ள உறுதியை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என சீனா எச்சரித்துள்ளது. நிலைமை கை மீறிப் போனால் அரசு கையைக் கட்டி கொண்டு வேடிக்கை பார்க்காது என பிரிட்டனுக்கான சீனத் தூதர் தெரிவித்துள்ளார்.
போராட்டடத்தின் பின்னணி மற்றும் கோரிக்கைகள் என்ன?
குற்றப் பின்னணி உடையவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட வரைவை எதிர்த்து இந்தப் போராட்டம் தொடங்கியது. எனினும் இது ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை பாதித்து, சீன தலையீட்டை அதிகரிக்கச் செய்யும் என்று போராட்டங்கள் வெடித்தது.
1898 முதல் பிரிட்டனால் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்த ஹாங் காங், 1997இல் சீனாவுடன் இணைந்தது. எனினும், 'ஒரு நாடு இரு அமைப்பு முறை' எனும் கொள்கையின்படி, சட்டம் இயற்றல், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஹாங் காங் தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
இந்தத் தன்னாட்சி உரிமை 2047ல் முடிவுக்கு வரவுள்ளது. எனினும், இது எப்போதும் தொடர வேண்டும் என்றும், ஹாங்காங் இன்னொரு சீன நகரத்தைப் போல் ஆகிவிடக்கூடாது என்றும் அந்த நகர மக்கள் விரும்புகின்றனர்.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு நாடு கடத்தினால், அது ஹாங் காங்கின் தன்னாட்சி உரிமைகளை பாதிக்கும் என்றும் சீனாவின் தலையீட்டை அதிகரிக்கச் செய்யும் என்றும் அந்த மசோதா ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டபோது விமர்சனங்கள் எழுந்தன.
சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள ஹாங் காங்கைச் சேர்ந்தவர்களை சட்ட ரீதியாக அச்சுறுத்தவும் அந்தச் சட்டம் பயன்படுத்தப்படலாம் என்றும் ஜனநாயகத்துக்கு ஆதரவானவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
அரசியல் எதிர் கருத்து உடையவர்களுக்கு எதிரானது என கருதப்படும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான மக்கள் ஹாங்காங்கில் போராடினர்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்?
இலங்கையில் ஜனாதிபதிகளை தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லப்போகிறது என்பதையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுவதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தெரிவித்தார்.
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக, கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தேர்தலில், சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து பெரும்பான்மையான வாக்குகளை வழங்கிய ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸ, இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் மக்களின் அரசியல் குறித்து, எதிர்காலத்தில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும், கலாநிதி பாஸில் உடன் பிபிசி தமிழ் பேசிய போதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.
கட்டுரையை படிக்க: இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்?
வைரலான சிறுமியின் புகைப்படம் - உண்மையில் நடந்தது என்ன?
ஐதராபாத்தில் ஐந்து வயது சிறுமி ஒருவர், கையில் தட்டுடன் பள்ளி வகுப்பறை ஒன்றின் வெளியே நின்று கொண்டு ஏக்கத்துடன் எட்டிப் பார்ப்பது போன்ற புகைப்படம் பெரும் கவனத்தை பெற்றது.
ஆனால் அந்த புகைப்படத்தின் பின்னணி வேறொன்றாக உள்ளது.
அதுகுறித்து அறிய பிபிசி தெலுங்கு சேவையின் செய்தியாளர் தீப்தி பதினி சிறுமியின் தந்தையிடம் பேசினார்.
திவ்யா என்ற அந்த சிறுமி வசிக்கும் பகுதியில் தற்போது அவள் புகழ்பெற்றுவிட்டாள்.
அந்த ஐந்து வயது சிறுமி இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வைரலானது. அந்த உருக்கமான புகைப்படம் நவம்பர் 7ஆம் தேதி தெலுங்கு செய்தித்தாள் ஒன்றில் "பசியுடன் ஒரு பார்வை" என்ற வாக்கியத்துடன் பிரசுரமானது.
அது உடனே மக்களின் கவனத்தையும் பெற்றது. குழந்தைகள் நல ஆர்வலர்கள் அந்த புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்துவிட்டு, உணவு மற்றும் கல்வி மறுக்கப்படும் மற்றொரு குழந்தை என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் படிக்க:வைரலான சிறுமியின் புகைப்படம் - உண்மையில் நடந்தது என்ன?
250-வது கூட்டத்தொடரை எட்டிய மாநிலங்களவையின் பெருமைகளை நினைவுகூர்ந்த மோதி
2019-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 18) தொடங்கியுள்ள நிலையில், 250-வது அமர்வை எட்டியுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவையின் சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
''250-வது அமர்வை எட்டியுள்ள இந்திய மாநிலங்களவை பெருமை மிக்க எண்ணற்ற தருணங்களை சந்தித்துள்ளது. இந்த அவை பல வரலாற்று சிறப்புமிக்க தருணங்களை சந்தித்துள்ளது. இங்கு வரலாறு நிகழ்த்தப்பட்டுள்ளது'' என்று மோதி தனது உரையில் குறிப்பிட்டார்.
கடந்த 2003-ஆம் ஆண்டில் மாநிலங்களவையின் 200-வது அமர்வில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் வாஜ்பேயி குறிப்பிட்டதை மேற்கோள் காட்டிய நரேந்திர மோதி, ''நாடாளுமன்றத்தின் இரண்டாவது அவையான மாநிலங்களவையை இரண்டாம் நிலையில் உள்ள அவையாக கருதும் தவறை யாரும் செய்யக்கூடாது. இந்தியாவின் வளர்ச்சிக்கு மாநிலங்களவை தொடர்ந்து பங்களித்து வருகிறது'' என்று கூறினார்.
'ஸ்டெம் செல்' தானம் குறித்த விழிப்புணர்வு ஏன் முக்கியம்?
தானத்தில் புதிய தானம், 'ஸ்டெம்செல் தானம்'. இன்றைய சூழலில் இதுவே மிக சிறந்த தானம் என்கிறார் கோவையை சேர்ந்த, இந்தியாவின் உறவுமுறை இல்லாத முதல் பெண் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் (Non-Related, First Female Bone Marrow Donor in India) மாசிலாமணி.
கோவை புறநகர் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் இந்த பெண் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்