You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
250-வது கூட்டத்தொடரை எட்டிய மாநிலங்களவையின் பெருமைகளை நினைவுகூர்ந்த மோதி
2019-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 18) தொடங்கியுள்ள நிலையில், 250-வது அமர்வை எட்டியுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவையின் சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
''250-வது அமர்வை எட்டியுள்ள இந்திய மாநிலங்களவை பெருமை மிக்க எண்ணற்ற தருணங்களை சந்தித்துள்ளது. இந்த அவை பல வரலாற்று சிறப்புமிக்க தருணங்களை சந்தித்துள்ளது. இங்கு வரலாறு நிகழ்த்தப்பட்டுள்ளது'' என்று மோதி தனது உரையில் குறிப்பிட்டார்.
கடந்த 2003-ஆம் ஆண்டில் மாநிலங்களவையின் 200-வது அமர்வில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் வாஜ்பேயி குறிப்பிட்டதை மேற்கோள் காட்டிய நரேந்திர மோதி, ''நாடாளுமன்றத்தின் இரண்டாவது அவையான மாநிலங்களவையை இரண்டாம் நிலையில் உள்ள அவையாக கருதும் தவறை யாரும் செய்யக்கூடாது. இந்தியாவின் வளர்ச்சிக்கு மாநிலங்களவை தொடர்ந்து பங்களித்து வருகிறது'' என்று கூறினார்.
கடந்த மே மாத இறுதியில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு நடந்த கூட்டத்தொடரில் 'முத்தலாக்' தடை மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
இதனை குறிப்பிட்டு பேசிய நரேந்திர மோதி, ''மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறாது என்றே பலரும் நினைத்தனர். ஆனால் இந்த அவையின் முதிர்ச்சி மற்றும் பக்குவத்தால் இந்த சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறியது. இதுபோன்றுதான் 370 சட்டப்பிரிவு மற்றும் ஜிஎஸ்டி போன்ற சட்டப்பிரிவு விஷயங்களிலும் நடந்தது'' என்று கூறினார்.
இந்தியாவின் பன்முகத்தன்மையின் பிரதிநிதியாக மாநிலங்களவை தொடர்ந்து நிலையாக பங்காற்றி வருவதாக பிரதமர் மோதி மேலும் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ''இன்று இரு கட்சிகளை நான் பாராட்ட விரும்புகிறேன். தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதாதளம் ஆகிய இரு கட்சிகளும்தான் அவை. இவ்விரு கட்சிகளும் அவையின் மாண்புகளை எப்போதும் கடைபிடித்துள்ளன. அவர்கள் தங்களின் கருத்துக்களை எடுத்துவைத்த போதும், அவையின் மத்தியில் வந்து விவாதித்ததில்லை. என்னுடைய கட்சி உள்பட மற்ற கட்சிகள் இதனை கற்றுக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- இலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய தமிழர்களை அரவணைப்பாரா? ஒடுக்குவாரா?
- சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்: பதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு
- 'சபரிமலை கோயிலுக்கு நாங்கள் செல்வதை கேரள அரசு எப்படி தடுக்க முடியும்?'
- ஆழமான அவநம்பிக்கையும், அச்சமும் பொருளாதார மந்த நிலைக்கு காரணம்: மன்மோகன் சிங்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்