சபரிமலை கோயிலுக்கு நாங்கள் செல்வதை கேரள அரசு எப்படி தடுக்க முடியும்? த்ருப்தி தேசாய் கேள்வி

    • எழுதியவர், சிங்கி சின்ஹா
    • பதவி, பிபிசி, டெல்லி

நவம்பர் 20ஆம் தேதிக்கு பிறகு, தானும் தன் அமைப்பை சேர்ந்த நான்கு பெண்களும் சபரிமலைக்கு செல்வோம் என்கிறார் 34 வயது செயற்பாட்டாளரான த்ருப்தி தேசாய்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று 2018ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, கோயிலுக்கு செல்வதற்காக பல மணி நேரம் கொச்சி விமான நிலையத்தில் காத்திருந்தார் த்ருப்தி தேசாய். ஆனால், பெரும் போராட்டம் நடந்ததை தொடர்ந்து அவர் திரும்பிச் சென்றார்.

இது தொடர்பான மறுசீராய்வு மனுவில் கடந்த வாரம் தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்தது. இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண் செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

நவம்பர் 16ம் தேதியில் இருந்து, இரண்டு மாதங்களுக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது.

எப்படி தடுத்து நிறுத்த முடியும்?

"கோயிலுக்குள் செல்ல எந்த தடையும் இல்லை. எப்படி எங்களை தடுத்து நிறுத்த முடியும்" என்று கேள்வி எழுப்புகிறார் தேசாய்.

கோயிலுக்குள் நுழைய உச்சநீதிமன்றத்திடம் அனுமதி வாங்குமாறு கேரள அரசாங்கம் கூறுவது தீர்ப்பை அவமதிப்பது போன்றது என்று கூறும் அவர், பக்தர்களையும், செயற்பாட்டாளர்களையும் எவ்வாறு வேறுபடுத்த முடியும்? "நாங்கள் இரண்டுமேதான்" என்று கூறுகிறார்.

ஆனால், இந்த விவகாரத்தில் பல பெண்கள் பல்வேறு விதமான கருத்துகளை கூறுகிறார்கள்.

கொச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஷ்யாமா, "பெண்களின் மத உரிமைகளுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். சபரிமலைக்கு செல்ல வேண்டுமானால், 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று உள்ளது. மாதவிடாய் இருந்தாலும், விரதம் இருக்க வேண்டும். அது சுற்றுலாத்தலம் அல்ல, புனிதத்தலம். பக்தியோடு, யார் வந்தாலும் அவர்களை தடுக்கக்கூடாது. சபரிமலை பெண்களுக்கு எதிரான இடம் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்தது இல்லை. அங்கு எந்த பாகுபாடும் இல்லை. பெண்கள் மட்டுமே செல்லக்கூடிய பல கோயில்களும் கேரளாவில் இருக்கின்றன. உண்மையிலேயே கடவுளை சென்று காண வேண்டும் என்று சிலர் இருக்கிறார்கள். ஆனால், பாலின உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்றும் ஒரு சிலர் கருதுகின்றனர். இந்த சூழலில்தான் இது அரசியலாக்கப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.

சபரிமலை கோயில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டினால் நிர்வாகிக்கப்படுகிறது. இந்த தேவஸ்வம் போர்டு கேரள அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும்.

இந்த விவகாரத்தில் 2018ஆம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு வழங்கிய தீர்ப்பில், பெண்கள் சபரிமலை செல்லத் தடையில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாமா கூடாதா என்ற விவகாரத்துக்கு, சாதி குறித்த ஒரு கோணமும் இருக்கிறது என்கிறார் வழக்குரைஞர் ஷ்யாமா.

அப்பகுதிக்கு பண்டலம் அரசர்கள் வருவதற்கு முன்னர், மலா அராயா, எனப்படும் ஆதிவாசி சமூகம்தான் அக்கோயிலை நிர்வகித்து வந்தது.

மலா அராயா என்ற பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த ஆதிவாசி தம்பதிகளான கந்தனுக்கும் கருத்தம்மாவிற்கும் பிறந்தவர் ஐய்யப்பன் என்று அவர்கள் நம்புகின்றனர். 12ஆம் நூற்றாண்டில் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகவும், 1950ல் இருந்துதான் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு இதனை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது என்பதே அவர்களின் கூற்று.

"அது பழங்குடியினர் பகுதி. அவர்களின் பழக்கவழக்கப்படி பாலினப் பாகுபாடு இருந்ததில்லை" என்கிறார் ஷ்யாமா.

"சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கோயில் அரச பரம்பரையினால் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பழங்குடியின உரிமைகள் பின்பற்றப்படவில்லை. அப்போதில் இருந்து அது பாலின உரிமைகள் என்றில்லாமல் சாதி சண்டையாக மாறியது. தற்போது ஆதிவாசிகள் மீண்டும் தங்களது உரிமையை கோர நினைக்கிறார்கள். கடந்த தீர்ப்பு அது குறித்தும் ஆராய்ந்தது. ஆனால் தற்போது இந்த சண்டை, கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையேயான சர்ச்சையாகி உள்ளது. இடதுசாரி அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது."

சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைந்தால் தீட்டா? என்ன சொல்கிறது மரபு? - அலசல்

சமீபத்திய தீர்ப்பு இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவாக வந்துள்ளதாக செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.

அண்மையில் வந்த அயோத்தி தீர்ப்பை பார்க்கும்போது, ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக அஞ்சும் அம்மினி, அரசியல் ஆதாயங்களுக்காக சபரிமலை விவகாரம் பயன்படுத்தப்படுமோ என்றும் அஞ்சுவதாகவும் கூறுகிறார். அம்மினி கடந்த ஆண்டு சபரிமலை கோயிலுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர்.

ஆனால், சபரிமலைக்கு செல்வதில் உறுதியாக இருக்கிறார் த்ருப்தி தேசாய். நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை என்பதால், தான் செல்ல முடியும் என்று அவர் தெரிவிக்கிறார்.

"என்னை அவர்களால் தடுக்க முடியாது" என்று மீண்டும் உறுதியாக கூறுகிறார் தேசாய்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: